ஜப்பானிய மக்கள் நீண்ட ஆயுளுக்கும் சுறுசுறுப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இதற்கு அவர்களது வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக இருக்கின்றன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல்: ஜப்பானிய நகரங்கள் பாதசாரிகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜப்பானியர்கள் பலர் அன்றாட வேலைகளுக்கும், அலுவலகத்திற்கும் நடந்து செல்கின்றனர். பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். ஓய்வுக்காக நடைப்பயிற்சியை அவசியம் செய்கிறார்கள். ஜப்பானில் நகர்ப்புறங்களில் சைக்கிள் மிகவும் பிரபலமான போக்குவரத்து முறை. வேலைக்குச் செல்லவும், கடைகளுக்குச் செல்லவும் கூட அவர்கள் சைக்கிளை உபயோகப்படுத்துகிறார்கள்.
2. பொதுப் போக்குவரத்து: ஜப்பானின் விரிவான பொதுப் போக்குவரத்து அமைப்பு சுறுசுறுப்பான பயணத்தை ஊக்குவிக்கிறது. ரயில்கள் மற்றும் பேருந்துகள் பெரும்பாலும் போக்குவரத்துக்கான முதன்மையான வழிமுறையாக இருப்பதால் மக்கள் தினசரி ஸ்டேஷனுக்கு நடந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பலர் லிஃப்ட் அல்லது எக்ஸ்கலேட்டர்களுக்கு பதிலாக சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் அலுவலகக் கட்டடங்களில் படிக்கட்டுகளில் ஏறிச் செல்கிறார்கள்.
3. தற்காப்பு கலைகள்: ஜூடோ, கராத்தே மற்றும் கெண்டோ போன்ற பாரம்பரிய தற்காப்புக் கலைகள் அங்கே மிகவும் பிரபலம். மக்கள் சுறுசுறுப்பாக இருக்கவும் ஒழுக்கமான வாழ்க்கை வாழவும் பாதுகாப்பு முறைகளுக்கும் இவற்றைக் கடைபிடிக்கிறார்கள்.
4. தோட்டக்கலை: ஜப்பானின் நிலப்பரப்பு, மலைகள், காடுகள் மற்றும் இயற்கை பூங்காக்களால் நிறைந்துள்ளது. நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் கூட தோட்டக்கலையில் ஈடுபடுவதால் உடல் உழைப்பு மற்றும் மன நிம்மதியும் அவர்களுக்குக் கிடைக்கிறது.
5. குழு செயல்பாடுகள்: பேஸ் பால், கால்பந்து அல்லது பூப்பந்து போன்ற குழு விளையாட்டுகளில் பங்கேற்பதால் சமூக உறவுகளைக் கட்டிக் காப்பதுடன் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் வழி வகுக்கிறது. உடல் நலனும் ஆரோக்கியமாக இருக்கிறது.
6. சூடான நீரூற்றுகளுக்குச் செல்வது: இது அவர்களுக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. இயற்கையான ஸ்பாக்களுக்கு செல்வதும், சூடான நீரூற்றுகளில் குளிப்பதும் அவர்களது வாடிக்கை. அவை அவர்களது உடலுக்கு ரிலாக்சேஷனை தருகிறது. சூடான நீர் உடல் உழைப்புக்கு பிறகு தசைகளை நன்றாக தளர்வு அடைய வைக்கிறது.
7. சமச்சீர் உணவு: ஜப்பானிய உணவில் பொதுவாக காய்கறிகள், மீன் மற்றும் புளித்த உணவுகள் நிறைந்துள்ளன. இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அவர்கள் சிறிய கிண்ணங்களில் உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
8. ஆரோக்கியமான எடை பராமரிப்பு: அவர்கள் ஆரோக்கியமான எடையை பராமரிக்கிறார்கள். பணியிடத்தில் கூட உடல் தோரணையில் கவனம் செலுத்துகிறார்கள். நேராக முதுகு வளையாமல் நிமிர்ந்து அமர்ந்து உட்கார்ந்து இருப்பது தொடர்பான சிக்கல்களை தடுக்க உதவுகிறது. நாள் முழுவதும் உடலை ஆற்றலுடன் சுறுசுறுப்பாக இருப்பதை ஊக்குவிக்கிறது.
9. வனக்குளியல்: இவர்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற்கை காடுகளில் நேரத்தை செலவிடுகிறார்கள். இயற்கையான பசுமையான மரங்களைப் பார்ப்பதும் அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வதும் அவர்களது மனதிற்கு இதமாக இருக்கிறது. வசந்தகாலத்தில் பூக்கள் மலர்ந்திருப்பதை ரசித்து பார்ப்பது, இலையுதிர் காலத்தில் கீழே உதிர்ந்து விழும் பழுத்த இலைகளை வேடிக்கை பார்ப்பது போன்ற இயற்கையுடன் ஈடுபடுவதை அவர்கள் விரும்புகிறார்கள்.
சமச்சீர் உணவு, முறையான உடற்பயிற்சி, அளவான உடல் எடை பராமரிப்பு, ஆரோக்கியமான மனம் இவற்றால் ஜப்பானியர்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது.