Do you know what not to say when seeing patients?
Do you know what not to say when seeing patients? https://tamil.oneindia.com
வீடு / குடும்பம்

நோயாளிகளைப் பார்க்கும்போது சொல்லக்கூடாத விஷயங்கள் எவை தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

ருவர் நோயுற்று இருக்கும்போது அவரது உடலும் மனமும் தளர்ந்திருக்கும். அந்த நேரத்தில் அவரைப் பார்க்கச் செல்லும்போது அவர் மனம் ஆறுதல் அடையவும், நோயிலிருந்து சீக்கிரமே மீண்டு வரவும், மன உறுதியளிக்கவும் ஆறுதலாக சில வார்த்தைகள் சொல்வது வழக்கம். ஆனால், எவற்றை சொல்ல வேண்டும், எந்த விஷயங்களை சொல்ல கூடாது என்கிற ஒரு வரைமுறை இருக்கிறது. அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?: இந்தக் கேள்வியை நிறைய நோயாளிகள் வெறுக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. ஏனென்றால், அவர்கள் முடியாமல் படுக்கையில் இருக்கும்போது தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று தன்னுடைய தேவைகளை சொல்ல கூச்சப்படுவார்கள். அதனால் இந்தக் கேள்வியை அவர்களிடம் கேட்காமல் உண்மையாகவே அவர்கள் மேல் அக்கறை இருந்தால் அதைச் செயலாக செய்து விடுவது உத்தமம். அவர்களுக்கு வேண்டிய காய்கறி, பழங்கள் வாங்கித் தரலாம். வீட்டு சமையலறையில் பாத்திரங்கள் இருந்தால் கிளீன் செய்து வைக்கலாம். பிரிட்ஜை கிளீன் செய்து வைக்கலாம். அவர்கள் படிப்பதற்கு அருகில் உள்ள லைப்ரரியில் சென்று புத்தகங்களை மாற்றிக் கொடுக்கலாம். இதுபோன்ற தேவையறிந்து உதவுவது நலம்.

2. உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்: நீங்கள் விரைவில் உடல் நலம் தேறி வர வேண்டும் என்று நான் மனதார பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்கிற வாக்கியத்தையும் நிறைய நோயாளிகள் விரும்புவதில்லை. ஒருவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள்தான் அவர்களைப் பற்றி தன்னுடைய பிரார்த்தனையில் நினைவு வைத்து அவர்களுக்காக வேண்டிக் கொள்வார்கள். எனவே, அவர்கள் இந்த வாக்கியத்தை சொல்லும்போது நோயாளிகள் சந்தோஷப்படுவார்கள். அவ்வளவாக நெருக்கம் இல்லாத தூரத்து உறவினர்களோ அல்லது நண்பர்களோ இதைச் சொல்ல வேண்டியது இல்லை. வெறும் சம்பிரதாயத்திற்காக சொல்லப்படும் வார்த்தைகள். பிரார்த்தனை என்பது உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து வரக்கூடியது. இது வெறும் வார்த்தைகளில் மட்டும் வந்து உபயோகமில்லை.

3 . தேவையில்லாத மருத்துவ குறிப்புகளை கூறுவது: தற்போது நிறைய பேர் வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் படித்தவற்றை வைத்து நடமாடும் டாக்டர்களாக மாறிவிட்டார்கள். தங்களுக்கு தெரிந்த அரைகுறை மருத்துவ அறிவை வைத்து செல்லுமிடமெல்லாம் அதை தூவிக் கொண்டு செல்கிறார்கள். இதை நிறைய நோயாளிகள் வெறுக்கக்கூடும். எனவே, இதைத் தவிர்க்க வேண்டும்.

4. பார்க்க ரொம்ப தெம்பா இருக்கீங்க: ஒரு இதய நோயாளியிடமோ அல்லது சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து முடித்த நபரிடமோ இதுபோன்ற சொற்கள் மனதை காயப்படுத்தும். ஏற்கெனவே அவர்கள் அறுவை சிகிச்சையை மிகுந்த பயத்தோடு மேற்கொண்டு இருப்பார்கள். நம்பிக்கைக்கும் பயத்துக்கும் இடையே அவர்கள் மனது இருக்கும். மேம்போக்காக தெம்பா இருக்கிறீர்கள் என்ற வார்த்தை அவர்களை காயப்படுத்தவே செய்யும். எனவே, இதை தவிர்ப்பது நலம்.

5. எனக்கு தெரிஞ்சவருக்கு இப்படித்தான் ஆச்சு: 'உங்களுக்காவது பரவாயில்லை, 60 வயசுக்கு மேல இருதய அறுவை சிகிச்சை நடந்து இருக்கு. எனக்கு தெரிஞ்ச சொந்தக்கார பையனுக்கு 30 வயதிலேயே ஹார்ட் சர்ஜரி நடந்தது என்று சொல்லி அவர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச நம்பிக்கையும் தகர்க்க வேண்டாம்.

நோயாளிகளிடம் எப்படி பேசுவது?

1. நகைச்சுவை உணர்வோடு பேச வேண்டும். அவர்கள் மனம் மகிழும்படி மெல்லிய நகைச்சுவை இழையோட ஏதாவது ஜோக் சொல்லி சிரிக்க வைக்கலாம். அது சம்பந்தப்பட்ட நபரை பற்றியதாக இல்லாமல் பொதுவான ஒரு ஜோக்காக இருக்க வேண்டும். அதுவும் மென்மையானதாக இருக்க வேண்டும்.

2. அவர்கள் உடம்பைப் பற்றி அதிகம் விசாரிக்காமல், இனிமேல் அவர்கள் செய்யக்கூடிய வேலை ஏதாவது இருந்தால் அதைப் பற்றி பேசலாம். பையனுக்கு கல்யாணம் வைத்திருந்தால் அந்த வேலைகள் எப்படி இருக்கிறது என்று விசாரிக்கலாம். எதிர்காலத்தில் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிய நம்பிக்கையும் கவனத்தையும் தரும். உற்சாகமாக நோயாளிகள் உங்களிடம் பேசுவார்கள்.

3. வளவளவென பேசி அறுக்காமல் சுருக்கமாக இனிமையாக பேசிவிட்டு விடைபெறுவது நலம்.

4. எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். இந்த வாக்கியத்தை வாயால் சொல்வதை விட, உங்கள் கண்களிலும் செய்கையிலும் காண்பிப்பது ரொம்ப நல்லது. நிறைய பழங்களும் ஹார்லிக்ஸ் பாட்டிலும் வாங்கிக் கொண்டு போய்விட்டு ஒன்றுமே பேசாமல் மௌனமாக நின்று விட்டு வருவதை விட, 'நீங்க ரொம்ப நல்ல மனிதர். எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்' என்று புன்னகை முகத்துடன் சொல்வது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும்.

பருவநிலை மாற்றங்களில் இருந்து நம்மைப் பாதுகாத்து கொள்வது எப்படி?

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

SCROLL FOR NEXT