தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி தங்களது குழந்தைகளின் நலன் கருதி விவாகரத்தை வாபஸ் பெறப்போகும் செய்தி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. உண்மையிலேயே விவாகரத்தை ரத்து செய்ய முடியுமா? சட்டம் சொல்வது என்ன? வாங்க இந்தப் பதிவில் தெரிஞ்சுக்கலாம்.
திருமணம் என்பது ஒரு புனிதமான பந்தம் என்றாலும், பல்வேறு காரணங்களால் திருமண உறவுகள் சிதைந்து விவாகரத்தில் முடிகின்றன. ஒரு முறை விவாகரத்து பெற்றுவிட்டால் மீண்டும் அதில் முந்தைய நிலைக்கு திரும்பும் சாத்தியமில்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. விவாகரத்து என்பது ஒரு சட்டப்பூர்வமான செயல்முறையாகும். இதன் மூலம் திருமண உறவு முடிவுக்கு வருகிறது. இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து பெற முடியும்.
திருமண வாழ்வில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், தகராறுகள் நீண்ட காலமாக நீடித்தால், அவற்றைக் காரணம்காட்டி விவாகரத்து பெற முடியும்.
ஒருவர் மற்றொருவரை ஏமாற்றி திருமணம் செய்திருந்தால், அது விவாகரத்துக்குப் போதுமான காரணமாகும்.
கணவர் அல்லது மனைவி ஒருவர் மற்றொருவருக்கு உடல் ரீதியான அல்லது மன ரீதியான கொடுமை செய்தால் பாதிக்கப்பட்டவர் விவாகரத்து கோரலாம்.
ஒருவர் தவறான முறையில் பிறருடன் உறவு வைத்திருந்தால், அதைக் காரணம் காட்டி விவாகரத்து பெற முடியும்.
கணவர் அல்லது மனைவி ஒருவர் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் இருந்தால், மற்றொருவர் விவாகரத்தில் பெறலாம்.
ஒருவர் மன நோயால் பாதிக்கப்பட்டு திருமண வாழ்வை தொடர முடியாத நிலையில் இருந்தால் மற்றவர் விவாகரத்து பெற முடியும்.
விவாகரத்தை வாபஸ் பெற முடியுமா?
ஒரு நீதிமன்றம் விவாகரத்து தீர்ப்பை வழங்கிய பின்னர் அதுதான் இறுதியான முடிவு. அதாவது, அந்தத் தீர்ப்பை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது. இருப்பினும் சில சூழ்நிலைகளில் நீதிமன்றம் தனது முந்தையத் தீர்ப்பை பரிசீலனை செய்ய ஒப்புக்கொள்ளலாம்.
விவாகரத்து தீர்ப்பு இன்னும் இறுதி நிலையை அடையவில்லை என்றால், இருவரும் ஒப்புக்கொண்டு விண்ணப்பத்தைத் திரும்ப பெறலாம். ஆனால், நீதிமன்றம் விவாகரத்து தீர்ப்பை வழங்கிவிட்டால் அதை வாபஸ் பெறுவது மிகவும் கடினம்.
விவாகரத்து தீர்ப்பு வழங்கப்பட்ட போது தவறான தகவல்கள் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தால், அந்தத் தீர்ப்பை ரத்து செய்ய கோரிக்கை வைக்கலாம். ஆனால், இதற்கு வலுவான சட்டபூர்வமான காரணங்கள் இருக்க வேண்டும்.
விவாகரத்து தீர்ப்பு மோசடி முறையில் தரப்பட்டிருந்தால், அதை ரத்து செய்ய முடியும். திருமணம் தொடக்கத்தில் இருந்தே சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தால், விவாகரத்து தீர்ப்பு இல்லாமலேயே திருமண பந்தம் முறிந்ததாகக் கருதப்படும்.
விவாகரத்து தீர்ப்பை ரத்து செய்ய விரும்பும் நபர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். மேல்முறையீட்டு நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்து புதிய தீர்ப்பை வழங்கும். விவாகரத்து தீர்ப்பை ரத்து செய்ய விரும்பும் நபர் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த கால அவகாசம் ஒவ்வொரு நாட்டின் சட்டங்களிலும் வேறுபடும்.