Did you know that Basmati rice is the number one rice in the world? https://www.indiaglitz.com
வீடு / குடும்பம்

உலகின் நம்பர் ஒன் அரிசி பாசுமதி அரிசிதான் என்பது தெரியுமா?

கோவீ.ராஜேந்திரன்

லகின் மிகச்சிறந்த அரிசியாக பாசுமதி அரிசியை பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான, ‘டேஸ்ட் அட்லஸ்’ அறிவித்துள்ளது. சமீபத்தில் டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட சிறந்த உணவுகள் கொண்ட 100 நாடுகளில் இந்தியாவுக்கு 11வது இடம் அளித்திருந்தது. நீளமான மற்றும் தனித்துவமான சுவை, வாசனை கொண்ட பாசுமதி அரிசி இந்திய துணைக் கண்டத்தில் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றது. இந்தியாவில் மட்டும் சுமார் 34 பாசுமதி அரிசி ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

பாசுமதிக்கு அடுத்தபடியாக இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ மற்றும் போர்ச்சுக்கலின் கரோலினோ ரைஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாசுமதி என்ற சொல்லுக்கு இந்தி மொழியில், 'நறுமணம்' என்று பொருளாகும். இந்த அரிசியில் இயற்கையாக அமைந்திருக்கும் வாசனையே இதன் பெயருக்கு காரணமாக அமைந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இமயமலை பகுதிகளில் பாசுமதி அரிசி பயன்பாட்டில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். பாசுமதி அரிசி, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.

பாசுமதி அரிசியை, ‘வாசனை திரவிய ராணி’ என்று அழைக்கிறார்கள். இதற்கு ஒருவித நறுமணத்தை தருவது, ‘BADH 2' எனும் மரபணுதான். பாசுமதியின் வாசனை புதினாவை ஒத்த நல்ல மணம். வெள்ளை மற்றும் பழுப்பு நிறத்தில் பாசுமதி விற்பனைக்கு வருகிறது. இரண்டுமே சத்தானது, சுவையானது. வெள்ளை பாசுமதி அரிசி பதப்படுத்தப்படுகிறது. இதிலிருக்கும் ஹல், தவிடு மற்றும் கிருமி அனைத்துமே அகற்றப்படுகின்றன. பழுப்பு நிற பாசுமதி ஹல் மட்டுமே நீக்கப்படும். பாசுமதி அரிசியின் நாட்கள் கூடக்கூடத்தான் அதன் சுவை அதிகரிக்கும். 1 முதல் 2 ஆண்டுகள் பழைமையான அரிசியே சுவை அதிகமாக இருக்கும்.

ஒரு கப் அளவு வேகவைத்த பாசுமதி அரிசியில் 210 கிராம் கலோரிகள், 46 கிராம் கார்போஹைட்ரேட், 4 கிராம் புரதம், 7 கிராம் நார்ச்சத்து உள்ளன. பாசுமதி அரிசியை சமைத்த பிறகு சாதம் மென்மையானதாகி விடும். ஒரு பருக்கையின் நீளம் 12 முதல் 20 மி.மீ. வரை இருக்கும். இதில் மிகவும் முக்கியமானது இந்த சாதம் ஒன்றோடொன்று ஒட்டுவதில்லை என்பதுதான். நீண்ட நேரம் பசியை தாங்கும் திறன் கொண்டது.

பாசுமதி அரிசியில் வைட்டமின் பி1, வைட்டமின் பி6, தாமிரம், போலேட், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இதில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த ஊட்டச்சத்து நார்ச்சத்து. இது பாசுமதி அரிசியில் நிறைந்திருப்பதால் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இதில் தியாமின் என்ற வைட்டமின் இருப்பதால் மூளையின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தியாமின் செறிவு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. அல்சைமர் நோயைத் தடுப்பதற்கும் தியாமின் நன்மை பயக்கும். இது தவிர, பாசுமதி அரிசி மூல நோய் மற்றும் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

உலக பாசுமதி அரிசியில் இந்தியா 70 சதவிகிதத்தை உற்பத்தி செய்கிறது. பாசுமதி அரிசியில் பல்வேறு வகைகள் உள்ளன. கலாசார மற்றும் வணிகப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாய் வணிகர்கள் பாசுமதி அரிசியை மத்தியக்  கிழக்கு பகுதிகளில் அறிமுகப்படுத்தினர். பாசுமதி ஏற்றுமதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னணியில் இருக்கின்றன.

உலகிலேயே பாசுமதி அரிசியின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. நாட்டின் வருடாந்திர உற்பத்தி ஆண்டுக்கு சுமார் 8 முதல் 12 மில்லியன் டன்களாக உள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை நாட்டிற்குள் நுகரப்படும். பல நூற்றாண்டுகளாக இந்திய துணைக்கண்டத்தின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியின் பாரம்பரிய பகுதிகளில் பாசுமதி அரிசி பெரும்பாலும் விளைகிறது. இந்தியாவில் சிந்து பள்ளத்தாக்கின் இருபுறமும் மிகச்சிறந்த தரமான பாசுமதி அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் தற்போது 1,563,000 ஹெக்டேர் பரப்பளவில் பாசுமதி அரிசி பயிரிடப்படுகிறது. பாசுமதி அரிசி புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இதற்கான காப்புரிமையை இந்தியா பெற்றுள்ளது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT