பீஷ்மர் அம்புப் படுக்கை https://m.facebook.com
வீடு / குடும்பம்

முன்பின் தெரியாதவர் கொடுக்கும் உணவை ஏன் உண்ணக்கூடாது தெரியுமா?

க.பிரவீன்குமார்

காபாரதத்தில் அறம் உடைய கதாபாத்திரங்கள் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கர்ணன், பீஷ்மர், தருமர் போன்றோர்தான். இதில் பீஷ்மரை அர்ஜுனன் தனது அம்புகளால் வீழ்த்திய தருணத்தில் அவர் இறக்காமல் உத்தராயணத்தை நோக்கி அம்பு படுக்கையில் கிடந்தார். அந்தத் தருணத்தில் ஸ்ரீகிருஷ்ணர், பாண்டவர்களையும் பாஞ்சாலியும் நோக்கி, ‘பீஷ்மரிடம் சென்று அற உபதேசங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

இதைக்கேட்ட பாஞ்சாலி புன்முறுவலுடன், ‘நான் அன்று சபையில் என் துகிலை இழந்தபோது, துரியோதனனுக்கு எந்த ஒரு அற உரையும் கொடுக்காத பீஷ்மர், இறக்கும் தருவாயில் அம்புப் படுக்கையில் என்ன அறிவுரை கூறிவிடப் போகிறார்’ என்றாள். ஸ்ரீகிருஷ்ணர், ‘உனது கேள்விக்கான விளக்கத்தை நீயே சென்று பீஷ்மரிடமே கேள்’ என்று அனுப்பினார். பீஷ்மரும், ‘நான் அன்று துரியோதனன் இட்ட உணவை உண்டதால் உண்டான இரத்தம் எனது உடலில் ஓடியதால் அவனது உணர்வே எனக்கும் வந்து விட்டது. அதனால், நான் அன்று சபையில் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்து விட்டேன்’ என்றார்.

இதனை நம்பாமல் பார்த்த பாஞ்சாலியை நோக்கி பீஷ்மர் ஒரு கதையைக் கூறினார். “முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் கணவன் மனைவி இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு மிகுந்தவராகவும், விருந்தினரை மதிக்கும் பண்புடையவராகவும் இருந்தனர். இவர்களின் வாழ்க்கை முறையைப் பார்த்த ஒரு துறவி, அவர்கள் இல்லத்தில் சென்று உணவு அருந்த வேண்டும் என்று விரும்பினார். அவர்கள் இல்லத்திற்கு அந்தத் துறவி சென்றதும், ‘இத்தனை பெரிய துறவி நமது இல்லத்திற்கு வந்திருக்கிறார்’ என்ற பெரு மகிழ்ச்சியில் இருவரும் இருந்தனர்.

அவருக்கு விருந்தளிக்க உணவு சமைக்கலாம் என்று சென்றபோது, அந்த மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. இதை தனது கணவனிடம் கூறுகிறாள். ‘மாதவிடாய் காலத்தில் முனிவருக்கு உணவு சமைத்தால் அது சுத்தமாக இருக்காது’ என்று எண்ணி மன வருத்தத்துடன் இருந்தாள். கணவன் இதற்கு ஒரு மாற்று வழி சொன்னான். பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைத்து துறவிக்குச் சமைக்கும்படி கேட்டுக் கொண்டான். அவளும் ஒப்புக் கொண்டு உணவை சமைத்து அதை துறவிக்கும் பரிமாறினாள். துறவியும் வயிறார உணவை உண்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டுச் செல்லும்பொழுது அங்கிருந்த வெள்ளிப் பாத்திரத்தை தனது ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்று விட்டார்.

ஆசிரமம் சென்றதும்தான் துறவிக்கு தன் மேலேயே சந்தேகம் ஏற்பட்டது. ‘நான் ஒரு முற்றும் துறந்த துறவி. எனக்கு எப்படி இந்த வெள்ளி பாத்திரத்தின் மீது ஆசை ஏற்பட்டது?’ என்று குழம்பிக்கொண்டிருந்தார். அந்த வெள்ளி பாத்திரத்தை வைத்துக் கொண்டு அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. அதனால், தன் மீது உள்ள தவற்றை அந்தத் தம்பதியரிடம் சென்று சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.

அதற்கு அந்தக் கணவன், ‘இதற்குக் காரணம் நீங்கள் அல்ல முனிவரே. நாங்கள் அழைத்த அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்தான். அவளுக்கு மதிப்புமிக்க பொருட்களைப் பார்த்தால் திருடும் பழக்கம் உள்ளது. உங்களுக்கு உணவும் சமைக்கும் வேளையில் எனது மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டதால், நாங்கள் அந்த பக்கத்து வீட்டு பெண்ணை அழைத்தோம். அவள் சமைத்த உணவினை உண்டதால் உங்களுக்கும் அவளது குணம் தொற்றிக் கொண்டது” என்றான்.

இதைக் கேட்ட முனிவர் ஆச்சரியத்துடன், ‘மாதவிடாய் காலத்தில் யாரும் சமைக்கக் கூடாது என்று யாருக்கும் சொல்லவில்லையே. இது பெண்களின் உடலில் நடக்கும் இயல்பான ஒரு செயல். இதற்காக ஒரு பெண் அசுத்தமானவள் என்று ஒருபோதும் எண்ணத் தேவையில்லை. நீங்கள் எப்பொழுதும் போல் உங்கள் மனத் தூய்மையினால் உணவைச் சமைத்துப் பகிருங்கள்’ என்று கூறினார்.

ஒருவர் அளிக்கும் உணவினால் அதை உண்பவருடைய குணம் மாற்றம் அடையும் என்பதை அத்தம்பதியினர் மூலம் அந்த முனிவர் புரிந்து கொண்டார். பீஷ்மர் இந்தக் கதையை பாஞ்சாலிக்குக் கூற, பாஞ்சாலியும் இதை உன்னிப்பாகக் கவனித்தாள். ‘இதனால்தான் அன்று என்னால் துரியோதனனுக்கு அறத்தை எடுத்துக் கூற முடியவில்லை. ஆனால், இன்று அர்ஜுனனின் வில்லால் அவன் அளித்த உணவினால் உண்டான எனது உடலில் ஓடிய உதிரம் எல்லாம் வெளியேறி விட்டது’ என்று பாஞ்சாலியின் ஐயத்தை நீக்கியதோடு, வாழ்க்கை அறத்தையும் உபதேசித்தார்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT