Vegetables in Pot 
வீடு / குடும்பம்

தோட்டம் அமைக்க இடம் இல்லையா? தொட்டியே போதும் காய்கறி செடிகளை வளர்க்க!

ரா.வ.பாலகிருஷ்ணன்

தொழில்நுட்ப வளர்ச்சியால் செயற்கைக்கு மாறி வரும் இன்றைய காலகட்டத்தில், வீட்டுத் தோட்டம் அமைப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். வீட்டுத் தோட்டத்தில் நாம் வளர்க்கும் செடிகளுக்குத் தேவையான உரங்களை, சமையலறைக் கழிவுகளைப் பயன்படுத்தி நாமே தயாரிக்கலாம். செடிகளின் வளர்ச்சிக்கு அதிகளவில் பங்களிப்பது உரம் தான். ஆகவே வீட்டுத் தோட்டச் செடிகளுக்குத் தேவையான அளவு உரங்களை இட்டால், செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆனால், சில வீடுகளில் தோட்டம் வைக்கின்ற அளவுக்கு போதிய இடவசதி இருக்காது. இருப்பினும் கவலைப்படாமல் தொட்டியில் செடிகளை வளர்க்கலாம்.

தொட்டிகளில் செடிகள் நன்றாக வளருமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. நிலத்தில் வளரும் செடியின் வளர்ச்சியை விட தொட்டியில் வளரும் செடியின் வளர்ச்சி குறைவாகத் தான் இருக்கும். ஆனால், சில காய்கறி செடிகள் தொட்டியிலும் நன்றாக வளரும். அவ்வகையில் தொட்டியில் நன்றாக வளரும் காய்கறி செடிகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

குடைமிளகாய்:

குடைமிளகாய் செடி வளர தொட்டியானது பெரிதாக இருக்க வேண்டும். ஏனென்றால் 5 கேலன் அளவிருக்கும் தொட்டியில் 1 முதல் 2 செடி தான் வளரும்.

லெட்யூஸ்:

தொட்டியில் இருக்கும் மண்ணில் லெட்யூஸ் விதையைப் பரப்பி, போதுமான அளவு தண்ணீரை அவ்வப்போது ஊற்றி வந்தால் இந்தச் செடி நன்றாக வளரும். ஈரப்பதம் நிறைந்த மண்ணில் லெட்யூஸ் எளிதாக வளரும்.

முள்ளங்கி:

மிக எளிதாக தொட்டியில் வளரக் கூடிய காய்கறிகளுள் முள்ளங்கியும் ஒன்று. நல்ல அகன்ற தொட்டி ஒன்றை வாங்கி, அதனுள் முள்ளங்கி விதைகளை தூவி விட்டால் அடுத்த ஒரு மாதத்திலேயே முள்ளங்கி செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆனால் தொட்டியில் இருக்கும் மண் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

தக்காளி:

தக்காளி செடியை தொட்டியில் வளர்க்க நினைத்தால், குட்டையாக வளரக் கூடிய தக்காளி செடியின் விதைகளைத் தூவி எளிதாக வளர்க்கலாம்.

வெங்காயத்தாள்:

5 கேலன் அளவிருக்கும் தொட்டியில் வெங்காயத்தாள் நன்றாக வளரும். இதனை தொடர்ந்து வளர்த்து வந்தால் சூப்பில் கலந்து சாப்பிடலாம்.

பீட்ரூட்:

பீட்ரூட் வகைகளில் சிவப்பு வண்ண பீட்ரூட் தான் தொட்டியில் வேகமாக வளரும். இதனை வளர்க்கும் தொட்டி பெரிதாகவும், 12 அடி ஆழமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். இதனால் பீட்ரூட் எவ்வித பாதிப்பும் இன்றி நன்றாக வளரும்.

சூரிய ஒளி படும் இடத்தில் தொட்டிகள் இருந்தாலே போதும் செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். வீட்டில் மரம் வளர்ப்பவர்கள், மரத்தில் இருந்து உதிரும் இலைச் சருகுகளையும், வீட்டிலேயே சேரும் பச்சைக் கழிவுகளையும் சேகரித்து, அதன் மூலம் இயற்கையான உரத்தைத் தயாரிக்கலாம்.

வீட்டுச் செடிகளுக்கு காலையிலேயே தண்ணீர் ஊற்றி விடுங்கள். அப்போது தான் ஈரப்பதம் நீண்ட நேரத்திற்கு நீடிக்கும். வீட்டுத் தோட்டமும், தொட்டிகளில் வைக்கப்படும் செடிகளும் வீட்டிற்கு அழகையும், மனதிற்கு நிம்மதியையும் அளிப்பதோடு, நஞ்சற்ற இயற்கையான காய்கறிகளும் கிடைக்கும். வீடுகளில் காய்கறி செடிகள் வைப்பதில் தற்போது பலரும் ஆர்வம் காட்டி வருவதால் இந்தக் குறிப்பு பலருக்கும் பயன்படும்.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT