சமீபத்தில் அநேக இடங்களில் தனியாகச் செல்லும் சிறுவர்களை தெரு நாய்கள் துரத்திக் கடிக்கும் சம்பவங்களைக் கண்டும் கேட்டும் வருகிறோம். இவற்றில் செல்லமாக வளர்த்து பிறகு அவற்றை பராமரிப்பின்றி தெருவில் விட்டுவிடும் வீட்டு நாய்களும் அடங்கும் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
செல்லப் பிராணிகள் வளர்ப்பது என்பது தற்போது பிரபலமாகி வருகிறது. காரணம், உறவுகளின்றி தனித்து இருப்பவர்களுக்கு பாதுகாப்பாகவும் துணையாகவும் இந்த பிராணிகள் இருப்பதுதான். தனிமையில் இருப்பவர்களுக்கு இதனால் மன அழுத்தம் குறைகிறது என்றாலும், இதனால் விளையும் பின்விளைவுகளும் அதிகமாகவே உள்ளது.
நாய்களை வளர்ப்பவர்கள் அவற்றைக் கட்டியணைத்து முத்தமிடுவது, மடியில் வைத்துக் கொஞ்சுவது, படுக்கையில் ஒன்றாகத் தூங்குவது போன்ற செயல்களைச் செய்கின்றனர். என்னதான் செல்ல பிராணிகள் என்றாலும் அவையும் விலங்குகள்தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றினால் மனிதர்களுக்கு விலங்கியல் (Zoonotic) நோய்கள் பலவும் பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். செல்லப் பிராணிகளுக்கு அதிக இடம் தருவது ஆரோக்கியமற்ற செயலாகிறது. இதை எப்படித் தவிர்ப்பது என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
நாய்களை வளர்ப்பதற்கு முன்பு தடுப்பூசி போடுவது, குளிப்பாட்டுவது, சீர்ப்படுத்துவது, நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்வது என சுகாதாரம் மற்றும் வளர்ப்பு குறித்த பயிற்சிகளை முறையாக நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நாய்களின் வாயில் கிருமிகள் அதிகம் இருக்கும். எனவே, அதன் முத்தத்தால் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் நாய்கள் முத்தமிடுவதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக அதனுடன் கை குலுக்கி பழகலாம்.
நாய்களைக் கட்டியணைத்து தொட்டு விளையாடுவதை குறைத்து, அதற்கு ஒரு எல்லையை வைத்திருங்கள். இதனால் அவையும் தனது எல்லை இதுதான் என உணர்ந்து நம்மிடம் இருந்து விலகி நிற்கும்.
ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் கண்டிப்பாக நாய்களின் முடி உதிர்தலில் கவனமாக இருக்க வேண்டும்.
நாய்களுக்கு குடல் புழுக்கள் அதிகமாக இருக்கும். அதனால் அவற்றோடு பழகும் நமக்கும் இந்தத் தாக்கத்துடன் சருமம் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கிறது கால்நடை மருத்துவம். நாய்கள் போலவே, பூனை, குதிரை, எலி, பன்றி போன்ற பல விலங்குகளின் சிறுநீர் மற்றும் வாயில் வழியும் உமிழ்நீரால் ‘லெப்டோஸ்பீரோசிஸ்’ என்ற பாக்டீரியா பரவும் அபாயம் உண்டு என்றும் இதைத் தடுக்க தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது அவசியம் என்றும் எச்சரிக்கின்றனர் கால்நடை மருத்துவர்கள்.
செல்லப் பிராணிகளுக்கு தனி இடம், படுக்கை, சாப்பிடத் தட்டு போன்றவற்றை ஏற்படுத்தி, அவை அதை மட்டும் உபயோகிக்கப் பழக்க வேண்டும். குறிப்பாக, நாய்களுக்கென இட வசதியும் அவற்றிற்கு உணவளித்து பராமரிக்கத் தேவையான பண வசதியும் அவசியம் தேவை. இவை இல்லாமல் ஆசைக்கு வாங்கிவிட்டு, பிறகு பராமரிக்க முடியாமல் நாமும் அல்லல்பட்டு அவற்றையும் நடுத்தெருவில் விட வேண்டாம். எச்சரிக்கையோடும் ஒரு எல்லை வகுத்துப் பழகினால் அனைத்து வாயில்லா ஜீவன்களும் கூட நமக்கு நண்பர்களே!