A safe home for all ages https://tenkasilife.com
வீடு / குடும்பம்

எல்லா வயதினருக்கும் பாதுகாப்பான வீடு!

இந்திராணி தங்கவேல்

ன்றைய காலகட்டத்தில் எல்லோருமே வீட்டை மிகவும் அழகாக, நேர்த்தியாக, விதவிதமான வழுவழுப்பான கற்களைக் கொண்டு தரையை அலங்கரித்துக் கட்டுகிறார்கள். அது பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது என்றாலும், எல்லா வயதினரும் தடுக்கி விழும் ஆபத்தையும் கொண்டதாக இருக்கிறது. தரையில் வழுக்கி விழாதவாறு நாம் வீட்டை எப்படிப் பாதுகாக்கலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.

* மாடிப்படிகள், குளியலறை, கழிப்பறைகளில் வழுவழுப்பான டைல்ஸ்களை போடாமல், காலை நன்கு க்ரிப்பாக பிடிக்கும் வண்ணம் உள்ள சொரசொரப்பான டைல்ஸ்களை பதித்தால் எல்லோரும் நடப்பதற்கு வசதியாக இருக்கும். லேசான ஈரம் இருந்தால் கூட வழுக்கி விடும் ஆபத்தும் இதில் குறைவு. குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பாக இருக்கும். சில குழந்தைகள் நள்ளிரவில் தாழ்வான பைப்பை திறந்து விட்டு பாத்ரூமில் விளையாடுவது உண்டு. ஆதலால் அதுபோன்ற கதவுகளை நன்றாக தாழ்ப்பாள் போட்டு வைப்பது நல்லது.

* மாடிப்படிகள் அகலமானதாகவும் உயரம் குறைந்ததாகவும் இருந்தால் அனைவருக்கும் நல்லது. பொருட்களை மாடியில் காயப் போட, எடுத்து வர, ஏறி செல்ல மூட்டு வலி உள்ளவர்களுக்கும் இது சற்று ஆசுவாசத்தை கொடுக்கும். மாடியில் ஏறி இறங்க வேண்டுமே என்ற சலிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும்.

* வாசல், பாத்ரூம் வாஷ்பேசின், மாடிப்படிக்கட்டுகள், வயதானவர்கள் வசிக்கும் அறை, கிச்சன் அனைத்திலும் பளிச்சென்று எரியும் விளக்குகளை பயன்படுத்துவது நல்லது. மங்கலான விளக்குகளை மறந்தும் போடாமல் இருப்பது சிறப்பு. முதியோர்கள் வசிக்கும் அறையில் மங்கலான வெளிச்சம் போட்டு இருப்பதை பல வீடுகளில் பார்த்திருக்கிறோம். பிரகாசமான லைட்டை போட்டு வைத்தால் அவர்கள் மனம் குளிர்வார்கள். இரவில் எழுந்து பாத்ரூம் செல்ல, தண்ணீர் குடிக்க தடுமாற்றத்தை அது ஏற்படுத்தாது.

* அதிகம் நடமாடும் வழிகளில் பர்னிச்சர்களோ, வேறு எதுவும் வீட்டு உபயோகப் பொருட்களோ இடைஞ்சலாக இல்லாதபடி அழகாக வைத்திருக்க வேண்டும். நள்ளிரவில் எழுந்து வரும்போதும், திடீரென மின்சாரம் தடைபடும் போதும் தடுமாறி அடிபடக்கூடும். குழந்தைகள் தவழும்பொழுது இது அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும், பர்னிச்சர்கள் கூட்டி பெருக்குவதற்கு இடைஞ்சல் இல்லாதபடி போட்டுவைப்பது அவசியம்.

* தரை விரிப்புகளும், வாசல் விரிப்புகளும், படுக்கை விரிப்புகளும் வழுக்கும் விதமாகவோ, கால்களில் சிக்கிக் கொள்ளும் விதமாக கிழிந்தும் இருக்கக் கூடாது. குழந்தைகள் கிழிந்த படுக்கை விரிப்புக்குள் கையை விட்டுக் கொண்டு வெளியில் எடுக்கத் தெரியாமல் அழும் சம்பவங்கள் ஏராளம் உண்டு.

* எல்லாவற்றுக்கும் மேலாக பர்னிச்சர்களை வாங்கும்போது கூர்மையான முனைகள் கொண்டவற்றை வாங்கக் கூடாது. அளவான உயரத்தில் சாய்ந்துகொள்ள வசதியாக கிடைக்கும் சோபா மற்றும் நாற்காலிகள் இருப்பது நல்லது. உடைந்த பர்னிச்சர்களை உடனே சரி செய்ய வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும். தூக்கி போட மனம் வரவில்லை என்றால் மாற்று உருவில் தேவையானவற்றை கலைப் பொருளாக செய்து அழகுப்படுத்தி ரசிக்கலாம்.

* உயரமான ஸ்டூல்களை செய்து வைத்துக்கொண்டால், அதில் ஏறி பரணில் இருக்கும் பொருட்களை எடுக்க, வைக்க வசதியாக இருக்கும். இதில் குழந்தைகள் ஏறி இறங்கி விளையாடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அதை அவர்கள் கண்ணில் தெரியாதபடி வைக்க வேண்டும்.

* படுக்கை அறையில் மின் ஸ்விட்ச்சுகளை கைக்கு எட்டும்படி வைத்திருப்பது நல்லதுதான் என்றாலும், குழந்தைகளோடு படுப்பவர்கள் குழந்தைகளின் கைக்கு எட்டாத உயரத்தில் ஸ்விட்ச் போர்டுகளை வைத்திருப்பதுதான் பாதுகாப்பானது.

இதுபோன்ற சிறு திருத்தங்களுடன் வீட்டை பராமரித்தால் எல்லா வயதினருக்கும் ஏற்புடையதாக இருக்கும். அவரவர் வேலையை அவரவர் மற்றவர்களின் உதவி இல்லாமல் செய்து கொள்ளலாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT