பணம் நம் வாழ்க்கையையும், உணர்ச்சிகளையும், உறவுகளையும் வடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த ரோலர் கோஸ்டரில் வரும் திருப்பங்கள்போல், பணத்தால் நம் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
உணர்ச்சிக் கொந்தளிப்பு:
நண்பர்கள், உறவினர்கள் என்று நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒற்றுமையாக உறவாடி பேசிக்கொண்டிருப்போம். எல்லாம் நன்றாக போகிறது என்று நினைக்கும் போதுதான், ஏதோ ஒரு வழியில் பணத்தால் நமக்கு பிரச்னை உண்டாகத் தொடங்கும். காரணம் நம்முடன் நன்றாக பழகியவர்களுக்குத் திடீரென்று பணம் தேவைப்படும். நாமும் நமக்குத் தெரிந்தவர்தான் என்று கொடுப்போம். இறுதியில் கொடுத்த பணம் நம் கைக்கு வர காலதாமதம் ஆகும். அந்நேரத்தில்தான் பிரச்னை ஆரம்பிக்கும். இது சில சமயங்களில் ஒரு பெரிய பகையைக் கூட உண்டாக்கிவிடும். பணத்தால் பிரச்னையைத் தீர்க்கவும் முடியும், அதே பிரச்னையை ஆரம்பிக்கவும் முடியும்.
அதிகாரப் போட்டிகள்:
சமூகத்தில் யார் பெரியவர் யார் சிறியவர் என்ற போட்டா போட்டியே இந்த பணம் மூலம்தான் ஆரம்பமாகும். இதில் என்ன சுவாரசியம் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் வெளியில் பார்த்துக்கொள்ளும்போது நன்றாக பேசிக்கொள்வார்கள். ஆனால், அவர்கள் மனதிற்கும் சுற்றி இருப்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த இருவருக்கு இடையே நடக்கும் அதிகார போட்டி.
முதலில் யார் பெரிய வீடு வைத்திருக்கிறார், யாரிடம் நிறைய நிலம் சொத்துக்கள் இருக்கிறது, கோயில் திருவிழா வந்துவிட்டால் அதில் யார் அதிக நன்கொடை கொடுக்கிறார்கள் போன்ற விஷயங்களில்கூட போலியான சிரிப்புடன் இந்தப் பணத்தை வைத்து போட்டிகள் போய்க்கொண்டிருக்கின்றன.
வாழும் முறை:
மனிதன் பிறந்தான், வாழ்வதற்காக உணவைத் தேடினான், பின் அவனே உணவைத் தயாரித்து வாழத் தொடங்கினான். இப்படி உயிர் வாழ்வதற்கு முதன்மையான ஒன்றே நாம் உண்ணும் உணவுதான். ஆனால், இன்றைய காலகட்டத்தில் உண்ண உணவு மட்டும் பத்தாது, அதன்கூடவே சொகுசான வாழ்க்கை, கார், பங்களா என்று இருந்தால்தான் வாழ முடியும் என்ற நிலை வந்துவிட்டது. இதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதிப்பதற்காக இன்றைய மனிதர்கள் இரவும், பகலும் பாராமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அனைத்திற்கும் தேவை பணம்!
நிதி நெருக்கடி:
தெரிந்தோ தெரியாமலோ பல ரசீதுகள் (பில்கள்) குவிகின்றன, கிரெடிட் கார்டு துயரங்கள் மற்றும் தூக்கமில்லாத இரவுகள் என நிதி சார்ந்த மன அழுத்தங்கள் இன்று பலருக்கும் இருக்கின்றன. இறுதியில் எதற்காக வாழ்கிறோம் என்ற நிலைக்கே வந்துவிடுவோம். அதாவது ‘வாழ்வதற்காக சம்பாதிக்கிறோமா இல்லை சம்பாதிப்பதற்காக வாழ்கிறோமோ’ என்ற கேள்விகள் இன்று பலரின் மனதில் எழும்.
சம்பாதிப்பது என்பது அடிப்படையான ஒன்று, இன்றைய நவீன உலகத்தில் நானும் ஒரு 6 அறிவு பெற்ற மனிதன்தான் என்று இந்த உலகிற்கு உணர்த்துவதற்கு பணம்தான் நம்மிடம் இருக்கும் ஒரு பெரிய ஆயுதமே. ஆனால் அதுக்காக அதுதான் வாழ்க்கை. அதைத் தாண்டி ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு வந்து விடக்கூடாது. நம்முடைய தேவை என்னவென்று புரிந்துகொண்டு, அதற்கேற்ற வாழ்க்கையை வாழப் பழகுங்கள்.