சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். மன அழுத்தத்தை நேர்மறையாக கையாளும் வழிமுறைகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்:
வேலை/கல்வி தொடர்பான சிக்கல்கள்: பணியிடத்தில் ஏற்படும் அழுத்தம், நீண்ட நேரம் நின்று அல்லது அமர்ந்து வேலை பார்த்தல், அதிக பணிச்சுமை, காலக்கெடு, சக ஊழியர்கள் அல்லது மேற்பார்வையாளர்களுடன் மோதல்கள் அனைத்தும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. மாணவர்களுக்கு தேர்வுகள், மதிப்பெண்கள் தொடர்பான மன அழுத்தம் உருவாகிறது.
வாழ்க்கை முறை மாற்றங்கள்: திருமணம் செய்துகொள்வது, புதிய வீட்டுக்கு செல்வது, குழந்தைப் பிறப்பு, விவாகரத்து போன்ற வாழ்க்கை நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க மன அழுத்தத்தை உருவாக்குகின்றன.
நிதிச் சிக்கல்கள்: பணம் போதாமை, கடன், வேலை பாதுகாப்பு பற்றிய கவலைகள், பொருளாதார சிக்கல்கள் போன்றவை கடுமையான மன அழுத்தத்தை உருவாக்குகின்றன.
உடல் நலக் கவலைகள்: நாள்பட்ட நோய்கள், காயங்கள், மனநலப் பிரச்னைகள் போன்றவை சம்பந்தப்பட்டவருக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் மன அழுத்தத்தை தரும்.
உறவுச் சிக்கல்கள்: குடும்பம், நண்பர்கள் அல்லது கூட்டாளிகளுடன் தனிப்பட்ட உறவுகளில் உள்ள சிரமங்கள் போன்றவை.
பிற காரணங்கள்: குறித்த நேரத்தில் வேலையை முடிக்க வேண்டிய நேர மேலாண்மை பற்றிய கவலைகள், வேலையின் நிச்சயமற்ற தன்மை, தொற்று நோய்கள், அதீத எதிர்பார்ப்புகள், பிறருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மன அழுத்தம் மற்றும் சத்தம், மாசுபாடு மற்றும் நெரிசலான வாழ்க்கை சூழ்நிலைகள்போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் மன அழுத்தத்திற்கு பங்களிக்கின்றன. சமூக ஊடகங்களும் தன் பங்குக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
மன அழுத்தத்தை நேர்மறையாக கையாள உதவும் வழிமுறைகள்:
மைண்ட் ஃபுல்னஸ் பயிற்சி: தியானம், ஆழ்ந்த சுவாசம், யோகா போன்ற நினைவாற்றல் நுட்பங்களில் ஈடுபட வேண்டும். இந்த நடைமுறைகள் தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்தவும், பதற்ற உணர்வுகளை குறைக்கவும் உதவும்.
உடற்பயிற்சி: உடற்பயிற்சி ஒரு சக்தி வாய்ந்த மன அழுத்த நிவாரணி. ஓட்டம், நடைபயிற்சி, நடனம், விளையாட்டுப் பயிற்சி என உடல் செயல்பாடுகள் மனநிலையை உயர்த்தி பதற்றத்தை குறைக்கும்.
யதார்த்தமான இலக்குகள்: நிறைவேறாத கடினமான இலக்குகளுக்கு பதிலாக அடையக்கூடிய எதார்த்தமான இலக்குகளை நிர்ணயித்து அவற்றை சிறிய படிகளாக பிரித்து செயல்பட வேண்டும். இது அதிகப்படியான உணர்வுகளைக் குறைத்து சாதனை உணர்வை அளிக்கும்.
எண்ணங்களை சீரமைத்தல்: அழுத்தமான சூழ்நிலைகளை அச்சுறுத்தல்களாக பார்க்காமல் வளர்ச்சி மற்றும் கற்றலுக்கான வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும்.
ஆதரவு அமைப்பு: பிரச்னைகளை, சிக்கல்களை குடும்பத்தினர் நண்பர்கள் சக ஊழியர்களுடன் வெளிப்படையாக பேசுவது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
பொழுதுபோக்கு: மனதிற்குப் பிடித்த பொழுதுபோக்குகளான ஓவியம் வரைதல், தோட்டம் அமைத்தல், இசை கேட்டல், நடனமாடுதல் போன்றவற்றில் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியைத் தரும்.
நன்றி உணர்வுப் பயிற்சி: நன்றி உணர்வுப் பயிற்சியைக் கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்வில் நேர்மறையான அம்சங்களில் கவனம் செலுத்த முடியும். நன்றி சொல்ல வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டு எழுதுவதும் அதை மனதார நினைத்து நன்றி சொல்வதும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட மிகவும் உதவும்.
நேர மேலாண்மை: சமூக ஊடகங்களில் குறைந்த அளவு நேரத்தை செலவிட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திறம்பட நேர மேலாண்மையை நிர்வகிக்க வேண்டும்.
காஃபின் மற்றும் சர்க்கரை இரண்டும் கவலை உணர்வுகளை அதிகரிக்கும். அவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் மனநல நிபுணருடன் பேசி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.