Micro Plastics 
வீடு / குடும்பம்

நமக்கே தெரியாமல் நம்மை மெல்ல மெல்ல அழித்து வரும் பேராபத்து - எங்கே தெரியுமா மக்களே? ஷாக் ஆகிடுவீங்க!

ரா.வ.பாலகிருஷ்ணன்

உணவில் பயன்படுத்தப்படும் உப்பு மற்றும் சர்க்கரையில் நுண்ணிய மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம்.

நமது அன்றாட உணவில் சுவையைக் கூட்டுவதற்கு உப்பு மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டும் மிகவும் முக்கியமானது. உணவில் உப்பின் அளவு குறைந்தால் அதன் சுவைக் குறைந்து விடும். 'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்ற பழமொழியின் மூலம் நாம் இதனை உணரலாம். அதே போல் இனிப்பு வகைகளில் பயன்படுத்தப்படும் சர்க்கரையும் அளவாக இருக்க வேண்டும். இந்த இரண்டு பொருள்களும் அதன் அளவில் குறைந்தாலோ அல்லது அதிகமானலோ உடல்நலத்திற்கு ஆபத்து என்கிறோம். ஆனால், இதில் கண்ணுக்குத் தெரியாத வகையிலும் ஓர் ஆபத்து ஒளிந்திருக்கிறதாம்.

உப்பு மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டும் வெண்மை நிறத்தில் இருப்பதால் இதில் ஏதேனும் கலப்படம் இருந்தால் ஓரளவு கண்டுபிடித்து விடலாம். ஆனால் அந்த கலப்பட பொருளே வெண்மையாக இருந்தால்? ஆம் மக்களே! இதில் இருப்பது மிக நுண்ணிய அளவிலான மைக்ரோ பிளாஸ்டிக் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதே நமக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தாக இருக்கிறது. இந்நிலையில், நாம் அதிகளவில் பயன்படுத்தும் உப்பு மற்றும் சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்கனவே நோய்கள் அதிகரித்து வருகின்றன. இப்படி இருக்கையில் இப்போது மீண்டும் ஒரு பேராபத்து நமக்கே தெரியாமல் மெல்ல மெல்ல நம்மை அழித்து வருகிறது.

சமீபத்தில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனமான டாக்ஸிக்ஸ் லிங்க், உப்பு மற்றும் சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எனும் தலைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வு முடிவில் பலரையும் அதிர்ச்சியூட்டும் விதமாக இவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த ஆய்விற்காக 5 வகையான சர்க்கரை மற்றும் 10 வகையான கல் உப்பு, தூள் உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் அனைத்து விதமான சர்க்கரை மற்றும் உப்புகளிலும் 0.1 மி.மீ. முதல் 5 மி.மீ. வரையிலான நுண்ணிய மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பது உறுதியானது.

அதிகபட்சமாக அயோடைஸ்டு உப்பில் தான் பல வண்ணங்களில் மெல்லிய இழைகள் போன்ற வடிவத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருக்கிறது. உலகளவில் மிகப்பெரும் கவலையாக மாறியிருக்கிறது இந்த மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்.

இவை நமது உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. நீர், உணவு மற்றும் காற்றின் மூலம் இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் நமது உடலுக்குள் நுழையும். மனித உடல் உறுப்புகளான இதயம் மற்றும் நுரையீரலிலும் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருக்கிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தாய்ப்பால் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைகளிலும் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மனிதர்கள் சராசரி அளவை விட அதிகமான அளவில் உப்பு மற்றும் சர்க்கரையை உட்கொள்கிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, ஒரு இந்தியர் தினந்தோறும் கிட்டத்தட்ட 10 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 10.98 கிராம் உப்பை உட்கொள்கின்றனர். இது உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள அளவை விட அதிகம். இப்போதே விழித்துக் கொள்ளுங்கள் மக்களே! உப்பு மற்றும் சர்க்கரையைக் குறைவாகப் பயன்படுத்தி, உடல்நலனைக் காத்துக் கொள்ளுங்கள்.

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

SCROLL FOR NEXT