Aloe vera is a remedy for Mud sore https://tamil.oneindia.com
வீடு / குடும்பம்

சேற்றுப் புண்ணுக்கு மருந்தாகும் சோற்றுக்கற்றாழை!

இந்திராணி தங்கவேல்

சோற்றுக்கற்றாழையை வீட்டு வாசற்படிகளின் பக்கங்களில் மண்ணில் வைத்தும். தொட்டிகளில் வைத்தும் வளர்க்கலாம். இது மழை, வெயில் என்று எல்லா காலங்களிலும் பயன் தரும். அதன் முக்கியமான பண்பு என்னவென்றால் எல்லா பருவ சூழ்நிலைகளிலும் வாடாமல் இருப்பதுதான். மேலும், இது வீட்டிற்கு நேர்மறை சக்தியை கொடுப்பது. ஆதலால் இதை மகாலட்சுமியின் அம்சமாக பார்ப்பவர்கள் உண்டு. சோற்றுக்கற்றாழை நாட்டின் பொக்கிஷங்களில் ஒன்று. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை இந்தப் பதிவில் காண்போம்!

தொடர் மழையால் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நீரில் அதிகமாக நடப்பவர்களுக்கு கால்களில் சேற்றுப் புண், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. இது மண் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. முதியோர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்தத் தொற்றுக்கு எளிதில் பாதிக்கப்படுவார்கள். இதனால் மழை நேரங்களில் வெளியே சென்று வந்தவுடன் கால், கைகளை நன்றாகக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். காய்ந்த துண்டை வைத்து துடைத்துவிட்டு கால் விரல்களில் தேங்காய் எண்ணெய் போட வேண்டும். இதன் மூலம் கால்களில் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். தொற்று, சேற்றுப் புண் ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சிலருக்கு மழைக்காலத்திலும் பலருக்கு எப்போதுமே காலில் சேற்றுப்புண் ஏற்படுகிறது. எப்போதும் தண்ணீரில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கு சேற்றுப் புண் ஏற்படுகிறது.

சோற்றுக்கற்றாழையின் பயன்கள்:

கற்றாழை இலை சாறுகளில், 'ஆந்த்ரோ குயினோன்கள், ரெசின்கள், பாலிசர்க்கரைடு மற்றும் ஆலோக்டின் பி என்று பல வேதிப்பொருட்கள் உள்ளன.

இதன் செல்லில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பொருள் உள்ளது. சுத்திகரித்த ஒரு கப் கற்றாழை சாற்றுடன் ஐந்து சிறு வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி, மூன்று கடுக்காயின் தோல் நீக்கிய பொடியை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு பாத்திரத்தில் போட்டு மூடி அரை மணி நேரம் கழித்து தெளிந்த சாற்றை பருகினால் சிறுநீர் கட்டு கரைந்து ஓடும்.

சேற்றுப்புண், வாய்ப்புண் என பல நோய்களுக்கு அருமருந்தாக இருக்கின்றது. இவ்வாறு தோன்றும் புண்களை சரி செய்வதற்கு கற்றாழையை இரண்டாகப் பிளந்து உள்ளே வெந்தயத்தை தூவி காலையில் சாப்பிட வேண்டும்.

இதன் பசை பகுதியை சேற்றுப்புண், சிறுகாயம் சிறிதாக வெட்டுப்பட்டு இடங்களில் தடவ காயம் மாயமாகிவிடும். கிருமிகள் அழியும். முகப்பருக்கள் மீது இதனைத் தடவ, பரு மறையும். வயது கூடுதலின் காரணமாக உடலில் ஏற்படும் பழுப்பு புள்ளிகள் மீது இதனைத் தடவ மங்கலாகும். வறண்ட சருமத்திற்கு ஆரோக்கியம் தரும். வெப்பத் தாக்குதலுக்கு இது சிறந்த நிவாரணி. சுருக்கங்களை நீக்கும்.

சொரியாசிஸ் நோய்க்கு இப்பசை முன்னேற்றம் தரும். இதன் ஜூஸை தலையில் தடவ வறட்சி நீங்கும். சளி பிடிப்பு ஏற்படாமல் இருக்க தலையில் தடவியதும் அலச வேண்டும். இதன் பசையையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து முகத்தில் தேய்த்தால் முகம் பளபளப்பாகும்.

இந்த ஜெல்லை செம்பருத்தி, கருவேப்பிலை சாற்றுடன் சேர்த்து எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வர முடி வளரும். முடி உதிராது.

அல்சர் காரணமாக தோன்றும் புண்களை குணப்படுத்த கற்றாழை சாற்றை தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வீரியம் இதற்கு அதிகம் உள்ளது. முக அழகிற்கு முடி வளர்வதற்கு என்று பல பிரச்னைகளுக்கு கற்றாழை ஓர் வரப்பிரசாதமாகும்.

தினமும் சோற்றுக்கற்றாழையை அளவோடு சாப்பிட்டு வர, கண் பார்வை தெளிவு பெறும். கற்றாழை சாற்றை மோரில் கலந்து தினமும் குடித்து வர உடல் சூடு தணியும்.

சோற்றுக்கற்றாழையின் இள மடலை தோல் சீவி சோற்றை சுத்திகரித்து உடன் சீரகம், கல்கண்டு, மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட குருதியும், சீதமும் குணமாகும்.

சோற்றுக்கற்றாழை தண்டின் தோலை நீக்கிவிட்டு அதன் உள்ளே இருக்கும் நுங்கு போன்ற பகுதியை நன்றாக நீரில் கழுவி, சிறு சிறு துண்டுகளாக செய்து காலையில் வெறும் வயிற்றில் அப்படியே விழுங்கி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால் சிறுநீருடன் இரத்தம் கலந்து போவது நிற்கும்.

இதன் ஜெல்லி பகுதியை எடுத்து அதனுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள், பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்துக் குழைத்து அதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் இளமையாகவும், பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கும்.

இப்படிப் பல்வேறு விதமான அழகுப் பொருட்களுக்காகவும் ,மருத்துவத்திற்காகவும் பயன்படும் சோற்றுக்கற்றாழையை வீடுகளில் வளர்த்து அதன் பயனை முழுவதும் பெறுவோமாக!

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT