- கவிதா
மனிதன் நேரத்தைத் துல்லியமாக அளவிட கண்டுபிடித்ததுதான் கடிகாரம். கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் சூரிய ஒளியில் விழும் நிழல் அடிப்படையில்தான் நேரத்தை மக்கள் கணக்கிட்டனர். இப்போதும்கூட கிராமங்களில் உள்ள மக்கள் சூரியனின் நிழல் தரையில் எந்த இடத்தில் விழுகிறது என்பதை வைத்து நேரத்தைக் கணித்துச் சொல்வதைப் பார்க்கலாம்.
ஆரம்பக் காலத்தில் மணியை மட்டுமே காட்டும் கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 15-ம் நூற்றாண்டில் ஜெர்மனியில்தான் முதன்முதலாக நிமிடம் மற்றும் வினாடியைக் காட்டும் கடிகாரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
கடைகள் மற்றும் விளம்பரங்களில் கடிகாரம் மற்றும் கைக்கடிகாரங்களில் பெரும்பாலும் 10 மணி 10 நிமிடத்தை காட்டுவதாக இருக்கும். இது குறித்து பல்வேறு கற்பனைக் கதைகள் சொல்லப்படுகின்றன. இந்தக் கட்டுக்கதைகள் மிகவும் சுவாரசியமானவை. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சர்வதேச கடிகாரத் தினம் அக்டோபர் 10-ந்தேதி அனுஷ்டிக்கப்படுவதாலும், அக்டோபர் 10-வது மாதம் என்பதாலும், 10-ந்தேதி என்பதாலும் அதைக் குறிப்பிடும் வகையில் 10:10 மணி என காட்டப்படுவதாக ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால், இது அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.
கடிகாரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் 10:10 மணிக்கு இறந்ததாகவும், அதனால்தான் அந்த நேரம் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்றும் தெரியவில்லை.
விஞ்ஞானி கிறிஸ்டியான் கியூஜென்ஸ் பெண்டுலத்துடன் கூடிய கடிகாரத்தைக் கண்டுபிடித்த நேரம் இது என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்த ஆப்ரகாம் லிங்கனும், கென்னடியும் 10:10 மணிக்கு சுட்டுக்கொல்லப்பட்டதால், கடிகாரங்களில் அந்த நேரம் காட்டப்படுவதாக பெரும்பாலானவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல.
இன்னொரு கட்டுக்கதை மிகவும் சுவாரசியமானது... வெற்றியை (‘விக்டரி') குறிப்பிட இரு விரல்களை விரித்து ஆங்கில எழுத்து ‘வி' போன்று காட்டும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வெற்றி பெற்றதைக் குறிப்பிடும் வகையில் கடிகாரத்தில் முட்கள் ஆங்கில எழுத்து ‘வி' போன்று காட்டப்படுவதாக ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் இதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் கிடையாது.
இப்படி பல கட்டுக்கதைகள் மக்களிடையே உலாவரும் நிலையில் உண்மையான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்...
சுவர்க்கடிகாரம் மற்றும் கைக்கடிகாரங்களில் அதன் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர், (‘லோகோ') 12 என்ற எண்ணுக்கு கீழே அச்சிடப்பட்டு இருக்கும். விளம்பரத்தில் அது மறையாமல் தெளிவாக தெரியவேண்டும் என்பதற்காக 10:10 மணி என்று காட்டப்படுகிறது.
சில நிறுவனங்கள் வித்தியாசமாகத் தெரிய வேண்டும், மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக தங்கள் வசதிக்கு ஏற்ப வேறு மாறுபட்ட நேரத்தைக் காட்டுவது போன்றும் தங்கள் கடிகாரங்களை விளம்பரப்படுத்துகின்றன.
எல்லா இடங்களிலும் உயர்ந்த இடத்தில் இருக்கும் கடிகாரம் ‘‘ஓய்வின்றி உழைத்தால் உயர்வு நிச்சயம்’’ என்பதை அது சொல்லாமல் சொல்கிறது என்பது என்னவோ நிஜம்தானே ஃபிரண்ட்ஸ்?