ஒருவர் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பதைப் யாராவது பார்த்தால், ’இவருக்கு ஏதோ ஆகிவிட்டது’ என்றுதான் நினைப்பார்கள். ஆனால், சில சமயங்களில், ‘வீட்டு சாவியை எங்க வெச்சேன்? ஐயையோ, ஆஃபிசுக்கு டைம் ஆயிடுச்சே’ என்பது போன்ற சின்னச் சின்ன வாக்கியங்களை ஒருவர் தனக்குத் தானே சொல்லிக் கொள்வது வழக்கம்தானே? பொதுவாக, எல்லோருமே மனதிற்குள் பேசிக்கொள்ளும் வழக்கமுடையவராக இருப்பார்கள். உளவியல் இதை, ‘மோட்டார் கமாண்ட்’ என்று சொல்கிறது. நாம் என்ன பேச வேண்டும் என்பதை மனதிற்குள் வாக்கியங்களாக சொல்லிப் பார்க்கிறோம்.
தனக்குத் தானே பேசிக்கொள்வதன் நன்மைகள்:
மனப்பாடம்: பூஜை செய்யும் ஒருவர் ஸ்லோகங்களை சத்தமாக சொல்கிறார். அடிக்கடி அதைக் கேட்கும் மற்றவர்களுக்கும் அவை மனப்பாடம் ஆகிவிடும். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வாய்விட்டு சத்தமாகப் படிக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அது எளிதில் மனப்பாடம் ஆகிறது.
கவனக்கூர்மை: தனக்குத் தானே பேசிக்கொள்வது ஒருவருடைய கவனக்கூர்மையை அதிகரிக்கிறது. கவனச்சிதறலை தடுக்கிறது. தாங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்களோ அதிலேயே முழு கவனத்தையும் வைக்க உதவுகிறது. அதனால் அந்த வேலையை அவரால் சிறப்பாக செய்ய முடிகிறது. உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.
தன்னம்பிக்கை அதிகரிக்கும்: தனக்குத் தானே பேசிக்கொள்வதன் மூலம் ஒருவரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஏதாவது ஒரு காரியத்தில் அவர்களுக்கு பயம் ஏற்பட்டால் ‘பயப்படாத, சரியாகிடும்’ என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொள்வதும் உண்டு. ஒருவர் தன்னை இன்னொருவராக பாவித்து பேசும்போது அவருடைய மன உறுதியும் அதிகரிக்கும். ஒரு திரைப்படத்தில் ‘என்னமோ போடா மாதவா! நீ மட்டும் எப்படிடா இவ்வளவு அழகா இருக்க’ என்று ஜனகராஜ் சொல்லுவது அவருடைய அதிகரித்த தன்னம்பிக்கையின் அடையாளம்.
அமைதி + தைரியம்: தன்னை இன்னொருவராக நினைத்து, ‘மணி, இதை நீ சூப்பரா ஹாண்டில் பண்ணுவ’ என்று சொல்லும் போது அவருடைய தைரியம் அதிகரிக்கிறது. குழப்பமாக இருக்கும் மனதிற்கு அமைதி கிடைக்கிறது. எண்ணங்களை ஒழுங்கமைக்க உதவும். சிறந்த தீர்வுகளுக்கும் வழிவகுக்கும்.
உணர்ச்சிக் கட்டுப்பாடு: நேர்மறையான சுய பேச்சு ஊக்கத்தை வழங்குவதன் மூலம் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கும். தெளிவாக சிந்திக்க உதவும்.
ஆறுதல் + திருப்தி: கடினமான மன உணர்வுகளை வெளிப்படுத்த சுய பேச்சு உதவுகிறது. ஒருவர் தன்னுடைய சோகங்களையும் துன்பங்களையும் மனதிற்குள்ளேயே போட்டு வைத்து அழுத்திக் கொள்ளாமல் ஒரு நல்ல நண்பரிடமும் அல்லது உறவினரிடமோ சொல்ல வேண்டும். அப்படி யாரும் இல்லாத பட்சத்தில் தனக்குத் தானே பேசிக் கொள்வது அவருக்கு எல்லையற்ற ஆறுதலையும் திருப்தியையும் அளிக்கிறது.
எதிர்மறை சுய பேச்சு வேண்டாம்: அதேசமயம் எதிர்மறையாக ஒருவர் சுய பேச்சுக்களில் ஈடுபடக் கூடாது. ‘நீ எதுக்குமே லாயக்கே இல்ல; உன்னால எதுவும் முடியாது’ என்பது போன்ற சுய பேச்சுக்கள் கூடாது. ஆனால், ஒரு நபர் எப்போதுமே தனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயின் அறிகுறி. அவ்வப்போது அல்லது அரிதாகப் பேசுவதில் தவறில்லை.