வனக்குளியல் 
வீடு / குடும்பம்

வனக்குளியல் தரும் நன்மைகள் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

ப்பானிய மொழியில், ‘ஷின்ரின் – யோகு’ என்பது வனக்குளியல் (Forest bathing) என்று பொருள்படும். இது உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த வன சூழலில் மூழ்குவதை உள்ளடக்கிய ஒரு நடைமுறையாகும். இதன் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

தோற்றம் மற்றும் தத்துவம்: வனக்குளியல் என்பது தண்ணீரில் குளிப்பது அல்ல. மாறாக, காட்டில் முழுமையாக இருப்பதைக் குறிக்கிறது. ஐந்து புலன்களையும் இயற்கையுடன் ஆழமாக இணைக்கும் ஒரு செயலாகும். 1980களில் ஜப்பானில் சுற்றுச்சூழல் சிகிச்சையில் ஒரு வடிவமாக உருவானது. இது மன அழுத்தம் மற்றும் நகரமயமாக்கல்களின் விளைவுகளை எதிர்கொள்ளும் தேசிய பொது சுகாதார திட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. இந்த நடைமுறையானது நினைவாற்றலில் ஆழமாக வேரூன்றி, மனதிலும் உடலிலும் ஆழ்ந்த நன்மைகளை ஏற்படுத்தும்.

வனக்குளியலின் நன்மைகள்:

1. மன அழுத்தம் குறைப்பு: அடர்ந்த பசுமை மரங்கள் சூழ்ந்த இயற்கையில் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்துடன் தொடர்புடைய கார்டிசோலை குறைக்கிறது. இது பதற்றம் குறைவதற்கும் தளர்வை மேம்படுவதற்கும் சிறந்த வழியாகும். வனக்குளியல் மனச்சோர்வின் அறிகுறிகளை குறைத்து மகிழ்ச்சி மற்றும் உற்சாக உணர்வுகளை அதிகரிக்கும்.

2. நோய் எதிர்ப்பு செயல்பாடு மேம்படுத்தப்படுதல்: மரங்கள் பைட்டான்சைடுகள் எனப்படும் இயற்கை ரசாயனங்களை வெளியிடுகின்றன. அவை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதாக ஆய்வுகள் சொல்லுகின்றன. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. எனவே, நோய்கள் வருவது குறைகிறது.

3. கார்டியோ வாஸ்குலார் நன்மைகள்: இயற்கை சூழலில் நேரம் செலவிடுவது இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை குறைக்க உதவுகிறது. இதய நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

அறிவாற்றல் நன்மைகள்: வனக்குளியல் ஒருவரின் கவனம் மற்றும் மனத் தெளிவை மேம்படுத்துகிறது. ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கும், செய்யும் செயலில் கவனம் செலுத்துவதையும் எளிதாக்குகிறது. மேலும், தூக்க முறைகளை ஒழுங்குபடுத்த உதவுகின்றது. சிறந்த ஓய்வு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் வழிவகுக்கும்‌.

வனக்குளியல் பயிற்சி செய்வது எப்படி?

நகரத்திற்கு அருகில் உள்ள பசுமையான மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதி அல்லது இயற்கையான சூழ்நிலையை தேர்ந்தெடுக்கலாம். அது சாத்தியமில்லை என்றால் மரங்கள் நிறைந்த பூங்காக்களில் கூட வனக்குளியலை ஏற்படுத்தலாம்.

உணர்வுகளை ஈடுபடுத்துதல்: நாம் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய, வாசனை, தொடுதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மரம், செடி, கொடிகள், இலைகளின் நிறம், அவை காற்றில் அசையும் சத்தம், பூக்களின் வாசனை, பூமியின் வாசனை, மரப்பட்டைகளின், கிளைகளின் அமைப்பு, காற்றின் புத்துணர்ச்சி ஆகியவற்றை கவனிக்க வேண்டும்.

மெதுவாக நகர்தல்: எந்தவித அவசரமும் இன்றி மெதுவாக இலக்கில்லாமல் நடக்கவும், நேரத்தை பார்க்காமல் இலக்கை அடைய வேண்டிய அவசியம் இல்லாமல், அந்தத் தருணத்தை மகிழ்ச்சியோடு அனுபவிப்பதுதான் வனக்குளியலின் முக்கியமான குறிக்கோள். தொலைபேசி மற்றும் பிற சாதனங்களை விட்டு விலகி இருக்க வேண்டும். அவற்றை அமைதி நிலையில் வைக்க வேண்டும். டிஜிட்டல் உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு இயற்கையான உலகத்துடன் இணைவதே இதன் முக்கியமான குறிக்கோளாகும்.

மனதையும் உடலையும் அமைதிப்படுத்த ஆழ்ந்த சுவாசத்தை பயிற்சி செய்ய வேண்டும். சுவாசத்தின் நிலை மற்றும் நுரையீரலை நிரப்பும் புதிய காற்று ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். காட்டில் குறைந்தது 30 நிமிடங்கள் செலவிட வேண்டும். முடிந்தால் இன்னும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். இயற்கையில் செலவழிக்கும் நேரத்தை பொறுத்து அதன் நன்மைகளும் அதிகரிக்கும்.

பின்பு அதைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி சிந்திக்க சில நிமிடங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். தான் அனுபவித்த அமைதியையும், அனுபவத்தையும் உள்வாங்கவும், காடுகளில் குளிப்பதை வனக்குளியலில் ஈடுபடுவதை ஒரு பயிற்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

SCROLL FOR NEXT