பொதுவாகவே வீட்டை அழகாக வைத்துக்கொள்வதற்காக சில செடிகளை பூந்தொட்டிகளில் வைத்து வளர்ப்போம். ஆனால், சில செடிகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்களுக்கு எட்டும் வகையில் இதுபோன்ற சில செடிகளை வீட்டிற்குள் வைத்து வளர்க்காமல் இருப்பது நல்லது. அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
போத்தோஸ் (Pothos): போத்தோஸ் செடிகளை வீட்டில் வளர்ப்பது சரியல்ல. இவற்றை குழந்தைகள் தெரியாமல் வாயில் வைத்து விட்டால் உதடுகள் மற்றும் வாயில் எரிச்சல் ஏற்படும். தொண்டை வீக்கம் உண்டாகும். சரும வெடிப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
கலாடியம் (Caladium): இது மிகவும் மோசமான செடியாகும். இதன் இலைகளைத் தெரியாமல் உட்கொண்டு விட்டால் வாய், தொண்டை, நாக்கு போன்றவற்றில் எரிச்சல், வீக்கம் போன்றவை ஏற்படும். சில சமயம் சுவாசக் குழாயில் அடைப்பைக் கூட ஏற்படுத்தி விடும்.
இங்கிலீஷ் ஐவி (English Ivy): ஹாங்கிங் பிளான்ட் எனப்படும் தொட்டிகளில் தொங்கவிட்டு வளர்க்கப்படும் இச்செடிகளின் இலைகளை உட்கொண்டால் தொண்டை. வாய் பகுதியில் எரிச்சலும், சொறி, காய்ச்சல் சில சமயங்களில் மயக்கம் கூட உண்டாகும்.
ஃபிலோடென்ட்ரான் (Philodendron): இந்தச் செடியில் உள்ள கால்சியம் ஆக்சலேட் படிகங்கள் மிகவும் நச்சுத்தன்மையை ஏற்படுத்தக் கூடியவை. இவற்றை குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்ப்பது சரியல்ல.
பீஸ் லில்லி: இந்தச் செடியும் போத்தோஸைப் போலவே வாய், உதடு, நாக்கு போன்ற பகுதிகளில் வீக்கம், எரிச்சல், வலியை உண்டாக்கும். இதுபோன்ற செடிகளை வீட்டிற்குள் வளர்க்காமல் இருப்பது நல்லது. அப்படியே வளர்த்தாலும் குழந்தைகளை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
கள்ளிச் செடிகள்: முள் நிறைந்த கள்ளிச் செடிகளை வீட்டில் வளர்ப்பது சரியல்ல. இவை எதிர்மறை ஆற்றலை தரக்கூடியதுடன். அதில் உள்ள முட்கள் குழந்தைகளின் கையை பதம் பார்க்கும். எனவே அழகுக்காக வீட்டிற்குள் கள்ளிச்செடிகளை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எருக்கன் செடி: எருக்கன் செடிகளை வீட்டில் வளர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஊமத்தம் காய், பூ விஷம் நிறைந்தது. இதனை வீட்டின் காம்பவுண்ட் சுவற்றுக்குள் வளர்ப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.