கோல்டன் ரெட்ரீவர் நாய்க்குட்டிகள் விசுவாசத்திற்கும் மென்மையான தன்மைக்கும் மனிதர்களிடம் பாசமாக பழகுவதற்கும் பெயர் பெற்றவை. கோல்டன் ரெட்ரீவரின் ஆளுமைத்தன்மை கொண்ட மனிதர்களின் இயல்புகள் எப்படி இருக்கும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கடினமான உழைப்பாளிகள்: மிகவும் கடினமான உழைப்பாளிகள் தங்களது லட்சியத்திற்காக நேரம், காலம் பார்க்காமல் உழைப்பார்கள். அதேபோல தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு மிகவும் நேர்மையாக நடந்து கொள்வார்கள். தலைமை அதிகாரிகளிடம் மிகவும் பணிவாகவும் அவர்கள் சொல்லக்கூடிய வேலைகளை உடனே செய்து முடிக்கும் தன்மையுடனும் இருப்பார்கள். உற்சாகமாக எப்போதும் வேலை செய்வார்கள்.
அனுசரிக்கும் இயல்பு: எல்லாவிதமான மனிதர்களையும், எந்தவிதமான சூழ்நிலையையும் அனுசரித்து செல்லக்கூடியவர்கள். அதில் உள்ள செளகரியக் குறைகளை பொருட்படுத்தாமல் நிறைவான மனத்துடன் இருப்பார்கள். பிறரிடம் உள்ள குறைகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால் அனைவருக்கும் பிடித்தமானவர்கள்.
இணக்கமானவர்கள்: கோல்டன் ரெட்ரீவர் நாய்களைப் போல இந்த வகையான மனிதர்கள் மிகவும் இணக்கமானவர்கள். எளிதில் அணுகக்கூடியவர்கள். பிறரிடம் மிக எளிதில் பழகி விடுவார்கள். நல்ல சமூகத் தொடர்புகளை உருவாக்கி விடுவார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிகம்.
நம்பகமானவர்கள்: மிகவும் நம்பகமானவர்கள். தனது குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மிகவும் ஆதரவோடு நடந்து கொள்வார்கள். அன்புக்குரியவர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். தனிப்பட்ட வாழ்விலும் தொழில் முறை உறவுகளிலும் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார்கள். தனது தேவைகளை விட பிறரின் தேவைகளை முக்கியமாகக் கருதுவார்கள்.பிறருக்கு தங்களது அன்பையும், ஆறுதலையும் அளிக்க எப்போதும் தயாராக இருப்பார்கள். இவர்களது மென்மையான அணுகுமுறையும் அக்கறையும் பிறரை எப்போதும் மகிழ்ச்சிப்படுத்தும்.
கேளிக்கை விரும்பிகள்: இவர்கள் கேளிக்கை விரும்பிகள். விளையாட்டுத்தனமான செயல்களில் ஈடுபடுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். கூட்டத்தில் இருந்தால் இவர்களால் பிறருக்கும் மகிழ்ச்சியும் உற்சாகமும் பரவிவிடும். குடும்ப நண்பர்கள் மட்டுமல்லாமல், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டத்தில் மிக எளிதாக உற்சாகத்தை வரவழைப்பதில் வல்லவர்கள். கேளிக்கை விளையாட்டுகளை ஏற்பாடு செய்து அசத்தி விடுவார்கள்.
பொறுமையானவர்கள்: நிதானமும் பொறுமையும் மிக்கவர்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இடத்தில் மிகுந்த பொறுமையை கையாளக்கூடியவர்கள். அமைதியான தன்மையுடையவர்கள். மன அழுத்தமான சூழ்நிலைகளில் கூட அவர்களது நிதானம் வியக்க வைக்கும் வகையில் இருக்கும்.
அரவணைத்துச் செல்லும் இயல்பு: நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நன்கு அரவணைத்துச் செல்வார்கள். பிறரின் மேல் பச்சாதாப உணர்வை வெளிப்படுத்துவார்கள். அவர்களை புன்னகையுடன் எதிர்கொண்டு அணைத்து ஆறுதல்படுத்துவார்கள். தங்கள் குடும்ப நண்பர்கள் மற்றும் உறவினர்களை எப்போதும் கட்டியணைத்து, தோளைத் தட்டித் தந்து தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள்.
சுறுசுறுப்பு: எப்போதும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை நடத்துவார்கள். எப்போதும் உற்சாகமாக இன்முகத்துடன் பணி செய்வார்கள். இவர்கள் சோர்ந்து போய் அமர்வது அபூர்வமாகவே இருக்கும். ஒரு வேலை செய்து முடித்ததும் உடனே அடுத்த வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இவர்களைப் பொறுத்தவரை ஓய்வு என்பது சோம்பி அமர்வதல்ல. மாறாக, வேறு வேலைகளில் கவனம் செலுத்துவதாகும்.
மொத்தத்தில் கோல்டன் ரெட்ரீவரின் ஆளுமைத்தன்மை கொண்ட மனிதர்கள் எல்லோருக்கும் பிடித்தவண்ணம், பிறர் மனதைக் கவரும்படி இருப்பது அதிசயமான உண்மையாகும்.