depressed person https://www.metropolisindia.com
வீடு / குடும்பம்

‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என நினைப்பவர் மனநிலையை மாற்ற உதவும் 6 வழிகள்!

எஸ்.விஜயலட்சுமி

சிலர் தங்களுக்கு வாழ்வில் சின்ன கஷ்டம் வந்தால் கூட அதை பெரிதாக நினைத்து வருத்தப்படுவார்கள். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆச்சு?’ என்று புலம்புவார்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை, உற்சாகம் தரும் 6 விதமான விஷயங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. சிந்தனையை மாற்றுதல்: முதலில், 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ என்று கேட்பதை நிறுத்துங்கள். இந்த உலகம் பரந்து விரிந்தது. அதில் நீங்கள் ஒரு சிறு துளி. எல்லோருக்கும் வாழ்வில் சங்கடங்கள், சவால்கள், துன்பங்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே, உங்களது துன்பம் மிகச்சிறியது என்று உணருங்கள்.

2. உள்மன விமர்சகருக்கு பதிலடி கொடுங்கள்: 'ஐயோ, நீ மட்டும் இப்படி கஷ்டப்படுறியே’ என்று எப்போதும் உள்ளிருந்து குரல் கொடுக்கும் உங்களது உள் மன விமர்சகருக்கு தக்க பதிலடி கொடுங்கள். 'நிறுத்து! நீ சொல்றது உண்மை அல்ல' என்று மனதிற்குள் உரக்கச் சொல்லுங்கள். 'நான் சாதிக்கப் பிறந்தவர்' என்று தொடர்ந்து சொல்லும்போது அந்த எதிர்மறை எண்ணம் மெல்ல மெல்ல குறைந்து மன உறுதி அதிகரிக்கும்.

3. உங்களது மதிப்பை உணருங்கள்: கடவுள் தந்த இந்த வாழ்க்கை விலைமதிப்பற்றது. நீங்களும் இந்த உலகில் ஒரு பொக்கிஷம் என்பதை உணருங்கள். உங்களது திறமைகள் மற்றும் சாதனைகளை ஒரு பட்டியல் போடுங்கள். அதற்கு முன்னால் நீங்கள் அனுபவிக்கும் சிறு துன்பங்கள் ஒன்றுமே இல்லை என்று தோன்றும். தன்னம்பிக்கையும் உயரும்.

4. பரிபூரணத்துவத்தை விடுங்கள்: இந்த உலகில் யாருமே 100 சதவிகிதம் சரியானவர் அல்ல என்கிற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள சிறு குறைகளுக்காக வருத்தப்படுவதோ, கவலைப்படுவதோ கூடாது. ஒருமுறை தவறவிட்ட வாய்ப்புகளை எண்ணி வருத்தப்படுவது கூடாது. உங்களிடம் உள்ள சிறு குறைகள் மற்றும் தவறுகளை எண்ணி மனம் குமைவது வேண்டாம். தனித்துவமான உங்களது குணமே உங்களை சுவாரசியமாக ஆக்குகிறது என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

5. ரிஸ்க் எடுங்கள்: பாதுகாப்பான வட்டத்திலேயே அமர்ந்து கொண்டு விளையாடுவதில் ஒரு சுவாரஸ்யமும் இருக்காது. உங்கள் முன்னேற்றத்திற்காக சற்றே ரிஸ்க்கான வேலைகள் செய்ய வேண்டுமென்றால் அதை தைரியமாக செய்யவும். கம்போர்ட் சோனை விட்டு வெளியே வந்து உங்களால் செய்ய முடியாது என்று தோன்றும் செயல்களை சற்றே சிரமப்பட்டாவது முடித்து விடுங்கள்.

6. பிறருடன் ஒப்பீடு வேண்டாம்: எப்போதும் உங்களை பிறருடன் ஒப்பிடாதீர்கள். அது மிகப்பெரும் தவறு. சூரியனுடைய தனித்தன்மை வெப்பம் என்றால் நிலவின் தனித்தன்மை குளிர்ச்சி. இரண்டுமே அதன் தனித்துவத்துடன் இயங்குகின்றன. அதுபோலத்தான் நீங்கள். உங்களது இலக்குகள், எண்ணங்கள், முயற்சிகள் எல்லாம் முழுக்க முழுக்க உங்களுடையவை. உங்கள் வாழ்க்கை உங்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதற்குத்தானே தவிர. பிறரை காப்பி அடித்து வாழ்வதற்காக அல்ல. எந்த மலரும் அல்லது மிருகமும் தன்னை பிறவற்றோடு ஒப்பீடு செய்துகொள்வதோ, பொறாமைப்படுவதோ இல்லை. அதேபோல ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவர்தான். பிறருடன் ஒப்பீடு எப்போதும் தேவையில்லை.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT