ரோஜா மலரை பறிக்க வேண்டும் என்றால் முட்கள் மீது கைகள் படத்தான் செய்யும். முட்கள் கீறுகிறதே என்று பயந்தால் ரோஜா மலரை கண்களால் மட்டுமே பார்க்கலாமே அன்றி, கைகளால் தொட முடியாது. எண்ணங்கள் முட்களாக மாறுவதும் மலர்களாக மாறுவதும் நம் கையில்தான் இருக்கிறது. ரோஜா செடியில் முட்கள் அதிகமாகவும் மலர்கள் குறைவாகவும்தான் இருக்கும். எந்த ரோஜா செடியும் முட்களுக்காக விரும்பப்படுவதில்லை. மாறாக, ரோஜா மலர்கள்தான் விரும்பப்படுகின்றன.
நம்முடைய வாழ்க்கையும் அப்படியே. நம்மிடம் எதிர்மறை சிந்தனைகளும் எண்ணங்களும் இருக்கலாம். ஆனால், நாம் பிறரால் விரும்பப்பட வேண்டுமென்றால் அது நம்முடைய நேர்மறை எண்ணங்கள் என்ற மலர்களால் மட்டுமே சாத்தியமாகும். ரோஜா செடியால் தன்னிடமுள்ள முட்களை மலர்களாய் மாற்ற முடியாது. ஆனால், நம்முடைய எதிர்மறை சிந்தனைகளாகிய முட்களை நேர்மறை சிந்தனைகளாகிய மலர்களாய் உருவாக்க முடியும்.
சிந்தனை இயங்கும் வரையே முன்னேற்றம்:
ஓடுகின்ற நீரில் உயிரிருக்கும். புதுமையும், புதுப்பொலிவும் இருக்கும். நமக்கும் இதே நிலைதான். இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் நமக்குள்ளும் உயிரோட்டம் இருக்கும். நம்முடைய இயக்கத்தை நிறுத்திப் பார்க்கையில் நம் மதிப்பு மங்கிப் போகும்.
உடலின் இயக்கம் தினமும் நடைபெறுகிறது. ஆனால், உள்ளத்தின் இயக்கம் பலருக்கும் தேங்கிப் கிடக்கிறது. மனதின் இயக்கம் தடைபட்டால் நம் வாழ்வில் வளமும் வசந்தமும் குன்றிப் போகும். உடலில் வளர்கிறவர்களுள் பலர், மனதில் வளர்வதில்லை. உடலால் முப்பது வயது ஆனவர்கள் கூட உள்ளத்தால் முதிர்ச்சி பெறாமல் இன்னும் ஐந்து வயது குழந்தையைப் போல் அடம் பிடித்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது முடியாத காரியம் ஆகும்.