Husband and wife 
வீடு / குடும்பம்

மனைவியிடம் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் எவை தெரியுமா?

பொ.பாலாஜிகணேஷ்

ணவன், மனைவி உறவு என்பது தாய்க்கு அடுத்தபடியாக ஒரு ஆணுக்குக் கிடைக்கும் பலமான உறவு என்று சொல்லலாம். உங்கள் மனைவியிடம் நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. இவற்றைக் கடைபிடித்தால் நிச்சயமாக உங்கள் இல்லறம் நல்லறமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. விமர்சனம்: எந்த இடமானாலும் அங்கு ஆரோக்கியமான விமர்சனம் முக்கியம், அவசியம். அது வீட்டுக்கும் பொருந்தும். ஆனால், விமர்சனம் என்ற பெயரில் எப்போதும், எல்லாவற்றுக்கும் உங்கள் துணையை குறை கூறுவது சரியல்ல. இது, துணையின் மனதை புண்படுத்தும். எனவே, எல்லாவற்றுக்கும் பழியைத் தூக்கி அவர் மீது போடாதீர்கள். அவரின் கருத்துகளையும், நிலையையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவசியம் சுட்டிக்காட்ட வேண்டும் என்றால், பிறர் முன்னிலையில் தவறுகளைக் கூறாமல், தனிமையில் இருக்கும்போது அதை நாசுக்காக எடுத்துச் சொல்லி, புரியவைக்க முயற்சி செய்யுங்கள்.

2. குற்றச்சாட்டு: உறவுகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு குற்றச்சாட்டு சுமத்துவது ஒரு முக்கியக் காரணம். தவறு செய்வது மனித இயல்பு. அதற்காக துணை மீது கடுமையாக குற்றஞ்சாட்டி தண்டிக்க முனைவது, பெரிய அளவில் சிக்கல்களுக்கு வழி வகுக்கும். முக்கியப் பிரச்னைகளுக்கு பொறுப்பேற்க விரும்பாததாலும், பின்விளைவுகளை சந்திக்க நேரிடுவதாலும், துணை மீது குற்றஞ்சாட்டுவது பலரின் வழக்கமாக உள்ளது. இது, சிறிய பிரச்னையை பெரிய பிரச்னை ஆக்கத்தான் செய்யும்.

3. அவமதிப்பு: கணவனோ, மனைவியோ பல நேரங்களில் தங்கள் அதிருப்தியை, கோபத்தை துணைக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்து அவமதிப்பு வார்த்தைகளை வெளியிடுகிறார்கள். இவ்வாறு வார்த்தைகளால் அவமதிப்பதன் மூலம் துணையின் நம்பிக்கையையும், அவர்களின் சுயமரியாதையையும் தாக்குவது மிகவும் தீங்கு விளைவிக்கும். மாறாக, தம்முடைய தேவைகளையும் உணர்வுகளையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். உங்கள் துணையின் கருத்துக்களை ஒதுக்கும்போது, அவர்களை காயப்படுத்துகிறீர்கள். இதை உணர்ந்து செயல்படுவது முக்கியம்.

4. இணக்கம் தவிர்ப்பு: எந்த சூழ்நிலையிலும் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான பேச்சை தவிர்க்கக் கூடாது. அவ்வாறு தவிர்ப்பது, முரண்பாடுகளை மேலும் மேலும் வளர்க்கவே செய்யும். ஒரு சிறு விதையாக மனதில் விழும் வருத்தம், துளிர் விட்டு வளர அனுமதிக்கக் கூடாது. ‘அவர் பேசட்டும்’ என்று காத்திராமல், தாமே முன்வந்து பேசுவதும், இணக்கத்தை வளர்க்க முயல்வதும் நல்ல விஷயங்கள். கணவன் - மனைவி தங்கள் இடையே 'ஈகோ' பார்க்கத் தேவையில்லை. அதனால் தீமையே அன்றி, நன்மை விளைவதில்லை.

5. வாக்குவாதம்: குடும்பத்தில் இயல்பாக சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்பட்டு விடும். அப்போது வார்த்தைகளை வளர்த்துக்கொண்டே போகாமல், பதிலுக்குப் பதில் பேசாமல் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். பின்னர் சூழ்நிலை தணிந்த பிறகு அதுபற்றி பேசிக்கொள்ளலாம்.

இப்படித் தவிர்க்கவேண்டிய நேரத்தில் பேச்சை தவிர்ப்பதும், பேசவேண்டிய நேரத்தில் தன்மையோடு பேசுவதும், இல்லறத் தேரை இனிமையாக ஓடச் செய்யும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT