நிலம் அல்லது வீடு வாங்கி பதிவு செய்யும்போது பட்டா, சிட்டா போன்ற வார்த்தைகளை அதிகம் கேள்விப்பட்டிருப்போம். பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமையை நிரூபிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சட்ட ஆவணமாகும். சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வருவாய்த்துறை சான்றிதழ். நில உரிமையாளருக்கும் அரசுக்கும் அல்லது பிற நில உரிமையாளருக்கும் இடையே ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் பட்டா ஆவணம் முக்கியமானது. இது நில உரிமைக்கான உறுதியான சான்றாகும். இதன் மூலம், உங்கள் சொத்தை அரசு வாங்கினால் அதற்கான இழப்பீடை பெறலாம்.
சிட்டா: இது குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விபரங்கள் கொண்ட வருவாய் துறை ஆவணமாகும். குறிப்பிட்ட நிலம் அமைந்திருக்கும் மாவட்டம், வட்டம், கிராமம், பட்டா வகை, உரிமையாளர், நிலம் நஞ்சையா புஞ்சையா, பயன்பாட்டில் உள்ளதா போன்ற அனைத்து விவரங்களும் அடங்கியது.
குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்திற்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது குத்தகை எனப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பட்டா வகைகள்: காலி மனைகள், கட்டடங்கள் உள்ள நிலங்களுக்கு பட்டா கட்டாயமாகும். இது சட்டபூர்வ சொத்துரிமையை உறுதிப்படுத்தும் சிறந்த சட்ட ஆவணமாகும்.
நத்தம் பட்டா: வருவாய் கிராமத்தில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசால் நத்தம் என வகைப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் பட்டா இது.
2சி பட்டா: இது அரசின் புறம்போக்கு நிலத்தில் மரங்களை வளர்க்க வழங்கப்படும் பட்டா.
நிபந்தனை பட்டா: அரசு, தனிநபர் அல்லது சமூக ரீதியான குழுக்களுக்கு இலவச பட்டா வழங்கும்பொழுது குறிப்பிட்ட கால வரையறை வைத்து பட்டாவில் நிபந்தனை விதித்து கொடுக்கப்படுவது. அந்தக் கால வரையறை முடியும் வரை உங்களின் பட்டா இடத்தை அல்லது வீட்டை விற்க முடியாது. இதுவே கண்டிஷன் பட்டாவாகும்.
பி மெமோ பட்டா: பி மெமோ பட்டா என்பது ஊரின் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கு வழங்கப்படுவது அது பி மெமோ ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
டி.கே.டி பட்டா: டி.கே.டி பட்டா என்பது நிலமில்லா மலைவாழ் மக்களுக்கு அரசால் வழங்கப்படுவது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் டி.கே.டி பட்டாக்கள் அதிகம். இங்கு நிலங்கள் வாங்கும்போது மிகவும் கவனமாக லீகல் அட்வைசரிடம் கருத்து கேட்டு வாங்குவது நல்லது.
நில ஒப்படைப்பு பட்டா: முன்னாள் ராணுவத்தினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஏழைகள் போன்றோருக்கு அரசு இலவச நிலம் ஒதுக்கீடு செய்வதை இது குறிக்கிறது. நிரந்தர மற்றும் தற்காலிக குத்தகைக்கு பட்டா வழங்கப்படுகிறது.
நிரந்தர குத்தகைக்கு கொடுக்கப்பட்ட பட்டா: விவசாய நிலம் இல்லாதவர்களுக்கு விவசாய நோக்கங்களுக்காக பட்டா வழங்கப்படுகிறது. வீடு கட்டுவதற்கு தனி நபர்களுக்கு குடியிருப்பு நோக்கங்களுக்காக பட்டா வழங்கப்படுகிறது. ஆனால், வீடு கட்டுவதற்கான கால அவகாசமும் குறிப்பிடப்பட்டு அதற்குள் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறது. ஒதுக்கப்படும் நிலத்தின் அளவு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அடுத்ததாக, கைவினைஞர்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது. அவர்கள் நிலத்தின் மண்ணை மண்பாண்டங்கள் செய்யப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
தற்காலிக குத்தகைக்கு பட்டா: குளம் கட்டுவதற்கும், காடு வளர்ப்பதற்கும் மக்களுக்கு வழங்கப்படும் இந்த பட்டா குத்தகைக்கு குறுகிய காலத்திற்கு வழங்கப்படுகிறது.