Odd socks day 
வீடு / குடும்பம்

பொருந்தாத காலுறைகள் தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் தெரியுமா?

நவம்பர் 12, பொருந்தாத காலுறைகள் தினம்

எஸ்.விஜயலட்சுமி

பொதுவாக, காலுறைகள் இரண்டும் ஒரே நிறத்தில் ஒரே டிசைனில், பொருத்தமான ஜோடியாக இருப்பதைத்தான் எல்லோரும் அணிந்து கொள்வார்கள். ஒரு காலில் சிவப்பு நிற சாக்ஸும் இன்னொரு காலில் நீல நிற சாக்ஸும் அணிந்து கொண்டு செல்ல யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், தற்போது பல நிறுவனங்கள் பொருந்தாத ஜோடி காலுறைகளை விற்பனை செய்கின்றன. மேற்கத்திய நாடுகளில் நவம்பர் 12ம் தேதி பொருந்தாத சாக்ஸ் தினத்தை கொண்டாடுகிறார்கள். இதன் பின் உள்ள வரலாறு மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி பார்ப்போம்.

பொருந்தாத சாக்ஸ் தினம்: பொருந்தாத சாக்ஸ் தினம் என்பது மக்கள் விரும்பும் எந்த வகையான காலுறைகளையும் அணிவதற்கான சுதந்திரத்தைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், வித்தியாசங்களைத் தழுவி தனித்துவமாக இருக்கும் மனிதர்களை கொடுமைப்படுத்துவதற்கு பதிலாக அவர்களிடம் கருணை காட்ட வேண்டும் என்கிற செய்தியையும் இது சொல்கிறது.

2017ம் ஆண்டு, நவம்பர் 12ம் தேதி பொருந்தாத சாக்ஸ் தினம் நிறுவப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் ‘புல்லியிங்’ எனப்படும் கொடுமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், குழந்தைகளின் தனித்துவத்தை ஊக்குவிப்பதற்காகவும், பெரியவர்களின் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்காகவும் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு மனிதரும் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்பதையும் அவர்களை விமர்சிப்பதை விட, வேறுபாடுகள் கொண்டாடப்பட வேண்டும் என்பதையும் இது வலியுறுத்துகிறது.

பள்ளிகள் மற்றும் சமூகங்களில் பிறருக்கு ஆதரவாகவும் கருணை மற்றும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தை இது முன்னிறுத்துகிறது. வித்தியாசமாக இருப்பதில் தவறில்லை என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் வகையில், இந்த தினத்தில் பொருந்தாத காலுறைகளை குழந்தைகள் பள்ளிக்கு அணிந்து வரலாம். அதுபோல நிறுவனங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் பொருந்தாத காலுறைகளை அணிந்து செல்லலாம்.

இந்த நாளின் முக்கியத்துவம்:

தனித்துவம் மற்றும் ஏற்றுக்கொள்ளல்: பொருந்தாத கால் உறைகளை அணிவது தனி நபர்களிடையே உள்ள வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதை முன்னிலைப்படுத்துகிறது. மக்கள் தங்கள் தனித்துவமான ஆளுமைகளையும் பண்புகளையும் வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது. இந்த தினம் பெரும்பாலும் கொடுமைப்படுத்துதல் எதிர்ப்புப் பிரச்சாரங்களுடன் தொடர்புடையது. குறிப்பாக, பள்ளிகளில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதைக் குறைவாக நடத்துதல், உருவக் கேலி செய்தல் போன்றவற்றை கைவிட்டு, மரியாதையுடன் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே போதிக்கிறது. பொருந்தாத கால் உறைகளை அணிவதன் மூலம் நகைச்சுவை தன்மையை வெளிப்படுத்துதல், இரக்கத்தின் முக்கியத்துவம் பிறருடைய தனித்தன்மையை மதித்தல் மனநல மேம்பாடு போன்றவற்றை இந்த நாள் ஊக்குவிக்கிறது.

வேறுபாடுகள் மூலம் ஒற்றுமை: இந்த தினம் சமூக உணர்வை உருவாக்குகிறது. தனிப்பட்ட வேறுபாடுகளை அங்கீகரிக்கும் அதேவேளையில், ஒற்றுமையும் ஊக்குவிக்கப்படுகிறது. பல பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் இந்த தினத்தை கல்வி நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன. பன்முகத்தன்மையை கொண்டாடுகின்றன.

அனுதாபத்தை வளர்த்தல்: பிறரைப் புரிந்துகொள்வதன் அவசியத்தை இந்த நாள் உணர்த்துகிறது. பிறரை அவருடைய நிலையிலிருந்து புரிந்து கொண்டு அனுதாபம் செலுத்துவது மிகவும் அவசியம் என்கிற கருத்து வலிமையாக மக்கள் மனதில் பதிய வைக்கப்படுகிறது. அவர்களைப் புரிந்து கொண்டு, ஏற்றுக்கொண்டு ஊக்குவிக்க வேண்டும் என்றும் சொல்கிறது.

வேடிக்கை மற்றும் படைப்பாற்றல்: இந்த நாளில் பொருந்தாத கால் உறைகளை அணிந்து ஃபேஷன் ஷோக்களை நடத்துவதன் மூலம் தங்களுடைய மனதில் இருந்து மகிழ்ச்சியை தூண்டவும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. இது ஏற்றுக்கொள்ளும் உணர்வை வளர்க்கும் அதேவேளையில். முக்கியமான சமூகப் பிரச்னைகளை பற்றிய உரையாடல்களில் ஈடுபடுவதற்கான எளிய மற்றும் சக்தி வாய்ந்த வழியாகும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT