5 Habits to Avoid Stress https://tamil.boldsky.com
வீடு / குடும்பம்

மன அழுத்த பாதிப்பிலிருந்து தப்பிக்க உதவும் 5 பழக்கங்கள்!

க.பிரவீன்குமார்

ன்றைய சூழலில் வேலையிலோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலோ அவசர நிலைகளைக் கையாள்வது மிகவும் வெறுப்பாகவும் சோர்வாகவும் இருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் இயற்கையான முறையில் மன அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது என்பதை அறிந்திருப்பது முக்கியம். அதற்கான வழிகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. நல்ல எண்ணத்தை அமையுங்கள்: எந்த ஒரு சூழ்நிலையும் மனநிலையைப் பாதிக்காது என்ற எண்ணத்தை நம் மனதில் விதைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு சிறு நிகழ்வு கூட நம் மனநிலையை உடைத்து விடும். இதனால் அன்றைய நாள் மிக மோசமாகக் கூட செல்லலாம். அதனால் உங்கள் மனநிலையை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கான முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்.

2. திட்டமிடுங்கள்: எந்த ஒரு செயலையும் வடிவேல் கூறுவது போல், ‘திட்டமிட்டு (Plan பண்ணி) செய்ய வேண்டும்.’ அவ்வாறு திட்டமிட்டுச் செய்யும்பொழுது நீங்கள் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள், உங்களின் நிலை என்ன, உங்கள் இலக்கு எந்தக் கட்டத்தில் உள்ளது என பல்வேறு பதற்றங்களிலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் தப்பிப்பதற்குத் திட்டமிடுதல் ஒரு சரியான வழிமுறையாகும்.

3. நல்ல இசையைக் கேளுங்கள்: நம்மில் பலருக்கும் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பிடிக்காது என்று இருப்போம். ஆனால், இசை பிடிக்காத மனிதர்கள் யாராவது இருப்பார்களா? என்று கேட்டால் சந்தேகம்தான். ஒரு இசை நம்மைத் துள்ளிக் குதித்து ஆட்டம் போடவும் வைக்கும், அதே இசை அறையைப் பூட்டிக்கொண்டு கண்ணீர் மழையைப் பொழியச் செய்யவும் வைக்கும். இத்தகைய ஆற்றல் வாய்ந்த இசையை நாம் கேட்பது மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவற்றைக் குறைப்பதற்கானச் சிறந்த வழியாகும்.

4. இயற்கையோடு நேரத்தைச் செலவிடுங்கள்: நவீனமயமாதல் காரணமாக நாம் தொழில் நுட்பத்தால் சூழப்பட்டுள்ளோம். நாம் இயற்கையிலிருந்து உருவானவர்கள் என்பதை மறந்து, செயற்கையான பொழுதுபோக்குக்கு அடிமையாகிவிட்டோம். இயற்கையில் நேரத்தைச் செலவிடுவது நமது மன மற்றும் இருதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதனால் நீங்கள் ஒரு பூங்காவிலோ அல்லது கடற்கரையிலோ அரை மணி நேரம் செலவிடும்போது அல்லது நடைப்பயணம், தோட்டம், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வெளியில் நேரத்தைச் செலவிடும்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

5. தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள்: இங்கு பிரச்னை இல்லாத நபர்கள் என்று யாரும் இல்லை. அதனால் உங்கள் வாழ்வில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுகிறது எனில், அந்தப் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மன அழுத்தம் இல்லாத நபர்களைப் போல் தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்த மனநிலையால் சவால்களை நேர்மறையான மனநிலையுடன் அணுக முடியும். தடைகளை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகப் பார்க்க வழிவகுக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள இந்தப் பழக்கங்களை உங்கள் வாழ்க்கையில் வழக்கப்படுத்திக் கொண்டால் மன அழுத்தத்திற்கு ஆளாகாத நபராக நீங்களும் மாறலாம்.

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

SCROLL FOR NEXT