Gas Cylinder Insurance  
வீடு / குடும்பம்

உங்கள் வீட்டில் சிலிண்டர் இருக்கா? கண்டிப்பாக இதை தெரிஞ்சுக்கோங்க!

ரா.வ.பாலகிருஷ்ணன்

சிலிண்டர் விபத்துகள் ஏற்படும் போது, அந்தக் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் காப்பீட்டுத் திட்டம் ஒன்று உள்ளது. இதற்காக நாம் தனியே கட்டணம் செலுத்தத் தேவையில்லை. சிலிண்டர் நிலையிலேயே இதற்கான பாலிசித் தொகை அடங்கும். இதுகுறித்த விவரங்களை இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.

மாறி வரும் நவீன உலகில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன. அதற்கு வீட்டின் சமையலறையும் விதிவிலக்கல்ல. முன்பிருந்த விறகடுப்பு இன்று இருக்கிறதா என்று சல்லடை போட்டு சலித்தால் கிராமங்களில் வயதான பாட்டிகள் குடியிருக்கும் கூரை வீடுகளில் ஒன்றோ இரண்டோ இருக்கலாம். அன்றைய விறகடுப்புகளை இன்றைய கேஸ் சிலிண்டர் அடுப்புகள் ஆக்கிரமித்து விட்டன. இன்றைய இல்லத்தரசிகள் சிலிண்டர் அடுப்பகளுக்கு நன்றாகப் பழகி விட்டதால், இதன் விலை ஏறினாலும் கவலை கொள்வதில்லை.

ஒவ்வொரு ஆங்கில மாதத் தொடக்கத்தின் முதல் நாளிலும் சிலிண்டர் விலையானது மாற்றப்படும். இந்த நாளில் சிலிண்டர் விலை குறைவதும், அதிகரிப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. பலரும் சிலிண்டர் அடுப்புகளை முறையாகப் பயன்படுத்தி வருகிறோமா என்றால் இல்லை என்பதே பதில். சிலிண்டர் வெடி விபத்தால் உயிர்பலி ஏற்படுவதை அவ்வப்போது நாளிதழ்களில் செய்தி வெளியாவதைப் பார்க்கிறோம். முறையான வழிகாட்டுதலும், விழிப்புணர்வும் இருந்தால் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க முடியும்.

சிலிண்டர் தீர்ந்து விட்டால் உடனே புக் செய்து அடுத்த சிலிண்டரை வாங்குகிறோம். நம்மில் பலரும் சிலிண்டருக்கு மட்டும் தான் நாம் பணம் செலுத்துகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது முற்றிலும் தவறு. இதில் சிலிண்டர் விபத்துக் காப்பீட்டுக்கான பாலிசித் தொகையும் இருக்கிறது. அதாவது நமக்கே தெரியாமல் சிலிண்டர் வாங்கும் போது அதனுடன், ரூ.40 லட்சத்திற்கான பாலிசித் தொகையை செலுத்தி வருகிறோம். ஆனால், இதனையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் சமையலுக்கு சிலிண்டர் வந்தால் போதும் என பலரும் நிம்மதி கொள்கின்றனர் . இதுவரையில் காப்பீடு குறித்து அறியாமல் இருந்தது தவறல்ல; இனியும் அறியாமையில் இருப்பது தான் தவறு.

சிலிண்டர் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், அந்தக் குடும்பத்தினர் ரூ.40 லட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும். ஆனால் இதுபற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பலரும் காப்பீடு கோரி விண்ணப்பிப்பது இல்லை. மேலும் விபத்துக் காப்பீடு குறித்து எண்ணெய் நிறுவனங்களும், சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனங்களும் போதிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை.

முடிந்த அளவிற்கு சிலிண்டரைப் பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருங்கள். ஒருவேளை ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் இனி சிலிண்டர் காப்பீடு ஒன்று இருப்பதை மறக்க வேண்டாம். இதனை அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். மேலும் சிலிண்டர் விபத்துக் காப்பீடு தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 2333 555 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT