நம்மில் பெரும்பாலானோர் சூப்பர் மார்க்கெட்டுகளில்தான் பொருட்களை வாங்குகிறோம். அப்படி வாங்கும்போது அதன் லேபிளில் எக்ஸ்பயரி தேதி போட்டிருக்கும். சிலவற்றில் அப்படி இல்லாமல் வாசகங்கள் இருக்கும். இந்த வாசகங்களுக்கான பொருள் என்னவென்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
Best before or Best by date: ப்ரீசரில் குளிரூட்டப்பட்ட பொருட்கள், உலர்ந்த பொருட்கள், டின் பொருட்கள் போன்றவற்றில் இப்படி அச்சாகி இருக்கும். இந்தப் பொருட்களை இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலத்துக்குள் பயன்படுத்தினால் இதன் தரம் நன்றாக இருக்கும் என்பது இதன் பொருள். இந்தத் தேதிக்கு பிறகு பயன்படுத்தினால் நமத்து போயிருக்கக்கூடும். டின் பானங்கள் எனில் சுவை குறைந்திருக்கக் கூடும்.
Use by date: யூஸ் பை டேட் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த உணவுப் பொருளை அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு முன்பாகவே உபயோகிக்க வேண்டும். அதைக் கடந்து உபயோகிக்க, ஃபுட் பாய்ஸன் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுத்து விடும். அதேபோல, யூஸ் பை என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பான வெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டியதும் அவசியம். பால், நெய் போன்ற உணவுகள் இந்தப் பிரிவில் அடங்கும். சில உணவுப் பொருட்களில் குறித்த தேதிக்கு முன்பாக என்றும் அச்சிட்டு இருப்பார்கள்.
Open dating: ஒரு பொருள் எப்போதிலிருந்து சந்தையில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை வாடிக்கையாளர் அறிந்து கொள்வதற்காக இந்த ஓப்பன் தேதி அச்சிடப்பட்டு இருக்கும். நாம் பார்க்கும் பொருள் ஓப்பன் டேட் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தால் கடந்த இரண்டு மாதங்களாக அது விற்பனைக்கு தயாராக உள்ளது என்பது பொருள். இதற்கும் யூஸ் பை தேதிக்கும் சம்பந்தம் இருக்காது. ஒருவேளை தொடர்பிருந்தால் அதுவும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
Sell by or Display until: சூப்பர் மார்க்கெட்டுகளில் முதலில் எக்ஸ்பயரி ஆகும் பொருட்கள் முன்வரிசையிலும், புதிதாகத் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பின் வரிசையிலும் வைக்கப்பட்டிருக்கும். புது பொருட்கள் முன்வரிசையில் இருந்தால் பின் வரிசையில் உள்ளது தேங்கி காலாவதியாகும் என்பதால் இப்படி அடுக்குவார்கள்.
செல் பை அல்லது டிஸ்ப்ளே அண்டில் அச்சிடப்பட்டுள்ளது வாடிக்கையாளர் வசதிக்காகத்தான். சரக்குகளை தேதி வாரியாகப் பயன்படுத்தவே இவை அச்சிடப்பட்டுள்ளன. செல் பை தேதிக்குப் பிறகும் ஒரு பொருள் யூஸ் பை தேதி இருந்தால் குழம்ப வேண்டாம். தாராளமாக அந்தப் பொருட்களை பயன்படுத்தலாம். பெரிய கடைகளில் செல் பை முடிந்த பொருட்களை வைத்திருக்க மாட்டார்கள்.