மழைக்காலங்களில் அடிக்கடி புயல் சின்னங்கள் உருவாவது வாடிக்கை. அப்படிப் புயல் உருவாகி, படிப்படியாக வளர்ந்து வலுவாகும் நிலைகளுக்கேற்ப துறைமுகங்களில் 1 முதல் 11 எண்கள் வரையிலான எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. அதன் பொருள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
எண் 1: புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது. பலமான காற்று வீசுகிறது. துறைமுகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
எண் 2: புயல் உருவாகியுள்ளது என அறிவிப்பு. துறைமுகத்திலிருந்து கப்பல்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவு.
எண் 3: திடீர் காற்று மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
எண் 4: துறைமுகத்தில் மோசமான வானிலை ஏற்பட்டுள்ளது. துறைமுகத்திலிருக்கும் கப்பல்கள், பொருட்களுக்கு ஆபத்து.
எண் 5: புயல் துறைமுகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும்.
எண் 6: துறைமுகத்துக்கு வலது பக்கமாக புயல் கரையைக் கடக்கும்.
எண் 7: துறைமுகம் வழியாக அல்லது அதற்கு மிக அருகிலேயே புயல் கரையைக் கடக்கும்.
எண் 8: அபாயம் மிக்க புயல், துறைமுகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும்.
எண் 9: அபாயம் மிக்க புயல் துறைமுகத்தின் வலது பக்கமாக கரையைக் கடக்கும்.
எண் 10: அதிதீவிர புயல் துறைமுகத்தின் வழியாகவோ அதன் அருகிலோ கரையைக் கடக்கும்.
எண் 11: வானிலை எச்சரிக்கை மையத்துடன் துறைமுகத்துக்கு தகவல் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இப்படிப் பல செய்திகளை புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் பொதுமக்களுக்குச் சொல்கின்றன.