Coffee 
வீடு / குடும்பம்

காபியே மருந்தாகும் மாயம் தெரியுமா?

கோவீ.ராஜேந்திரன்

காபி என்பது உலகின் மிகவும் பிரபலமான பானமாகும். நீங்கள் குடிக்கும் காபி உங்களை விழிப்புடன் வைத்திருப்பது உண்மைதான் என்கிறார்கள். 200 மி.கி. காபி உங்கள் ஞாபக சக்தியை 24 மணி நேரத்திற்கு கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது என்கிறார்கள் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

பால் கலக்காமல், வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் அருந்தும் காபி மருந்தாக செயல்படுகிறது. உடற்பயிற்சிக்கு முன்னதாக ஒரு கப் காபி சாப்பிட உடலிலுள்ள கொழுப்புகள் எளிதாக கரைந்து உடல் எடை குறையும். ‘தினமும் சர்க்கரை, பால் கலக்காமல் குடிக்கும் இரண்டு கப் காபி ஆயுளை அதிகரிக்கும், இதய செயலிழப்பு ஏற்படுவதை குறைக்கும், புரோஸ்டேட், மார்பக புற்றுநோயின் அபாயம் குறைக்கும், மன அழுத்தத்தை குறைக்கும்’ என்கிறார்கள் அமெரிக்காவின் கிரெனடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

காபி குடித்தால் டைப் 2 நீரிழிவு நோய் நம்மை அண்டாது என்கிறார்கள் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். நம் உடலில் நீர் வெளியேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக, காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவே எழுந்ததும் தண்ணீர் குடித்து விட்டு காபி குடித்தால் பிரச்னை இல்லை என்கிறார்கள்.

காபியில் நோய்களை எதிர்க்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் முதல் 1000 க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் உள்ளன. இது நமது இரத்தத்தில் உள்ள செல்களை அழிவிலிருந்து பாதுகாப்பதால் அளவுடன் காபி குடிப்பவர்கள் நீண்ட காலம் வாழ்வதாக அமெரிக்க நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். காபி குடிக்காதவர்களை விட காபி குடிப்பவர்கள் 10 வருடங்களுக்கு மேலாக உயிர் வாழ்வதாகவும், அதோடு இதயநோய், நுரையீரல் நோய் மற்றும் வாதநோய் அபாயமும் அவர்களுக்கு குறைவு என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

தினமும் 2 கப் காபி அல்லது 170 மி. கி. காபியை எடுத்துக் கொள்கிறவர்களுக்கு வலிகளைத் தாங்கும் திறன் அதிகரிப்பதாகவும்,காபிக்கும் எலும்புகளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. காபி குடிப்பவர்களின் எலும்புகள் வலுவாக இருப்பதாகவும், எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும் என்பதையும் அலபாமா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

சிலருக்கு திடீர் திடீரென இதய துடிப்பு அதிகரிக்கும். இதை ‘அட்ரியல் ஃபைபரேஷன்’ என்கிறார்கள். இதனை கவனிக்காமல் விட்டு விட்டால் அதுவே பக்கவாத நோய்க்கு வழி வகுக்கும். இந்த திடீர் இதய படபடப்பை குறைக்கும் ஆற்றல் காபியில் உள்ளது என்கிறார்கள் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள். தினசரி 2 கப் காபி சாப்பிடுகிறவர்களுக்கு நரம்பியல் சார்ந்த வியாதிகளும், தற்கொலை எண்ணங்களும் வருவது குறைவு என்கிறார்கள்.

சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாக மனிதர்களுக்கு அதிக தொல்லை தருவது பித்தப்பை கற்கள்தான். இவை கல்லீரலுக்கு அடியில் சேர்ந்து செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். இக்குறைபாட்டை களைவதில் காபி முக்கியப் பங்காற்றுகிறது என்கிறார்கள் நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள். கல்லீரலில் இருந்து குளுக்கோஸின் வெளியீட்டை அதிகரிப்பதன் மூலம் உடல் செயல்திறனை மேம்படுத்த காஃபின் உதவும். இது உடற்பயிற்சி செய்வதற்கு அதிக ஆற்றலை அளிக்கும். யூரிக் அமிலத்தை குறைக்க காபி பயனுள்ளதாக இருக்கிறது.

காபி குடிப்பதற்கு மட்டுமல்லாமல் அழகுசாதனப் பொருட்களிலும் இது ஒரு பிரபலமான பொருளாகும். ஏனெனின் காபியில் உள்ள காஃபின், சருமத்தை பொலிவாக்குவதற்கும் உடலுக்கு புத்துணர்வு வழங்குவதிலும் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.

காபியை சூடாகக் குடிப்பதுதான் ஆரோக்கியமானது. அது கூல் காபியை விட அதிக நோய் எதிர்ப்பு ஆற்றலை வெளிப்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். எந்த விளைவுகளும் உடலில் ஏற்படாமல் காபி குடிக்க வேண்டுமானால் காபியை காலை 10 மணிக்கும், மாலை 2 முதல் 5 மணிக்குள் குடிக்க வேண்டும் என்கிறார்கள். ஒரு நாளைக்கு 300 மி.கி. காஃபினுக்கு மேல் உட்கொள்வது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரம் முன்னும், பின்னும் ,காபி அருந்துவதை தவிர்க்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். காபியில் உள்ள காபின் தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் சுரப்பை 40 நிமிடங்கள் தாமதப்படுத்தும் என்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். எனவே, தூங்கப்போவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக காபி குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்.

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

SCROLL FOR NEXT