Do you know the glory of the love fruit strawberry? https://tamil.abplive.com
வீடு / குடும்பம்

காதல் கனி ஸ்ட்ராபெர்ரி மகிமை தெரியுமா?

கோவீ.ராஜேந்திரன்

ஸ்ட்ராபெர்ரிகள் சுவை மற்றும் வாசனையில் ஒப்பிட முடியாதது. ஆனால் அதன் நல்ல சுவைக்கு மட்டுமின்றி, மற்ற ஆரோக்கிய நன்மைகளுக்கும் அது நினைவு கூறப்படுகிறது. மூளையை கூர்மையாக்கும் திறனும், இதய ஆரோக்கியம் மற்றும் நுரையீரல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் ஆற்றலும் அதில் உள்ளன.

ஸ்ட்ராபெரி பழம் மற்ற பழங்களிலிருந்து வேறுபட்டது. ஏனெனில், அவற்றின் விதைகள் பழத்தின் வெளிப்புறத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.ஒவ்வொரு ஸ்ட்ராபெர்ரி பழத்தின் வெளியே சராசரியாக 200 விதைகள் இருக்கும். இது ரோஜா இனத்தைச் சேர்ந்தது.

காதல் தேவதை வீனஸ் சின்னம் ஸ்ட்ராபெர்ரி பழம் போன்று இருப்பதால் அயல்நாடுகளில் அதை, ‘காதல் பழம்’ என்கிறார்கள். வீனஸ் தேவதையை குறிக்கும் சின்னமாக ஸ்ட்ராபெர்ரியை அங்கு பயன்படுத்துகிறார்கள். காரணம் இந்த பழத்தின் வடிவம் காதல் சின்னமான இதய வடிவத்தில் இருப்பதால்தான். மேலும் இதன் நிறமும் காதலர்கள் விரும்பும் மனங்கவர்ந்த சிவப்பு நிறத்தில் இருப்பதும்தான்.

ஸ்ட்ராபெர்ரி பழத்தின் தாயகம் வட அமெரிக்கா. 16ம்நூற்றாண்டில் வெர்ஜினியாவிலிருந்து ஸ்ட்ராபெர்ரி ஐரோப்பாவில் அறிமுகமானது. அதன் பிறகு சில காலங்கள் கழித்து தென் அமெரிக்காவின் சில வகை தாவரங்களுடன் கலப்பின முறையில் உருவாக்கப்பட்டதுதான் தற்போது நாம் சாப்பிடும் ஸ்ட்ராபெர்ரி என்கிறார்கள். தற்போது 103க்கும் மேற்பட்ட வகைகள் ஸ்ட்ராபெர்ரியில் உள்ளன. பல்வேறு தட்பவெட்ப நிலைகளில் கூட தற்போது பயிராகின்றன.

ஒரு ஏக்கர் நிலத்தில் ஸ்ட்ராபெர்ரி பயிரிடப்பட்டால் அதிலிருந்து 22680 பழங்கள் கிடைக்கும். கிட்டத்தட்ட 50,000 பவுண்டுகள். 1484ம் வருடமே ஸ்ட்ராபெர்ரி பழத்தின் ஒவியம் வரையப்பட்டுள்ளது என்கிறார்கள். 2022 ம் ஆண்டு இஸ்ரேல் விவசாயி ஒருவர் தன்னுடைய தோட்டத்தில் விளைவித்த ஸ்ட்ராபெர்ரி பழம்தான் உலகின் அதிக எடைகொண்ட பழம் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த ஸ்ட்ராபெர்ரியின் எடை சுமார் 289 கிராமாம். 'எலன்' வகை ஸ்ட்ராபெர்ரி பழம் சாதாரண பழங்களை விட ஐந்து மடங்கு எடையுடன் விளைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் ஸ்ட்ராபெர்ரி பழத்தின் சீசன். இதை மரத்திலேயே பழுக்க வைத்துதான் பறிப்பார்கள். ஒரு முறை பிடுங்கி விட்டால் அதன் பிறகு அது பழுக்காது. ஸ்ட்ராபெர்ரி வெள்ளை, மஞ்சள், கோல்டன் கலர், பிங்க் நிறத்தில் கூட பயிராகிறது. மேலைநாடுகளில் இன்றும் ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது இரட்டை ஸ்ட்ராபெர்ரி பழத்தை கண்டால் அதை இரண்டாக உடைத்து ஒரு பகுதியை ஆணும் மற்றொரு பகுதியை தான் விரும்பும் பெண்ணுக்கும் கொடுத்தால். இருவரும் காதல் வயப்படுவார்கள் என்பதுதான் அது.

பிரான்ஸ் நாட்டில் பழங்காலத்தில் புதுமணத் தம்பதிகளுக்கு ஸ்ட்ராபெர்ரி பழத்தை ஜூஸாக குளூருட்டி வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். இல்லினாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்று குறிப்பு இதை தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

ஜெர்மன் பாவாரியா பகுதிகளில் இன்றும் இந்த வழக்கம் உள்ளதாம். நிறைமாத கால்நடைகளுக்கு அதன் கொம்பில் காட்டு ஸ்ட்ராபெர்ரி பழக்கூடையை கட்டி விடுவார்கள். மேலும், அந்த கால்நடைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி பழத்தை அதிகளவில் கொடுப்பார்கள். இப்படி செய்வதால் கால்நடைகள் ஆரோக்கியமான கன்றுகளை ஈனும் என்றும், கால்நடைகள் அதிக பால் கொடுக்கும் என்றும் நம்புகிறார்கள்.

அன்னி போலியன் எனும் இங்கிலாந்து மகாராணி (எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி) பிறக்கும்போதே நெற்றியில் ஸ்ட்ராபெர்ரி பழ தழும்புடன் பிறந்ததாக கூறுவார்கள். அந்நாட்களில் இங்கிலாந்து நாட்டில் கட்டப்படும் சர்ச் மற்றும் புனித ஸ்தலங்களின் உச்சியில் ஸ்ட்ராபெர்ரி பழ வடிவ சிற்பங்களை வைப்பது வழக்கில் இருந்தது.

நீண்ட நாள் இருக்கும் பழங்களில் சத்துக்கள் குறைவு. ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலர்ந்து, சிவப்பு நிற பரவலாக இருக்கும்படியான கெட்டியான பழங்களே சிறந்தது. வெளிறிய நிறம், பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் புளிக்கும். பொதுவாக ஸ்ட்ராபெர்ரி நன்கு சிவப்பு நிறத்தில் பழத்தின் காம்புகளில் பச்சை நிற இலைகள் பிரெஸ்ஸாக இருக்க வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி பழத்தை சரியாக கையாள தெரியாவிட்டால் அது பறித்த 24 மணி நேரத்தில் கெட்டு விடும் தன்மை கொண்டது. ஸ்ட்ராபெர்ரி பழத்தை கழுவாதீர்கள், அப்படி கழுவினால் உடனே சாப்பிட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் பிரிஸ்ஸரில் ஒரு மெல்லிய பேப்பரில் சுற்றி வைக்க வேண்டும்.

பழங்கால ரோமானியர்கள் பெர்ரி மனச்சோர்வு, மயக்கம், அனைத்து வகை அழற்சிகள், காய்ச்சல், தொண்டை நோய்த்தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், வாலிடோசிஸ், கீல்வாதத்தின் தாக்குதல்கள் மற்றும் இரத்தம், கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களின் அறிகுறிகளைக் குறைக்கும் என்று நம்பினர்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT