தென்கொரியாவில் உள்ள இளம் பெண்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் 4B Movement ஆகும். இதற்கான அர்த்தம், ஆண்களுடனான டேட்டிங் வேண்டாம், திருமண பந்தம் வேண்டாம், ஆண்களுடனான உறவு வேண்டாம், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்பதேயாகும். இது தென்கொரியாவில் மட்டுமில்லாமல் அமெரிக்காவிலும் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கு பிறகு பிரபலமாகி வருகிறது. இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தென்கொரியாவில் காட்டுத்தீப் போல பரவிய 4B Movement என்பது பெண்களால், ‘ஆண்கள் தங்கள் வாழ்க்கைக்கு வேண்டாம்’ என்று நிராகரிக்கும் ஒரு பெண்ணாதிக்க இயக்கமாகும். சமூகத்தால் சொல்லப்படும் காதல், டேட்டிங், திருமணம், குழந்தை ஆகிய எதிர்பாலினத்தின் உறவை முழுமையாக நிராகரிப்பது. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு பிறகு இந்த 4B Movement அங்கேயும் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது.
தென்கொரிய பெண்கள் இதை ‘4B’ என்கிறார்கள். ‘B’ என்பதற்கான அர்த்தம் ‘நோ’வாகும். Bihon என்றால் திருமணம் வேண்டாம், Bichulsan என்றால் குழந்தை வேண்டாம், Biyeonae என்றால் டேட்டிங் வேண்டாம், Bisekseu என்றால் உடலுறவு வேண்டாம் என்று பொருள். இந்த 4B Movement தென்கொரியாவில் 2018ல் ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கொரிய பெண்கள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ விருப்பப்படுகிறார்கள். பாரம்பரியமான திருமண பந்தம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் பாலியல் கொடுமைகள், கலாசார அழுத்தம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இந்த இயக்கம் உருவாகியுள்ளது. தென்கொரிய நாடு பாலின சமத்துவமற்ற ஆணாதிக்க சமூகமாகவே உள்ளது. பெண்களை விட ஆண்களுக்கான சம்பளம் 31.2 சதவீதம் அதிகமாகத் தரப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், தென்கொரியர்கள் குடும்பம் என்று வரும் போது இன்னும் பழைமைவாதிகளாகவே உள்ளனர். பெண்களுக்கு வீட்டு வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு, வீட்டில் உள்ள வயதானவர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை எல்லாம் பெண்கள் தலையிலேயே விழுகிறது. அது மட்டுமில்லாமல், வாழ்வாதாரத்தின் காரணமாக பெண்களும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், இரட்டிப்பு பொறுப்பை பெண்கள் சுமக்க வேண்டியுள்ளது.
தென்கொரியாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாகப் புள்ளி விவரம் சொல்கிறது. 2023ல் தென்கொரியாவில் பிறப்பு விகிதம் 8 சதவீதம் குறைந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இது தென்கொரியாவில் தேசிய அவசர நிலையாகவே கருதப்படுகிறது.
தென்கொரியா, அமெரிக்காவை தொடர்ந்து இந்த 4B Movement உலகின் பல நாடுகளில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, இந்தியப் பெண்களும் இந்த இயக்கத்தை கையில் எடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை மறுக்க முடியாது.