வீடு / குடும்பம்

பண்டிகை, விசேஷங்களின்போது பெரியவர்கள் ஆசிர்வாதம் அவசியம்: ஏன் தெரியுமா?

பொ.பாலாஜிகணேஷ்

தீபாவளி பண்டிகையை வீட்டில் எவ்வளவு சிறப்பாகக் கொண்டாடினாலும், பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றால்தான் அது முழுமை அடையும். பண்டிகை நாட்கள், பிறந்த நாள், திருமண நாள் என மனம் மகிழ்ச்சியடையும் நாட்களில் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது அவசியம். ஏன் இதுபோன்ற நாட்களில் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்பதை சொல்கிறது இந்தப் பதிவு.

நம்மை விட வயதில் மூத்தவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவது நமது பாரம்பரியங்களுள் ஒன்றாக உள்ளது. மேலை நாடுகளில் இந்த முறைக்குப் பெரிதாக வரவேற்பு இல்லை. காரணம், அவர்கள் இதனை தங்களின் சுய கெளரவத்துடன் அடையாளப்படுத்தி பார்ப்பதாலும், இது சுயமரியாதை இல்லாத விஷயம் என ஒருசிலர் கருதுவதாலும் மேலை நாடுகளில் வயதில் மூத்தவர்களிடம் ஆசி பெறுவது வழக்கத்தில் இல்லை.

ஆனால், நம் நாட்டில் அனைத்துப் பாரம்பரிய செயல்களுக்குப் பின்னும் ஒரு காரண, காரியங்கள் உண்டு. அதில் அறிவியல் மற்றும் ஆன்மிக தர்பரியமும் அடங்கி இருக்கிறது. ஒரு மனிதனின் மொத்த எடையையும் தாங்கி நிற்கிற பாதத்தில் ஒருவர் பணிகிறபோது பணிபவரின் அகங்காரம் அங்கே அழிகிறது. அவருடைய, ‘நான்’ எனும் தன்மை அழிந்துபோகிறது.

ஆன்மிகத்தில் ஒருவர் உயர்வான நிலையை அடைய வேண்டுமெனில், முதலில் அழிய வேண்டியது அகங்காரம். எப்போது, ‘நான்’ என்கிற தன்மை அழிகிறதோ அங்கே முக்திக்கான முதல் படி துவங்கும். இதற்கான ஒரு செயல்முறையாக நம் முன்னோர்கள், நம்மை விட மூத்தவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும், இவ்வாறு ஒருவரை வணங்கும்போது வணங்கப்படுபவரின் வயது, ஞானம், சாதனை, அனுபவம் ஆகிய சகலவிதமான நல்லாற்றலையும் நாம் வணங்குவதாகப் பொருள்.

இப்படி அவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை, நன்றியில் அவர்கள் மனம் குளிர்ந்து எழும் நல்லாற்றலே நமக்கு ஆசியாக வந்து சேர்கிறது. அடிப்படையில் ஆசி என்பது ஒருவரின் நல்லாற்றல் நமக்கு பகிர்ந்தளிக்கப்படுவதே ஆகும். இந்த மரியாதை வயதில் மூத்தவர்கள் என்பதற்காக மட்டுமே நாம் காலில் விழுவதில்லை. ஆன்மிக குருமார்கள், ஆசிரியர்கள், நம் முன்னோர்கள், பெற்றோர்கள், துறைசார் சான்றோர்களின் காலில் விழுவதும் வழக்கத்தில் உள்ளது.

ஆசி வாங்கும்போதும், ஆசி வழங்கும்போதும் இருவருக்கும் இடையில் ஒருவித ஆற்றல் வளையம் உருவாகிறது. குறிப்பாக, ஆசி வழங்குவோர் வாங்குவோரின் தலையில் கைவைத்து ஆசி வழங்குவது வழக்கம். இதன் பொருள் அவரிடம் இருக்கும் நல்லாற்றலை ஆசி வாங்குபவருக்கு அவர் வழங்குகிறார் என்பதே ஆகும். இதனை உளவியல் ரீதியாக ஆராய்ந்தால் ஒருவருக்கு மரியாதை செய்வது, நன்றியை வெளிப்படுத்துவது நல்லறமாகும். இந்த நல்லறத்தை ஒருவர் பயிற்சி செய்ய நமக்கு மூத்தோரிடம் ஆசி பெறுவது ஒரு வகையாகும்.

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்கான காரணத்தை அறிந்துகொண்டீர்களா? அப்படியென்றால் கண்டிப்பாக வரும் தீபாவளிக்கு பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க நீங்கள் மறக்க மாட்டீர்கள்தானே!

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

SCROLL FOR NEXT