helicopter parents https://ta.quora.com
வீடு / குடும்பம்

ஹெலிகாப்டர் பெற்றோரின் 8 அறிகுறிகள் எவை தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அருமையான கலை. ஆனால், சிலருக்கு தங்கள் குழந்தையை எப்படி வளர்ப்பது என்பது தெரியவில்லை. ஹெலிகாப்டர் பெற்றோர் என்பது ஒரு குழந்தை வளர்ப்புப் பாணியை குறிக்கிறது. இது இந்தியாவில் மிகவும் பொதுவான பெற்றோருக்குரிய பாணியாகக் கருதப்படுகிறது. ஹெலிகாப்டர்கள் மேல் நோக்கிச் செல்வது போல பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் வாழ்க்கையில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். ஹெலிகாப்டர் பெற்றோரின் அறிகுறிகள் பற்றியும், அவை குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஹெலிகாப்டர் பெற்றோரின் அறிகுறிகள்:

1. சின்னச் சின்ன விஷயத்தைக் கூட பெற்றோரே செய்வது: விளையாட்டில் குழந்தைகளுக்கு சுதந்திரம் தேவை. ஆனால், குழந்தைகளை தன்னிச்சையாக விளையாட விடாமல், ஒரு பொம்மையுடன் விளையாடுவதைக் கூட இப்படித்தான் விளையாட வேண்டும் என்று ஹெலிகாப்டர் பெற்றோர்கள் அதற்குக் கற்பித்துக்கொண்டு இருப்பார்கள்.

2. சின்னச் சின்ன அசைவையும் கவனித்தல்: குழந்தைகள் விளையாடும்போது, ஓடும்போது அடிக்கடி கீழே விழுந்து கை, கால்களில் அடிபட்டு கொள்ளும். அது இயற்கை. ஆனால், ஹெலிகாப்டர் பெற்றோர் குழந்தை காயப்படுவதை விரும்ப மாட்டார்கள். ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்த முயற்சி செய்வார்கள். அவர்களை சுதந்திரமாக ஓடியாடி விளையாட அனுமதிக்க மாட்டார்கள்.

3. ஹோம் வொர்க்களை செய்வது: குழந்தைகள் ஆரம்ப வகுப்பில் படிக்கும்போதே அவர்களுக்கான பாடங்களை தானே செய்வார்கள். என் குழந்தை புத்திசாலி என பெயர் வாங்க வேண்டும் என்கிற அதீத அக்கறையுடன் அவர்களைச் செய்ய விடாமல் தானே செய்வார்கள். அதனால் அந்த குழந்தை கற்றுக் கொள்ள முடியாமலே போய்விடும்.

4. குழந்தையின் நட்பில் தலையிடுதல்: பொதுவாக, குழந்தைகள் தங்களுடைய சகாக்களுடன் அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்ளும். மிக விரைவில் அதை மறந்து விட்டு மீண்டும் விளையாட ஆரம்பிக்கும். ஆனால், விளையாட்டுச் சண்டைகளில் கூட பெற்றோர் மூக்கை நுழைத்து விடுவார்கள். அதனால் ஒரு நண்பரிடம் எப்படிப் பழக வேண்டும் என்பது கூட குழந்தைக்குத் தெரியாமல் போகும்.

5. தன்னிச்சையாக இயங்கவிடாமல் தடுப்பது: மூன்று வயதிலிருந்தே குழந்தை தன்னுடைய உடைகளை அணிய பழக்கப்படுத்த வேண்டும். ஒரு வயதிலிருந்தே தானாக சாப்பிட பழக்க வேண்டும். ஆனால், ஊட்டுவது, குளிப்பாட்டுவது, உடை அணிவிப்பது என்று பார்த்து பார்த்து ஹெலிகாப்டர் பெற்றோர் செய்வார்கள். அதனால் அந்த குழந்தை தன்னிச்சையாக இயங்கக் கற்றுக் கொள்ளாது. பதின்பருவக் குழந்தைகள் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது கூடவே சென்று கண்காணிக்காமல் அவர்களை சுதந்திரமாக விட வேண்டும். கீழே விழுந்து அடிபட்டு அவர்களாகக் கற்றுக் கொள்வார்கள்.

6. பாதுகாப்பு என்ற பெயரில் சிறைப்படுத்துதல்: நண்பர்களுடன் வெளியே செல்ல விரும்பினால் அதற்கு அனுமதி தந்து அனுப்பி வைக்க வேண்டும். எல்லா இடங்களுக்கும் நான் மட்டுமே கூட்டிச் செல்வேன் என்று சொல்வது தவறு. தன்னுடைய வயதில் இருக்கும் நண்பர்களுடன் வெளியே சென்று உலகத்தை பார்க்கும்போது பிள்ளைகள் நிறைய கற்றுக்கொள்வார்கள். அப்பா, அம்மாவின் கைப்பிடியிலேயே இருக்கும்போது அவர்களால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. மேலும், தனியாக செல்ல அவர்கள் அஞ்சுவார்கள்.

7. என்ன பேச வேண்டும் என்பதை கூட சொல்லித் தருவது: வீட்டுக்கு விருந்தினர் வந்தால் அவர்கள் ஏதாவது கேட்டால் பிள்ளைகளை பதில் சொல்ல விடாமல் ஹெலிகாப்டர் பெற்றோர் பேசுவார்கள். குழந்தைகள் சாதாரண கேள்விகளுக்கு கூட பதில் சொல்ல முடியாமல் போகும்போது, தான் எதற்கும் லாயக்கில்லை என்கிற அழுத்தமான கருத்து அதன் மனத்தில் ஆழமாகப் பதிந்து விடும்.

8. எல்லாவற்றையும் கற்பித்தல்: குழந்தைக்கு எல்லாவற்றையும் கற்பிக்கிறேன் என்கிற பெயரில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும்போது அந்தக் குழந்தைக்கு தன்னம்பிக்கையே இல்லாமல் போய்விடும். தன்னுடைய திறன்களை கண்டறியவும் அதை மேம்படுத்திக் கொள்ளவும் முயற்சி செய்யாமலே விட்டுவிடுவார்கள்.

எனவே, குழந்தைகள் தன்னிச்சையாக தைரியமாக செயல்பட, அறிவாற்றலுடன் வளர ஹெலிகாப்டர் பெற்றோர் தங்களுடைய குணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

SCROLL FOR NEXT