முகநூல், இன்ஸ்டாகிராம் ட்விட்டரில் ரீல்ஸ் போடுவதும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸில் போட்டோக்கள் பகிர்வதும் தற்போது சகஜமாகிவிட்டது. ஆனால், சமூக வலைதளங்களில் பகிரக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. இருப்பிடம்: ஒருவர் தாம் எங்கிருக்கிறோம் என்கிற இருப்பிடத் தகவல்களை ஒருபோதும் சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது. அது அவருடைய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும்.
2. வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்: ஒவ்வொருவருக்கும் அவருடைய தனிப்பட்ட பாதுகாப்பு மிகவும் முக்கியம். சமூக வலைதளங்களில் வீட்டு முகவரி, போன் நம்பர் மற்றும் முக்கியமான விஷயங்களைப் பகிரக்கூடாது. இவற்றை மிகவும் நம்பகமான நண்பர்களிடம் மட்டுமே பகிர வேண்டும். பொதுவெளியில் அல்ல.
3. பயணத் தகவல்கள்: சிலர் தாங்கள் எந்த ஊருக்குப் போகிறோம்? எந்த ஹோட்டலில் தங்குகிறோம் என்றும் தங்களுடைய விமான அல்லது ரயில் பயணச்சீட்டுகளைக் கூட பொதுவெளியில் பகிருகிறார்கள். ஆனால், இது எல்லாம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டிய விஷயங்கள். இதை பகிரும்போது ஆபத்து நேரலாம். நீங்களே, ‘நாங்கள் வீட்டில் இல்லை’ என்று திருடர்களுக்கு அழைப்பு விடுப்பது போல் ஆகிவிடும்.
4. பர்சனல் போட்டோக்கள்: தன்னுடைய பிரத்தியேக போட்டோக்கள் மற்றும் தனது துணைவருடன் இருக்கும் புகைப்படங்கள், குழந்தைகளின் புகைப்படங்கள் ஆகியவற்றை தேவையில்லாமல் பொதுவெளியில் பகிரக்கூடாது. இது தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கும். குடும்பத்தைப் பற்றிய தகவல்கள் பத்திரமாக, ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
5. காதல் வாழ்க்கை: தன்னுடைய காதல் வாழ்க்கை பற்றிய புகைப்படங்களை பொதுவெளியில் பகிரக் கூடாது. அவை ஒருவரின் தனிப்பட்ட வாழ்வு சம்பந்தப்பட்டது. பொதுவெளியில் மற்றவர்கள் பார்வைக்கு அல்ல.
6. ரகசியமான வேலை விஷயங்கள்: வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்களை சில சமயம் பகிர்வது ஆபத்தாக முடியலாம். ஏனென்றால், நிறைய நபர்கள் ஃபேக் ஐடி உருவாக்கி, உங்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் இறங்கலாம். மேலும், அது பணி புரியும் நிறுவனத்துக்கு எதிராகக் கூட இருக்கலாம்.
7. பர்சனல் உரையாடல்கள்: குடும்பம் மற்றும் நண்பர்களுக்கிடையே நடந்த தனிப்பட்ட உரையாடல்களை பொதுவெளியில் பகிரக்கூடாது. அது சம்பந்தப்பட்டவர்களின் மனதை புண்படுத்தலாம். உறவுகள் உறவினர் அல்லது நண்பர்கள் உங்கள் மேல் கோபம்கொள்ள நேரிடலாம்.
8. வெறுப்பு கன்டென்டுகள்: வெறுப்பை கக்கும் விஷயங்கள், வன்முறையை தூண்டும் கன்டென்டுகள் சட்ட விரோதமான செயல்பாடுகள் இவற்றை பகிரக்கூடாது. மேலும், மத ரீதியான, ஜாதி ரீதியான வெறுப்பை தூண்டும் விஷயங்களை ஒருபோதும் பகிரக்கூடாது. அது ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் அல்லது அவரது நடத்தையை சந்தேகப்பட வைக்கும்.
9. வங்கி விவரங்கள்: நாம் எந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கிறோம் என்பது போன்ற விவரங்களையும் மற்றும் பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்களையும் ஒருபோதும் பொதுவெளியில் பகிரக்கூடாது. இதனால் ஃபேக் ஐடியில் ஒருவரை ஹேக் செய்ய முடியும்.
10. ஸ்கிரீன் ஷாட்: நெருங்கின நண்பருடன், உறவினருடன் பேசிய ஸ்க்ரீன் ஷாட்களையும், இமெயில் விவரங்களையும் பொதுவெளியில் பகிரக்கூடாது.
ஒவ்வொருவரும் தம்முடைய சுய பாதுகாப்பில் கவனம் வைக்க வேண்டும். சமூக வலைதளங்களை பொழுதுபோக்கிற்காக சிறிது நேரம் மட்டும் உபயோகித்து விட்டு வெளியே வந்து விட வேண்டும்.