Do you have a strong mind? Then you are in luck! https://meaningintamil.in
வீடு / குடும்பம்

உங்களுக்கு திடமான மனம் இருக்கா? அப்ப நீங்க அதிர்ஷ்டசாலி!

சேலம் சுபா

ர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்துவிட்டு ரதத்தில் அமர்ந்து கொண்டார்  ஸ்ரீகிருஷ்ணன். யுத்தம் தொடர்ந்தது. அபிமன்யு இறந்து விட, தனது மகனின் சடலத்தைக் கண்டு அழுது புலம்பினான் அர்ஜுனன். அப்போது ரதத்தின் மேலிருந்து பத்து சொட்டு கண்ணீர் அர்ஜுனனின் தலையில் விழுகிறது. பார்த்தால் கண்ணனும் அங்கு அழுது கொண்டிருந்தானாம்.

”கண்ணா! நான்தான் மகனுக்காக அழுகிறேன். மரணத்தைப் பற்றிக் கவலைப்படாத நீ ஏன் அழுகிறாய்?” என்றான் அர்ஜுனன்.

அதற்கு கண்ணன் கூறினான், ”இல்லை அர்ஜுனா, மனதை திடமாக வைத்துக்கொள்வது பற்றி உனக்கு இவ்வளவு நேரம் கீதையை உபதேசித்தேனே. அது எவ்வளவு சீக்கிரம் வீணாகி  விட்டது என்றுதான் கண்ணீர் வடிக்கிறேன்" என்றான்.

திடம் என்றால் வலிமை. இரும்பு ஒரு திடமான பொருள். அதை அடித்து தணலில் இட்டு  பக்குவமாக்கிய பின் நமக்கு பலவிதமாக உதவும் பொருளாகிறது. அப்படியே வலிமையான மனதை அனுபவங்களால் பக்குவப்படுத்தி பல விதங்களில் நன்மை பெறலாம். ஆனால், சிலர்  உப்புப்பெறாத சிறு விஷயத்துக்கும் திடமற்று கலங்கிப் போய்  பொன்னான நேரத்தை வீணடிப்பார்கள்.

சிறுவன் ஒருவன் வழி தெரியாமல் காட்டுக்குள் நுழைந்து விட்டான். புலியின் உறுமல்  சத்தம் போல் கேட்டது. சிறுவனுக்கு  அடி வயிற்றில் பகிர் என்றது. இருந்தாலும் ‘எதிர்பாராத ஆபத்து என்றால் மனதை திடமாக வைத்துக் கொண்டு, இருந்த இடத்திலிருந்து அசையாமல் கிருஷ்ணா என்று சொல் ஆபத்து விலகிவிடும்’ என்று அவனது தாத்தா சொன்னது நினைவுக்கு வந்தது. அவன் கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.

திடமான மனதுடன் அவனுக்கு பிடித்த தனது தாயை நினைத்துக் கொண்டு கிருஷ்ண மந்திரத்தை தியானித்து அப்படியே சிலை போல அதே இடத்தில் செடிகளோடு செடியாக மறைந்து விட்டான். சிறிது நேரம் சென்றது அந்த வழியே சென்ற புலி அவனை விட்டு விலகிச் சென்றது. மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றியது அந்த சிறுவனின் மனோதிடம். பயத்தில் அவன் அலறியடித்துக் கொண்டு ஓடி இருந்தால் நிச்சயம் புலி அவனை துரத்தி இருக்கும். இப்படித்தான் சிலர் மரணமே எதிரில் வந்து நின்றாலும் மனோதிடத்துடன் அதை எதிர்கொள்ளும் வலிமையுடன் இருப்பார்கள்.

அனைவருக்குமே மனோதிடம் வாய்ப்பது என்பது அவரவர் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்பது உண்மைதான். அதுமட்டுமின்றி இயற்கையிலேயே மனிதன் இரக்க சுபாவத்துடன் கருணை உள்ளத்துடனும் இருப்பதால், மனோதிடம் வாய்க்கப்பெறுவது என்பது நிச்சயம் ஒரு கலைதான். ஆனால், இந்தக் கலையை சரியான முறையில் பயிற்சி செய்தால் நாமும்  மனோதிடத்துடன் நமது நாட்களை இனிமையாக்கலாம். கோடிக்கணக்கான செல்வம் இருந்தாலும்  மனோதிடம் உள்ளவர்கள்தான் உண்மையில் இந்த பூமியில் வாழும் சொர்க்கவாசிகள்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT