தூக்கத்தில் தங்களை அறியாமல் சிறுநீர் கழிக்கும் பழக்கம் (Nocturnal Enuresis) இன்றைய குழந்தைகளிடம் அதிகரித்து வருகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் குறைவாக இருப்பது ஒரு காரணம் என்றாலும் பெற்றோர்களின் கவனக்குறைவும் இந்த பிரச்னைக்கு காரணமாகிறது.
பல்லை எப்படித் தேய்க்க வேண்டும், உணவை எப்படி சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தும் நாம், இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுத் தர தவறி விடுகிறோம்.
பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை அதிகம் இருக்கிறது. அதிகபட்சமாக ஏழு வயதுக்குள் இந்த பிரச்னை தானாகவே சரியாகி விடும். இல்லையெனில், மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. இதற்காக பிள்ளைகளிடம் குற்ற உணர்வை ஏற்படுத்தாதீர்கள். இது பிரச்னையை நீடிக்கவே செய்யும்.
குழந்தைகள் படுக்கையை நனைப்பதற்கான காரணங்கள்:
1. படுக்க செல்வதற்கு முன்பு அதிகம் தண்ணீர், பால் போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது ஒரு காரணம்.
2. கொழுப்புச் சத்து மிகுந்த ஜங்க் ஃபுட்களை எடுத்துக் கொள்வது. நார்ச்சத்து மிகவும் குறைந்த இந்த உணவுகளால் அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதும், குடலில் இறுகிய மலம், சிறுநீர்ப்பையை அழுத்தி இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்க வைக்கிறது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
3. குழந்தை பருவத்தில் பெற்றோர் இருவருக்கும் இந்த பிரச்னை இருந்திருந்தால் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் இது ஏற்படும் வாய்ப்பு அதிகம். 7 வயது வரை தொடரும் இந்தப் பிரச்னையை ‘பிரைமரி எனுரெசிஸ்’ (Primary enuresis) என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
4. சிறுநீர்ப்பை நிரம்பி, சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வந்ததும் மூளைக்கு சிக்னல் அனுப்பப்படும். உடனே குழந்தைகள் சிறுநீர் கழித்து விடுவார்கள். அரிதாக சில குழந்தைகள் ஆழ்ந்த தூக்கம் காரணமாக தூக்க கலக்கத்தில் இதை உணராமல் படுக்கையில் சிறுநீர் கழிப்பதுண்டு.
தீர்வுகள்:
குழந்தைகளை இரவில் சிறுநீர் கழித்து விட்டு வந்து தூங்கப் பழக்கப்படுத்த வேண்டும். தூங்குவதற்கு முன்பு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே திரவ உணவுகளை கொடுப்பதை நிறுத்தி விடுதல் நல்லது.
செல்போனில் குறிப்பிட்ட இடைவெளியில் அலாரம் வைத்துக் கொண்டு குழந்தைகளை எழுப்பி சிறுநீர் கழிக்க பழக்கப்படுத்தலாம். சில குழந்தைகளை இப்படிப் பழக்கப்படுத்துவதன் மூலம் படுக்கை நனைப்பதை நிறுத்தி விடுவார்கள். ஆனால், சில வருடங்கள் கழித்து திடீரென்று மீண்டும் படுக்கையை நனைக்க ஆரம்பித்தால் அதற்கு செகண்டரி எனுரெசிஸ் (Secondary enuresis) என்று பெயர். இதற்கு மனம் சார்ந்த பிரச்னைதான் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதிக கண்டிப்பு காட்டுவதும், பாடச்சுமை, தேர்வு பயம், இரவில் பயமுறுத்தும் படங்களைப் பார்க்கும் பழக்கம் அல்லது வீட்டில் பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வது போன்ற காரணங்களால் குழந்தைகளின் மனதில் பயத்துடன் கூடிய மன அழுத்தம் அதிகரித்து படுக்கையை நனைக்கும் பழக்கத்தை உண்டாகும்.
இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபட சிகிச்சைகள் உள்ளன. இதை வெளியே சொல்லத் தயங்கிக் கொண்டு மறைக்கத் தேவையில்லை. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள், சிறுநீர்ப்பை பயிற்சிகள், உளவியல் சிகிச்சை என உள்ளதால் குறிப்பிட்ட வயதிற்கு மேல் சிறுநீர் கழிக்கும் பிள்ளைகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறலாம்.