Decision making skills 
வீடு / குடும்பம்

சமயோசிதமாக முடிவெடுக்கும் திறமை தரும் நன்மைகள்!

பொ.பாலாஜிகணேஷ்

நாம் எந்த விஷயத்திலும் முடிவெடுக்கும்பொழுது மிகத் திறமையாக செயல்பட வேண்டும். ஆமாம், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை உடனுக்குடன் சாமர்த்தியமாக எடுப்பதுதான் புத்திசாலித்தனம். அப்படி எடுக்கப்படும் முடிவுகள்தான் நமக்கு நன்மை பயக்கும். ஒரு விஷயத்தில் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதை ஒரு குட்டி கதையின் மூலம் அறிவோம்.

ஒரு ஊரில் திருடன் ஒருவன் இருந்தான். அவன் கொஞ்சம் வித்தியாசமான திருடன். அதாவது, உணவுப் பொருட்களை மட்டுமே திருடுவான். மற்றபடி பணம், நகை போன்ற பொருட்களை திருட மாட்டான். அப்படி ஒரு தொழில் தர்மத்தை கடைபிடித்து வந்தான்.

ஒரு நாள் அந்தத் திருடன் ஒரு விவசாயி வீட்டிற்கு திருடச் சென்றான். அங்கே பல கூடைகளில், தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட காய்கள் மற்றும் பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து ஒரு கூடையைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். ஆனால், அவன் எதிர்பாராதவிதமாக அந்த விவசாயிடம் மாட்டிக் கொண்டான். திருடனை அக்கம் பக்கத்தினரின் உதவியுடன், அங்கிருந்த ஒரு கம்பத்தில் கட்டிவைத்தார் அந்த விவாசாயி.

மறுநாள் காலை ஊர் மக்கள் கூடி திருடனுக்கு தண்டனை கொடுக்கத் தயாராகினர். ஊர் பெரியவர் இது குறித்து விசாரித்தார். திருடியது உறுதியானது. அந்தப் பெரியவர் திருடனிடம், “கூடையில் என்ன இருக்கிறது என்று தெரியுமா” என்று கேட்டார். திருடன் “தெரியாது” என்று பதிலளித்தான். கூடை திறந்து பார்க்கப்பட்டபோது, அதில், பத்து கிலோ அளவில் தக்காளி பழங்கள் இருந்தன.

அந்தத் திருடனிடம் பெரியவர், “உனக்கு மூன்று தண்டனைகள் கூறுகிறேன். அதில் உனக்கு விருப்பமான ஒன்றை நீயே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துவது. இரண்டாவது, நூறு சாட்டை அடி வாங்குவது. மூன்றாவது, இந்தக் கூடையில் இருக்கும் தக்காளி பழங்கள் அனைத்தையும் சாப்பிடுவது. இதில் நீ எதை செய்கிறாய்” என்று கேட்டார். உடனே அந்தத் திருடன் “தக்காளி பழங்களை சாப்பிடுகிறேன்” என்று கூறினான்.

அதன்படி கூடையில் இருந்த தக்காளி பழங்களை உற்சாகமாக சாப்பிடத் தொடங்கினான். மூன்று கிலோவுக்கு அதிகமான பழங்களை சாப்பிட்டான். அதற்கு மேல் அவனால் சாப்பிட முடியவில்லை. “ஐயா, மன்னிக்க வேண்டும். என்னால் இவை அனைத்தையும் சாப்பிட முடியாது. எனவே நூறு சாட்டை அடிகளை வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறினான்.

அவனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி சாட்டை அடிகள் வழங்கப்பட்டன. முப்பதுக்கும் மேற்பட்ட அடிகளை தாங்கினான். அதற்குமேல் அவனால் அடி தாங்க முடியவில்லை. எனவே, “நான் ஆயிரம் ரூபாய் அபராதமே செலுத்திவிடுகிறேன்” என்று கூறி, அந்தத் தொகையைக் கொடுத்தான்.

உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும். இல்லை என்றால் வாழ்க்கையில் அதிக துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும். எனவே, நம்மால் செய்ய முடியக் கூடியவற்றையும், சூழ்நிலையையும் கணக்கில் கொண்டு, முடிவெடுக்கக்கூடிய திறமையை வளர்த்துக்கொள்வது முக்கியம் என்பதை உணர்த்துகிறது இந்தக் கதை.

இனிமேலாவது எந்த முடிவு எடுக்கும் முன்னரும் யோசித்து அதேசமயம், விரைவாக சாமர்த்தியமாக முடிவெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இதுவே உங்கள் வாழ்க்கையை உயர்த்துவது மட்டுமல்ல, உங்களின் வாழ்க்கையில் வெற்றியை வசமாக்கும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT