பொதுவாக, பல குடும்பங்களில் திருமணமான முதல் சில மாதங்கள் மட்டுமே தம்பதியர் அன்பையும் பிரியத்தையும் காதலையும் பரிமாறிக் கொள்வார்கள். பின்பு வருடங்கள் செல்லச் செல்ல அன்பும் காதலும் மறைந்து வெறுமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் 2 - 2 - 2 விதியைப் பயன்படுத்தி அவர்களிடையே காதலையும் அன்பையும் எப்படி மீட்டெடுப்பது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
2 - 2 - 2 விதியின் பொருள்: இது தம்பதியர் இடையே அல்லது காதல் ஜோடிகளிடையே சமநிலையை பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான நீண்ட கால உறவு மேலாண்மையை ஏற்படுத்தும். இருவரும் ஒரு குறிப்பிட்ட இரண்டு அளவுகோல்களை பூர்த்தி செய்தால் அவர்கள் ஒரு வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என்பதே இதன் பொருள்.
2 - 2 - 2 விதியைப் பயன்படுத்தும் முறை:
இரண்டு மணி நேரத்தை ஒன்றாக செலவழித்தல்: தம்பதிகள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 மணி நேரமாவது அவர்கள் இருவரும் விரும்பும் செயல்களில் ஈடுபட வேண்டும். இரவு உணவை ஒன்றாக உண்பது, திரைப்படம் பார்ப்பது, நடைப்பயிற்சிக்கு செல்வது அல்லது உரையாடுவது போன்ற தரமான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். இது அவர்களிடையே உணர்ச்சிப் பிணைப்புகளை வலுப்படுத்தவும் அன்பை அதிகரிக்கவும் பகிரப்பட்ட நினைவுகளை உருவாக்கவும் உதவுகிறது.
இரண்டு மணி நேர தனிப்பட்ட நேரம்: இருவரும் ஒவ்வொரு நாளும் தனித்தனியே 2 மணி நேரத்தை தங்களுக்குப் பிடித்த வகையில் செலவிட வேண்டும். கணவனுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருந்தால், மனைவிக்கு இசையில் ஆர்வம் இருக்கும். எனவே, அவர்கள் தமக்குப் பிடித்த செயல்களை இந்த இரண்டு மணி நேரத்தில் செய்ய வேண்டும். யோகா பயிற்சி செய்வது, இசைக் கருவி வாசிப்பது, தனியாக நடப்பது, பாடுவது, ஆடுவது, புத்தகம் படிப்பது போன்ற தனக்கான தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். இது இருவரும் தங்கள் தனிப்பட்ட அடையாளத்தை பராமரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும், மனநிறைவு உணர்வுகளை அதிகரிக்கவும் உதவுகிறது.
2. பயணம்: ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் ஒரு வார விடுமுறையில் இருவரும் எங்காவது பயணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும் நீண்ட விடுமுறை எடுத்துக் கொண்டு தூரமான ஊர்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம். இதற்கான தேதிகளை முன்கூட்டியே திட்டமிட்டு உறுதி செய்துகொள்ள வேண்டும். தங்கள் பிசியான கால அட்டவணைகளுக்கு மத்தியில் தங்கள் இருவருக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். வார இறுதி பயணங்கள் உள்ளூர் அல்லது சற்று தொலைவில் இருக்கலாம். ஆனால், அதை வழக்கமானவற்றிலிருந்து விடுபட்டு புதிய இடங்களை பார்ப்பதாக இருக்க வேண்டும். இது தரமான நேரத்தை செலவழிப்பதற்கு உதவுகிறது.
பலன்கள்: ஒன்றாக நேரத்தை செலவிடும்போது இருவரும் மனம் விட்டு பேசிக்கொள்ளலாம். இது அவர்களிடையே புரிதலையும் அன்பையும் மேம்படுத்துகிறது. தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் அனுபவங்களால் அவர்களது பிணைப்பு இன்னும் கூடும் மற்றும் நெருக்கமும் வளரும். அன்றாட பொறுப்புகளில் இருந்து நேரத்தை ஒதுக்குவது மன அழுத்தத்தை குறைக்கிறது.
புதிய இடங்களுக்குச் செல்லும்போது அது உயிர்ப்பாக வைக்கிறது. உற்சாகத்தை வளர்க்கிறது. மனம் விட்டுப் பேசும்போது சிக்கல்களுக்கான தீர்வுகள் கிடைக்கும். குடும்ப சம்பந்தமான திட்டங்கள், வரவு செலவுகள் போன்றவற்றை கலந்து ஆலோசிக்கும்போது மனக்கசப்புகள், மோதல்கள், தவறான புரிதல்கள் குறைந்து நல்ல புரிதல் ஏற்படும். அதுபோல தனியாக செலவிடும் நேரங்கள் தன்னைப் பற்றிய புரிதல், தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றுதல் என்ற திருப்தியும் கிடைக்கிறது.