ஒரு மனிதனுக்கு அறுபது வயதானதும் இயற்கையாகவே தான் வயதானவன் என்ற நினைப்பு மனதில் தோன்றத் தொடங்கும். அறுபது வயது என்பது ஓய்வெடுக்கும் நேரம் வந்து விட்டது என்பதை ஞாபகப்படுத்தும் ஒரு வயது. ஆனால், அது முற்றிலும் உண்மையில்லை. அறுபது என்பது ஒரு எண். அவ்வளவுதான். அறுபது வயதானவர்கள் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
அறுபது வயதைக் கடந்ததும் இயல்பாகவே மனோபலம் சற்று குறையத் தொடங்கும். உடல் பலமும் நிச்சயம் குறையத் தொடங்கும். ஆனால், இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை நினைத்து கவலைப்பட்டால் அது நிச்சயம் கெடுதலையே விளைவிக்கும்.
நேர்மறையாக பேசுபவர்களிடம் மட்டுமே நட்பு வைத்துக் கொள்ளுங்கள். நேர்மறைப் பேச்சுகள் மற்றும் நேர்மறை சிந்தனைகள் மனோபலத்தை அதிகரிக்கும். மனதிற்குள் புத்துணர்ச்சியும் ஏற்படும். தேவையில்லாமல் பிறரைப் பற்றி பேசுவதைத் தவிர்த்து விடுங்கள். உங்களைச் சுற்றி நிகழும் நல்ல விஷயங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
யாராவது உங்களைப் பார்த்து புன்னகைத்தால் நீங்களும் ஒரு புன்னகை செய்யுங்கள். முடிந்தால் ஒரு ‘ஹலோ’ சொல்லுங்கள். இது உங்கள் மனதை லேசாக்கும். வெளிநாடுகளில் இந்த வழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள். தெரிந்தவர்களாக இருந்தால் உள்ளன்போடு பேசி அவர்களிடம் நலம் விசாரியுங்கள்.
வழக்கமாக செய்யும் மருத்துவப் பரிசோதனைகளை உரிய நேரத்தில் செய்து கொள்ளுங்கள். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தவிர்க்கக் கூடாது. தினந்தோறும் மாத்திரைகளை சாப்பிடுபவராக இருந்தால் சரியாக அவற்றை சாப்பிட வேண்டும். வயது மூப்பின் காரணமாக ஏற்படும் மறதியில் பலர் மாத்திரைகளை சாப்பிட மறந்து விடுவதும் மாற்றி மாற்றி சாப்பிடுவதும் அதனால் மோசமான விளைவுகளை சந்திப்பதும் வழக்கமான ஒன்றுதான்.
முடிந்த வரை இரவு நேரங்களில் ஒன்பது மணிக்கு தூங்கச் செல்லுங்கள். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். மாதத்திற்கு ஒரு முறை ஆசைப்பட்ட உணவு வகைகளைச் சாப்பிடலாம். அப்படி சாப்பிட நேரும்பட்சத்தில் வழக்கத்தைவிட சற்று அதிக நேரம் நடைபயிற்சி செய்யுங்கள்.
தேவைப்படும் போது மட்டுமே பயணங்களை மேற்கொள்ளுங்கள். தேவையின்றி நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளாதீர்கள். தனிமையில் இருப்பதை கட்டாயம் தவிர்க்கப் பாருங்கள். முன்பின் தெரியாதவர்களிடம் உங்கள் குடும்ப விஷயங்களைப் பற்றிப் பேசாதீர்கள். உங்கள் சேமிப்பு பற்றிய விவரங்களையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியாது அல்லவா?
கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யாதீர்கள். எளிமையான பயிற்சிகளான நடைபயிற்சி, எளிமையான சிறுசிறு உடற்பயிற்சிகள் முதலானவற்றைச் செய்யலாம். ஓடுவதும் ஜாகிங் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. பளு தூக்குதல், ஸ்கிப்பிங் செய்தல் முதலான பயிற்சிகளையும் தவிர்ப்பது நல்லது.
வாகனங்களை ஓட்டும் போது சீட்பெல்ட்டை கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள். இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டுவதையும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தனியே நடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும். உடன் நல்ல நண்பர் ஒருவரை அழைத்துச் செல்லுங்கள்.
ஆபத்து நிறைந்த சேமிப்புகளைத் (High-risk financial schemes) தவிர்க்க வேண்டும். கூடுமானவரை ஆன்லைன் பணப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பது நல்லது. வங்கிகளுக்குச் சென்று பெரிய தொகைகளை எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்த வரை Cheque, Demand Draft, NEFT, Internet Banking இவற்றின் மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள். இது மிகவும் பாதுகாப்பனதும் கூட.
எது நடந்தாலும் அது நன்மைக்கே என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நமக்கும் பிறருக்கும் நல்லதே நடக்கும் என்று நம்புங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.