மழைக்காலம் வந்துவிட்டால் போதும், கொசுக்களின் தொல்லையும் நம்மை நச்சரிக்க வந்து விடும். கொசுக்களை ஒழிக்க கொசுவத்திச் சுருள், குட் நைட் மற்றும் ஆல் அவுட் போன்ற பல செயற்கை நிவாரணிகள் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும் இவையனைத்தும் கொசுக்களிடம் இருந்து ஓரளவு பாதுகாப்பை நமக்கு அளித்தாலும், இதன் வாசனை நுகரும் போது நமக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். இவற்றைப் பயன்படுத்தினால் குறிப்பாக குழந்தைகளுக்கு மிக எளிதில் சளி பிடித்து விடும். ஆகையால், இயற்கையாக கொசுக்களை விரட்ட என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
செயற்கையான கொசுவிரட்டிகள் உடல்நலனைப் பாதிக்கும் என்பதால், வெளிநாடுகளில் இவை தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் மட்டும் அதிகளவில் விற்பனையாகிறது. இந்த கொசுவிரட்டிகளைப் பயன்படுத்தாமலேயே கொசுக்களை விரட்ட வேண்டுமென்றால், அதற்கு ஒரே தீர்வு நறுமணம் வீசும் செடிகள் தான். இந்தச் செடிகளுக்கு கொசுவிரட்டிச் செடிகள் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அவ்வகையில் லாவெண்டர் செடி, ரோஸ்மேரி செடி, சாமந்திப் பூச்செடி, புதினா மற்றும் சிட்ரோ நெல்லா புல் ஆகியவற்றை வீட்டில் வளர்க்கலாம்.
லாவெண்டர்: குறைந்தளவு தண்ணீரில் வளரும் லாவெண்டர் செடிகள், கொசுக்களை விரட்டும் அற்புதமான செடி. இச்செடியை வளர்க்க அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் தேவைப்படாததால், இச்செடியை மிக எளிதாக வீட்டில் வளர்க்கலாம்.
ரோஸ்மேரி: கொசுவிரட்டியாக செயல்படும் ரோஸ்மேரி, மற்ற பூச்சிகளையும் வீட்டிற்குள் அனுமதிக்காது. இந்தச் செடி அதிக குளிரைத் தாங்காது என்பதால், குளிர்காலங்களில் வீட்டிற்குள் வைத்து வளர்க்கலாம்.
சாமந்திப் பூ: சாமந்திப் பூச்செடியில் இருந்து வீசும் நறுமணம் தனித்தன்மையைக் கொண்டது. இந்த நறுமணத்தை பூச்சிகளும், கொசுக்களும் விரும்பாது. இச்செடிகளைத் தாண்டி கொசுக்கள் வீட்டிற்குள் வராது. ஆகையால் வீட்டில் சாமந்திப் பூச்செடிகளை வளர்த்தால் கொசுக்களை எளிதில் விரட்ட முடியும். நிழலில் வளர்ப்பதால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கும் என்பதால், சூரிய ஒளி படும் இடத்தில் செடிகளை வளர்ப்பது நல்லது.
சிட்ரோ நெல்லா புல்: சிட்ரோ நெல்லா புல் செடிகளின் இலைகளைக் கசக்கினால், எலுமிச்சை மணம் அதிகளவில் வீசும். இதிலிருந்து தயாரிக்கப்படும் சிட்ரோ நெல்லா எண்ணெயை விளக்கேற்றினாலோ அல்லது உடலில் தேய்த்துக் கொண்டாலோ கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
புதினா: புதினா செடியின் ஒரு வகையான ஹார்ஸ் மின்ட் செடியின் மணமானது, சிட்ரோ நெல்லா புல்லினைப் போன்றே இருக்கும். பல்லாண்டுத் தாவரமான இந்தப் புதினாவை ஒருமுறை நட்டு விட்டால், குறைந்தபட்சம் 4 முதல் 5 ஆண்டுகள் வரை கொசுவிரட்டியாக செயல்படும்.
இந்தச் செடிகளைத் தவிர்த்து நமக்கு நன்கு பரிட்சையமான சில செடிகளும் கொசுக்களை விரட்டும். துளசி, வேப்பிலை மற்றும் கிராம்புச் செடி போன்றவையும் வீட்டில் வளர்த்து கொசுக்களை விரட்டலாம்.