Divorces... 
வீடு / குடும்பம்

முடிவை எடுக்கும் முன் முயற்சிகள் முக்கியம்! அதிகரிக்கும் விவாகரத்துகள்!

கல்கி டெஸ்க்

-மரிய சாரா

முன்பெல்லாம் திருமணங்கள் பெரும்பாலும் உறவு வட்டத்திற்குள்ளாகவே நடக்கும். உறவுகளில் மணம்முடிக்க மணமகன் அல்லது மணமகள் கிடைக்கவில்லை என்றால்தான் வெளியில் தேடுவர். திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்னைகள் பெரிதாக வெளியில் தெரிந்ததில்லை.

அப்படி பெரிதாக வந்தாலும் அதை உறவுகள் ஒன்றுசேர்ந்து தீர்த்துவைத்து ஒன்றாக வாழவைப்பர். அப்போதெல்லாம் adjustment நிறையவே இருந்தது என்றுகூட சொல்லலாம். சமயங்களில் சுய மதிப்பை இழந்தும் உறவைப் பிரியாமல் பார்த்துக்கொண்ட கணவன் மனைவியர்தான் அதிகம். அப்படி வாழவேண்டியது கட்டாயம் இல்லை என்றாலும் அப்போதைய நிலை அதுதான்.

பிள்ளைகளுக்காக, சமுதாயத்திற்காக, நான்கு விதமாக பேசும் அந்த நான்கு பேருக்காக என எப்போதும் தனக்காக யோசிக்காமல் தனது வாழ்வை மற்றவருக்காக யோசித்து வாழ்ந்தனர் என்றுகூடச் சொல்லலாம். ஆனால், இப்போதெல்லாம் விவாகரத்து என்பது நாம் அதிகமாகப் பார்க்க முடிகிறது. 

 காதல் திருமணங்கள், live-in வாழ்க்கை அதிகரித்துள்ளது. கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். சகிக்க, விட்டுக்கொடுக்க, மன்னிக்க இப்படி அனைத்திற்கும் ஒரு அளவுகோல் உண்டு என்பதை அவர்கள் யோசிக்கின்றனர்.

 அடுத்தவர் மீது அக்கறை காட்டுவதைவிட, அவர் அவர் மீது அக்கறையும் மதிப்பும் வைத்திருப்பது மிக முக்கியம் என உணர்கின்றனர். வருடக்கணக்கில் ஒன்றாய் வாழ்ந்து, உறவை பலப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டும் பயனில்லை எனும் நிலையில் சிலர் பிரிகின்றனர். ஆனால், சிலர் மிகச் சிறிய விஷயங்களைக் கூடச் சகித்துக்கொள்ள முடியாமல், சரிசெய்யவும் முயலாமலே பிரிந்துவிட முடிவெடுக்கின்றனர்.

மிக எளிதான 5 வழிகளைப் பின்பற்றினாலே விவாகரத்துகள் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.

1. 100% Perfection என்பது யாருக்கும் சாத்தியமில்லை என்பதை உணர வேண்டும். நிறைகளில் மனமகிழ்வுடன் இருக்க வேண்டும். அதேபோல் குறைகளில் அவற்றைச் சரி செய்ய முயலவேண்டும். அப்படி கணவனோ மனைவியோ முயலும்போது, அடுத்தவர் அதைப் புரிந்துகொண்டு, ஒத்துழைத்து, தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

 2. இப்போதெல்லாம் முன்புபோல் இல்லை. நிச்சயிக்கப் பட்ட திருமணம் என்றாலும், மணமகனும் மணமகளும் பேசி பழகி புரிந்துகொள்ள தடைகள் பெரிதாக இருப்பதில்லை. ஆதலால், தேவையற்ற விஷயங்களில் அந்த நேரத்தை விரையம் செய்வதைவிட இருவரும் இயன்றவரை ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள பொன்னான நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

3. திருமணத்திற்கு முன், pre-wedding photoshoot, post-wedding photoshoot, destination வெட்டிங் என்றெல்லாம் அதிகக் கவனம் செலுத்தும் தம்பதியர் திருமணத்திற்கான முன் தயாரிப்பாக நல்ல counselling எடுத்துக்கொள்வது நல்லது. counselling பிரச்னை வந்த பிறகுதான் என்பது இல்லை. திருமண வாழ்க்கை பற்றிய புரிதலுக்காகவும் எடுத்துக்கொள்ளலாம்.

 4. திருமணத்திற்குப் பிறகு வரும் பிரச்னைகளுக்குக் கூட, யார் யாரிடமோ புலம்பி தீர்க்கக் கூடாது. அப்படிச் செய்தால் அடுத்தவர் தவறான வழிகாட்டுதலைக் கொடுக்க நேரிடும். அப்போதும் ஒரு நல்ல உளவியலாளரிடம் ஆலோசனைகள் பெறுவது மிக நல்லது.

 5. பிடிக்காத நபருடன் வெறுப்புகளைச் சுமந்து வாழ அவசியம் இல்லைதான். யாருக்காகவும் சகிக்கத் தேவை இல்லைதான். ஆனால், அந்த முடிவை எடுக்கும் முன் முயற்சிகள் செய்ததை உறுதி செய்துகொள்ள வேண்டும். எதையும் சரி செய்துகொள்ள வாய்ப்புகள் வேண்டும் அல்லவா? வாய்ப்புகள் கிடைத்தும் மாற்றம் இல்லையெனில் தாராளமாகப் பிரியலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT