புன்னகை பூக்கின்ற மனித முகங்களைப் பார்ப்பதே ஒரு தனி அழகு. மனதின் மகிழ்ச்சியே முகத்தில் புன்னகையாக மலர்கிறது. புன்னகைப்பதால் ஒருவரது முகம் அழகாவது மட்டுமல்ல, அறிவியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஏராளமான நன்மைகளைத் தருகிறது. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
புன்னகைப்பதால் அறிவியல் ரீதியாக உண்டாகும் பலன்கள்:
1. புன்னகை, டோபமைன் செரட்டோனின் மற்றும் என்டார்ஃபின்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இவை அனைத்தும் மகிழ்ச்சி மற்றும் உற்சாக உணர்வைத் தருகின்றன.
2. புன்னகை செய்வதன் மூலம் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவு குறைகிறது. இதனால் மனப்பதற்றம் நீங்கி நிம்மதி வருகிறது.
3. புன்னகை, மேம்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. இதனால் நோய்கள் ஏற்படுவது குறைகிறது. ஆரோக்கியத்தின் மீள்தன்மையை மேம்படுத்துகிறது.
4. புன்னகை செய்யும்போது வெளியிடப்படும் எண்டார்ஃபின்கள் இயற்கையான வலி நிவாரணிகளாக செயல்படுகின்றன. உடல் அசௌகரியத்தைப் போக்க உதவுகிறது.
5. புன்னகை, வெகுமதி மற்றும் மகிழ்ச்சியுடன் தொடர்புடைய மூளைப் பகுதிகளை தூண்டி விடுகிறது. இதனால் மனம் எப்போதும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
6. புன்னகை இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் இருதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
7. புன்னகையுடன் தொடர்புடைய நேர்மறை உணர்ச்சிகள் ஒருவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான வாழ்வையும் தருகிறது.
புன்னகையின் உளவியல் பலன்கள்:
1. புன்னகை ஒருவரின் மனநிலையை உயர்த்தி சவாலான சூழ்நிலைகளில் கூட நேர்மறையான கண்ணோட்டத்தை உருவாக்குகிறது.
2. புன்னகை தனிப்பட்ட தொடர்புகளை எளிதாக்குகிறது. புன்னகைப்பதன் மூலம் நிறைய நட்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். அந்நியர்களிடம் கூட புன்னகை நட்பை உருவாக்கித் தரும்.
3. ஒருவர் தனது எதிரில் இருப்பவரைப் பார்த்து புன்னகைக்கும்போது, இயல்பாக அவர் முகத்திலும் புன்னகையைத் தோற்றுவிக்கிறது. இது மேலும் நேர்மறையான உணர்ச்சிகள் அறிவாற்றல் மற்றும் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்துகிறது.
4. புன்னகை நல்ல ஒரு மன அழுத்த மேலாண்மைக்கு உதவுகிறது. மனப்பதற்றத்தைக் குறைத்து, நெகிழ்ச்சியை அதிகரிக்கிறது. பிறரிடம் இரக்க உணர்வுகளைத் தூண்டுகிறது.
5. எப்போதும் புன்னகை முகத்துடன் இருப்பவர் மிகுந்த தன்னம்பிக்கை உடையவராக இருப்பார். புன்னகை சுயமரியாதையின் அடையாளம். சமூக மற்றும் தொழில்முறை அமைப்புகளில் தனிநபர்களை அதிக நம்பிக்கையுடன் உணர வைக்கிறது.
புன்னகையின் அழகியல் பலன்கள்:
1. புன்னகை பூத்த முகம் அழகின் அடையாளம். முகத்திற்கு வெளிச்சம் தரும் விளக்கு போன்றது புன்னகை. சுமாரான தோற்றம் கொண்டவர்கள் கூட புன்னகை செய்யும்போது, முகக் கவர்ச்சியை அதிகரிக்கிறது. அவர்கள் மிகவும் அழகாகக் காட்சியளிப்பார்கள்.
2. அடிக்கடி புன்னகைப்பவர்களின் முகம் இளமையாக தோற்றமளிக்கும். மனிதர்களை அதிக ஆற்றலுடனும் துடிப்புடனும் செயல்பட வைக்கும். மேலும், வயதானாலும் இளமையாகவே இருப்பது போன்று தோற்றம் தரும்.
3. ஒரு நபரை எளிதில் அணுகக்கூடிய நபராக புன்னகை மாற்றுகிறது. நேர்மறையான சமூகத்தொடர்புகளை ஏற்படுத்துகிறது.
4. புன்னகை காந்தம் போன்றது. அது எளிதில் பலரை ஈர்க்கும். தொடர்ச்சியாக பலரது மனநிலையையும் மாற்றம் செய்ய வைத்து புன்னகைக்க வைக்கும்.
எனவே, புன்னகை செய்வோம் அழகான ஆரோக்கியமான மனிதர்களாக வாழ்வோம்.