Console 
வீடு / குடும்பம்

ஆறுதல் சொல்லப் போறீங்களா? எப்படி சொல்லணும்னு தெரியுமா?

வித்யா குருராஜன்

மனித இனத்தின் இயல்புகளில் ஒன்று புலம்புதல். ஒருமுறையேனும் ஒருவரிடமேனும் தன் பிரச்சினைகளைப் பற்றியோ தோல்விகளைப் பற்றியோ மனக்குழப்பங்களைப் பற்றியோ பயங்களைப் பற்றியோ புலம்பாத நபர் புவிதனில் உண்டா? எக்காலத்திலும் இல்லை.

'Venting out' என்பது ‌நம் மனநலம் பேண முக்கியமானதாகும். நம் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் நம் உள்ளுணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு மனபாரங்களை இறக்கி வைத்தல் அவசியமான ஒன்று. 

அப்படிப்பட்ட நம்பிக்கைக்குரிய நபராக நம்மை ஒருவர் தேர்ந்தெடுத்து அவரை அழுத்திக்கொண்டிருக்கும் விஷயங்களை நம்மோடு பகிர முன்வந்தால் அது உன்னதமானதல்லவா! அப்படியான இடத்தில் உங்களை வைத்து உங்களிடம் எவரேனும் புலம்பினால் அவரை எப்படி சமாதானம் செய்வது? எப்படி ஆறுதல் சொல்லுவது? என்று உங்களுக்கு உண்மையில் தெரிந்துள்ளதா? இக்கட்டுரையை வாசித்து புரிந்துகொள்ளுங்கள்‌.

“ஆறுதல் சொல்றது தானே.. இதென்ன பெரிய விஷயமா?” என்று நினைக்கிறீர்களா.. ஆமாம். இது உண்மையில் பெரிய விஷயம் தான். இதில் நிறைய நுணுக்கங்கள் உள்ளன. காலம்காலமாக ஆறுதல் என்கிற பெயரில் காயங்களை இன்னும் சொரிந்துவிடும் வேலை தான் நடக்கிறது.

நம்மிடம் தன் மனதின் பக்கங்களை வாசித்துக் காட்டும் நபருக்கு எப்படி ஆறுதல் சொல்ல வேண்டும் என்பதற்கு முன்னால் எப்படி ஆறுதல் சொல்லக்கூடாது என்று தெரிந்து கொள்ளவோமா?

  • 'உன் மேல தான் தப்பு'  

உங்களிடம் ஒரு பிரச்சினை பற்றியோ தோல்வியைப் பற்றியோ ஒருவர் புலம்பும் போது, “இந்த பிரச்சினைக்கும் தோல்விக்கும் நீ செய்த இவையெல்லாம் தான் காரணம்” என்று இயல்பாய் நீங்கள் பட்டியலிட்டுச் சொல்லிவிடுவீர்கள். உங்களிடம் ஆறுதல் தேடி‌ வந்திருக்கும் நபருக்கு இது நிச்சயம் ஆறுதல் தராது. மாறாக அவரை இன்னும்‌ வேதனைப்படுத்தும். 

  • அறிவுரைகள் ஆறுதல் அன்று 

புலம்பும் நபரை இடைமறித்துப் பேசாதீர்கள். அதே போன்ற பிரச்சினையை நீங்கள்  முன்னமே கையாண்டிருக்கலாம். அந்த வகையில் இயல்பாக நீங்கள் அறிவுரை கூற ஆரம்பிப்பீர்கள். அது ஆறுதல் தேடி உங்கள் முன் அமர்ந்திருக்கும் நபருக்கு எவ்விதத்திலும் உதவாது. அவரை இன்னும் கஷ்டம்தான்படுத்தும்.

  • எதிர்மறை பேச்சுகள் வேண்டாம்

உதாரணமாக தனக்கு வந்திருக்கும் ஒரு நோய் பற்றிய பயத்தை உங்களோடு ஒருவர் பகிரும் போது “எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கூட இதே நோய் வந்து தான் இறந்து போனாரு” என்று சொன்னீர்களானால் ஆறுதல் தேடி உங்களிடம் வந்திருக்கும் நபரை கலவரப்படுத்துவது அதை விட வேறு ஒன்றும் இருக்காது. ஆறுதல் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. சிறிய அளவுக்குக்கூட எதிர்மறையாக எதுவும் சொல்லிவிடாதீர்கள். 

  • தீர்வு சொல்லாதீர்கள்

உங்களிடம் ஆறுதல் தேடி வந்துவிட்டார் என்பதற்காக வழிகாட்டியாகவோ நீதிபதியாகவோ மாறி ஐடியாக்களை வாரி வழங்க ஆரம்பித்துவிடாதீர்கள். அவர்கள் எதிர்பார்ப்பது உங்கள் காதுகளைத்தான். தீர்வுகளை அன்று.

  • உடல் மொழிகள்

வேலை செய்துகொண்டோ அலைபேசியை நோண்டிக்கொண்டோ டிவி பார்த்துக்கொண்டோ புலம்புபவர்கள் முன் அமராதீர்கள். உங்களிடம் பகிர்வதால் ஆறுதல் கிடைக்குமென்று நம்பி வந்திருப்பவருக்கு மதிப்பளிக்க வேண்டியது முக்கியம். உங்களின் அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டுப் புலம்புபவருக்கு உங்கள் செவிகளையும் கவனத்தையும் நேரத்தையும் நீங்கள் கொடுத்தீர்களேயானால் அதுவே அவருக்குப் பெரிய ஆறுதல் அளிக்கும்.

  • “இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?”

ஆண்டாண்டு காலமாக ஆறுதல் வசனமாக நம்பப்பட்டு வரும் இந்த வசனம் உண்மையில் மிகவும் காயப்படுத்த வல்லது என்று சொன்னால் ஏற்பீர்களா? “இவளோ வருத்தப்படற அளவுக்கு இது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை. இதைவிட மோசமான பிரச்சனை எல்லாம் இருக்கு. இதுக்கே இவ்ளோ துவண்டு போனா அந்த பிரச்சனைக்கெல்லாம் என்ன பண்ணுவ?”, “நீ ஓவரா ரியாக்ட் பண்ற”, “தேவையில்லாம புலம்பிக்கிட்டிருக்க” இது போன்று நாம் ஆறுதல் சொல்லவே கூடாது என்கிறது மனவியல் மருத்துவம்.

ஆறுதல் வேண்டுபவரின் மனவழுச்சிகளையும் உணர்வுகளையும் அனுபவங்களையும் நீங்கள் துளியும் கருத்தில் கொள்ளவில்லை புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் இவ்வகை ஆறுதல் வசனங்கள் உணர்த்துகின்றன என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அதனால் உங்களிடம் ஆறுதல் தேடுபவரிடம் இப்படி எல்லாம் சொல்வதைத் தவிர்த்து விடுங்கள்.

சரி அப்படி என்றால் அந்நபருக்கு என்னதான் ஆறுதல் சொல்வது என்கிறீர்களா.. அதையும் தெரிந்து கொள்வோம். 

  • லிஸனிங் தான் அனேக நேரங்களில் பெரிய ஆறுதலாக இருக்கும். புலம்புபவருக்கு உங்களின் செவிகளை முழுமையாக கொடுத்து விடுங்கள். ஐட்ஜ் செய்யாமல், குறைத்துப் பேசாமல், அறிவுரை கூறாமல் தீர்வுகள் சொல்லாமல் ஐஸ்ட் லிஸன்.

  • அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த ஊக்குவியுங்கள். இது அவர்களை இன்னும் அதிகம் காயப்படுத்துமோ என்று யோசிக்க வேண்டாம். அடக்கி வைத்திருக்கும் உணர்வுகளை வெளியில் கொட்டிவிட்டால்தான்  பாரம் குறையும். அவர்கள் அழுத்தமாக பிடிவாதமாக இருந்தால் சில தூண்டுதல் கேள்விகள் மூலம் அவர்களின் உணர்ச்சிகளை வெளிக்கொணர முயற்சி செய்யுங்கள். அழ வேண்டும் என்கிறார்களா, கோபப்பட்டு கத்த வேண்டும் என்கிறார்களா செய்துவிடட்டும். அது அவர்களை ஆறுதல்படுத்தும்.

  • அவர்களின் உணர்வுகளை அங்கீகரியுங்கள். “இது பெரிய பிரச்சனை தான்”, “நீ புலம்புவது நியாயம் தான்”, “உன் பயங்கள் சரி தான்”, “நீ கோபப்படுறது கரெக்ட் தான்”, “நிச்சியம் இது உனக்கு வருத்தமா தான் இருந்திருக்கும்” என்பது போன்ற அங்கீகரிக்கும் வசனங்கள் அவர்களுக்குப் பெரிய ஆறுதலாக இருக்கும். “இதெல்லாம் நீ சமாளிக்கறது பெரிய விஷயம்”, “என்கிட்ட நீ பகிர்ந்துகிட்டது பத்தி சந்தோஷம்”, “எப்ப வேணுமின்னாலும் நீ என்கிட்ட பகிர்ந்துக்க வரலாம்”, போன்ற நேர்மறை பேச்சுக்கள் ஆறுதல் தேடுபவருக்கு அதை நிச்சியம் அளிக்கும்.

  • இப்படி இப்படியெல்லாம் செய் என்று நேரடியாக சொல்லாமல் “அடுத்து என்ன செய்யலாமின்னு இருக்க?” “இந்த இக்கட்டை சமாளிக்க ஏதாவது வழி யோசிச்சு வச்சுருக்கியா?” போன்ற வினாக்கள் கேட்டு தீர்வைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டுவது 'ஆறுதல் படுத்துதல்' என்ற செயலின் கடைசி படியாக அமைத்துவிட மறந்துவிடாதீர்கள். 

சரியாக ஆறுதல் சொல்லிட அட்வான்ஸ் வாழ்த்துகள்..

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT