7 commandments to make your memory shine https://www.ttamil.com
வீடு / குடும்பம்

நினைவாற்றலை மிளிரவைக்கும் 7 கட்டளைகள்!

இந்திராணி தங்கவேல்

ள்ளியில் படிக்கும் குழந்தை பருவத்தில் இருந்து, முதுமை அடையும் வரை அனைவரையும் பாடாய்படுத்துவது மறதிதான். நினைவாற்றலுடன் எப்பொழுதும் திகழ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

1. நாம் எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஒரே பாதையில் போவது, ஒரே இடத்தில் உட்காருவது என்று எல்லாவற்றையும் வழக்கம் போலவே செய்யாமல், அடிக்கடி அந்தந்த இடத்தை மாற்றிப் பார்க்க வேண்டும். இப்படி புதிது புதிதாக செய்யும்போது நம் மூளை சவால்களை சந்திக்கிறது. அப்பொழுது நினைவாற்றல் கூர்மையாக வளருவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.

2. நினைவில் வைத்திருக்க முடியாமல் இருக்கும் விஷயங்களான பால் கணக்கு, மளிகை, பேப்பர், எரிபொருள் எப்பொழுது தீர்ந்தது, வாட்டர் பியூரிஃபையரை எப்பொழுது சுத்தம் செய்ய வேண்டும் என்பது போன்றவற்றை ஒரு நோட்டில் எழுதி வைக்க வேண்டும். இப்படி எழுதி எழுதிப் பார்க்கும்பொழுது மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு ஞாபக சக்தி மேம்படும். அதை அடிக்கடி எடுத்துப் பார்த்தால் மறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆதலால் காலம் தாழ்த்தாமல் இதுபோன்ற வேலைகளை உடனடியாகச் செய்து விடலாம்.

3. முறையாக யோகா செய்வதும், தினமும் 15 நிமிடங்களாவது அமைதியாக அமர்ந்து தியானம் செய்வதும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. மூளையின் ஹிப்போ கேம்பஸ் பகுதியே நினைவாற்றலுக்கு பொறுப்பானது. இது சுருங்கினால் நினைவாற்றல் மங்கும். முதுமையில் கூட இது சுருங்குவதை தடுக்கும் வலிமை யோகாவுக்கு உண்டு. ஆதலால் முறையாக யோகா செய்வது நினைவாற்றல் மிளிர உதவும்.

4. உயர் இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கு ஞாபக சக்தி குறைகிறது. சிந்தனைத் திறனும் குறைவாக இருக்கிறது. மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவு குறைவால் இந்தப் பிரச்னை எழுகிறது. இரத்த அழுத்தம் சீராக இருந்தால் நினைவாற்றல் மேம்படும் என்று கூறப்படுகிறது. ஆதலால் தேவையற்ற விஷயங்களை மனதில் சுமந்து, அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு பிரஷரை ஏற்றிக் கொள்வதை விட, அமைதியாக இருக்கப் பழகிக் கொண்டாலே இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து வெளியில் வரலாம். மூளையும் சிக்கல் இல்லாமல் அதன் வேலையை அழகாகச் செய்யும்.

5. ஏதாவது முக்கியமான தகவலை மனதில் பதிய வைக்கும்போது சத்தமாக அதை சொல்லிப் பார்க்கலாம். மௌனமாக சொல்லும்போதும், படிக்கும்போதும் ஒருமுறை மட்டுமே அது மனதுக்குள் போகும். ஆனால், சத்தமாக சொல்லும்போது நம் காதுகள் வழியே இன்னொரு முறை அது உள்ளே போகிறது. எனவே, அழுத்தமாக அது மனதில் பதியும். ஆதலால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்படாமல் பாடங்களைப் படித்தாலும் சரி, பாடல்களைப் படித்தாலும் சரி சத்தமாகப் படியுங்கள்.

6. மனதில் பதியவைத்த ஏதோ ஒரு விஷயத்தை நினைவுபடுத்தும்போது கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கண்கள் மூடி இருக்கும்போது நம் கவனம் சிதறாமல் தடுக்கப்படுகிறது. இதனால் விரைவில் பதில்கள் நினைவுக்கு வந்துவிடும். அப்பொழுது நடந்த விஷயத்தை அழகாக எடுத்துச் சொல்லலாம். இதனால்தான் வீட்டில் பெரியவர்கள் கண்களை நன்றாக மூடிக் கொண்டு நினைவு படுத்திப்பார் என்கிறார்கள் போலும்.

7. குறுக்கெழுத்துப் போட்டி, சுடோகு போன்றவற்றை எழுதிப் பார்க்கலாம். இதனால் ஞாபகத்திறன் மேம்படும். எதுகை மோனையோடு பேசுவதும் கூட நினைவுத்திறனை கூட்ட வழிவகுக்கும். திருக்குறளை ஒவ்வொரு குறளாக மனப்பாடம் செய்வது சற்று சிரமம். அதையே பாடல்களாக பாடும்போது நமது வலது மூளை தூண்டப்படுகிறது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. பிரச்னைகளுக்கு தீர்வு தேடும் திறனையும் மேம்படுத்துகிறது. ஆதலால் கடினமான எந்த விஷயத்தையும் பாடலாக மாற்றினால் அதை மனதில் பதிய வைப்பது சுலபம். பாடும்போது மூலையில் 'அசிடைல்கோலின்' என்ற வேதிப்பொருள் அதிகம் சுரக்கிறது. இது ஞாபக சக்திக்கு உதவுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக எந்த ஒரு விஷயத்தையும் பேசும்போதும் கேட்கும்போதும் எழுதுதல், படித்தல் என்று எதுவாக இருந்தாலும் அதை உன்னிப்பாக கேட்க வேண்டும். இதனால் இவை ஆழ் மனதில் பதிந்து விடும். பிறகு மறக்கவே மறக்காது. எதையும் முழுமையாக கற்றால் நினைவாற்றல் மிளிரும். ஆதலால், இந்த ஏழு கட்டளைகளையும் பின்பற்றி நினைவாற்றலை மிளிரச் செய்வோம்!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT