Depression 
வீடு / குடும்பம்

மனச்சோர்வின் மறைமுகமான 10 அறிகுறிகள் எவை தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

னச்சோர்வு என்கிற வார்த்தை இப்போது பலராலும் உபயோகப்படுத்தப்படுகிறது. தங்கள் மனச்சோர்வில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் பலர் இருக்கிறார்கள். கீழ்க்கண்ட இந்த பத்து அறிகுறிகளும் ஒருவர் மனச்சோர்வில் இருக்கிறார் என்பதை குறிப்பதாகும்.

1. ஆர்வமின்மை: மனச்சோர்வுக்கு உட்பட்ட மனிதர்கள் தொடர்ந்து வேலை செய்தாலும் அவர்கள் அதில் முழுமையான ஆர்வம் காட்ட மாட்டார்கள். செய்யும் வேலைகளில் உண்மையான ஈடுபாடோ உற்சாகமோ இன்றி இயந்திரம் போல வேலை செய்வார்கள்‌. எதிலும் மனமுவந்த ஈடுபாடு இருக்காது.

2. எரிச்சல்: மனச்சோர்வு உள்ள நபருக்கு சாதாரண விஷயங்கள் கூட எரிச்சல் அல்லது கோபத்தை ஏற்படுத்தும். திடீரென்று விவரிக்க முடியாத அளவு மனநிலையில் மாற்றம் உண்டாகலாம். சிறிய விஷயங்களுக்கு கூட எளிதில் விரக்தி அடைந்து விடுவார்கள்.

3. உடல் அறிகுறிகள்: சரியான காரணங்கள் இன்றி தலைவலி, வயிற்று வலி போன்றவை மனச்சோர்வின் வெளிப்பாடுகள். எந்த ஒரு தெளிவான மருத்துவ காரணமும் இல்லாமல் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் குறிப்பிடுவார்கள்.

4. பரிபூரணத்துவம் தேடுதல்: தாங்கள் மனச்சோர்வில் இருக்கிறோம் என்பதே தெரியாத நபர்கள் அதிகளவு வேலை செய்வார்கள். அதில் அதிகப்படியான பரிபூரணத்துவத்தை தேடுவார்கள். தங்கள் மனதில் இருக்கும் அழுத்தத்தை வெளியேற்ற திசை திருப்பும் முயற்சியாக அதிகமாக வேலை செய்வதும் அதில் பர்பெக் ஷனை எதிர்பார்ப்பதும் நடக்கும்.

5. சமூக விலகல்: சமூக நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும் யாருடனும் நெருங்கிப் பழக மாட்டார்கள். அடிக்கடி தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். பிறரிடம் உரையாடும்போது விலகி இருப்பார்கள் அல்லது தவிர்த்து விடுவார்கள்.  நான் நன்றாக இருக்கிறேன் என வெளியில் சொல்லிக்கொண்டாலும், மனதளவில் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.

6. ஏதாவது ஒரு விஷயத்திற்கு அடிமையாதல்: புகை, மதுப்பழக்கம், போதை போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு அடிமை ஆவார்கள். மேலும், அதிக நேரம் மொபைல் போன் பார்ப்பதும் மனச்சோர்வின் முக்கியமான அறிகுறியாகும்.

7. சுய விமர்சிப்பு: அடிக்கடி தங்களைப் பற்றி தாங்களே சுய விமர்சனம் செய்து கொள்வார்கள். அதில் தங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களுக்காக குற்ற உணர்ச்சியை உணர்வார்கள். தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று நினைக்கும்போது அவர்களுக்கு மனச்சோர்வு அதிகமாகும். தாங்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம் என்று எண்ணும்போது தன் மீது குற்ற உணர்ச்சியும் பரிதாபமும் அதிகமாகும்.

8. உணவு மாறுபாடு: மனச்சோர்வுக்கு ஆளானவர்கள் அதிகப்படியாக உணவு உண்ணவதில் ஈடுபடுவார்கள். சிலர் நேர்மாறாக பசி இல்லாமல் இருப்பது போன்றவற்றை அனுபவிப்பார்கள். அதிகமாக உண்டு எடை அதிகரித்துக் கொள்வார்கள் அல்லது சரியாக உண்ணாமல் எடை குறைப்புக்கு வழிவகுத்துக் கொள்வார்கள்.

9. தூக்கமின்மை: மனச்சோர்வின் முக்கிய அறிகுறி தூக்கமின்மை. இரவில் சரியாக தூங்க மாட்டார்கள். தூக்கத்துடன் போராடுவார்கள். அதனால் பகல் முழுவதும் சோர்வாக உணர்வார்கள். எதிர்மறையாக சிலர் அதிக நேரம் தூங்குவதும் நடக்கும்.

10. கவனம் செலுத்துவதில் சிரமம்: மனச்சோர்வு மூளை மூடுபனியை ஏற்படுத்தும். கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு முடிவுகளை எடுக்க முடியாமல் கவனச் சிதறல் ஏற்படும். சாதாரண வேலைகளைக் கூட மிகவும் பிரயாசைப்பட்டு செய்வார்கள். சிறிய விஷயங்களில் கூட கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படுவார்கள். எனவே, மனச்சோர்வு உள்ளவர்கள் அதை தவிர்ப்பதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டு தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT