Mamiyaar with Marumagal
Mamiyaar with Marumagal 
வீடு / குடும்பம்

மாமியார் - மருமகள் இடையே உற்சாகம் தரும் 3 உந்து சக்திகள்!

இந்திராணி தங்கவேல்

ருவர் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பதை பார்க்கும் போது, அதை ஒரு வார்த்தை புகழ்ந்து பாராட்டி பேசினால் அவர்கள் வேலையை சற்று விரைவாகவே முடித்துவிட்டு பேசியதற்கு நன்றி கூறுவார்கள். இப்படி இங்கிதமான பேச்சால், செயலால், மௌனத்தால் விளையும் மன ஆறுதலைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

பொழுது போகவில்லை; பொழுது போதவில்லை: காலையில் 5 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, ஆபீஸ் சென்று வந்து சமையலை முடித்து, குழந்தைகளை கவனித்து, பாடம் சொல்லிக்கொடுத்து, வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளை எல்லாம் செய்து விட்டு, தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டிருக்கும் மருமகளிடம், ‘உன் வயதில் இருந்தபோது எனக்கு நேரமே போதவில்லை. உனக்கும் இப்பொழுது நேரம் போதவில்லைதான். நீ வேலை செய்வதைப் பார்த்தால் என் இளவயது ஞாபகம் நினைவுக்கு வருகிறது. நான் எப்படி பம்பரமாக சுழன்றேனோ அதைவிட அதிகமாகவே நீ சுழல்கிறாய்! பின்பு சுகமாய் இருப்பாய்! இப்பொழுது எனக்கு நேரம் போகவே இல்லை; உனக்கோ நேரம் போதவில்லை. இதுதான் தலை முறை இடைவெளி என்பது‘ என்று மாமியார் கூறினால், மருமகள் இன்னும் புத்துணர்ச்சியுடன் அடுத்தடுத்த நாட்களின் வேலைகளை முடிக்க உந்து சக்தியாக இருக்கும்.

குறிப்பறிந்த  செயல்: எப்பொழுதும் ஆறரை மணிக்கெல்லாம் வீட்டிற்குள் நுழையும் மருமகள், அன்று நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் ஆபீஸில் அதிக வேலை இருக்கும் என நினைத்து, பேரக்குழந்தைகளுக்கு மருமகள் வந்து சமைத்து கொடுக்க நேரம் ஆகிவிடும் என்று மாமியாரே மெல்ல எழுந்து குழந்தைகளுக்கு டிபன் செய்து, ஊட்டிவிடும் செயலைப் பார்க்கும் மருமகளுக்கு கண்களில் நீர் பெருகாதா என்ன? ‘சொல்லாத சொல் ஒன்றில்தான் சொல்லக் கிடக்கின்றன எல்லாம்... சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை’ என்பதை உணர வைக்கும் உந்து சக்தி தருணமல்லவோ அது.

மௌனம்: மாமியார் நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அருவெறுப்பின்றி செய்யும் மருமகள்கள் மிகவும் குறைவே. உடல் நிலை தேறியவுடன் அப்படித் தனக்கு அருகில் இருந்து உதவி செய்த மருமகளின் கைகளை நன்றிப் பெருக்கோடு பிடித்துக்கொண்டு, மௌனமாகக் கண்ணீர் விடும் மாமியாரின் அன்பு மருமகள்களுக்கு மிகப் பெரிய உந்து சக்தியே.

‘மாமியாரை மெச்சிய மருமகள் இல்லை. மருமகளை மெச்சிய மாமியார் இல்லை என்பார்கள். அதெல்லாம் அந்தக் காலம். இந்தக் காலத்தில், ‘மாறாதது மாற்றம் மட்டுமே’ என்பதை இரு தரப்பினரும் புரிந்து கொண்டு விட்டதால் இல்லம் இனிமையாக இருக்கிறது. இது ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு வேலை செய்வதற்கு உந்து சக்தியை அளிக்கிறது.

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

SCROLL FOR NEXT