என்ன தான் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை நோக்கிய பயணம் என்று நாம் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு மாறுதலுக்காக நாம் கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்க்க தோன்றும். அப்போது நம்மிடம் அதற்கு சம்பந்தமான விஷயங்கள் இல்லையென்றால் நம் மனம் வருந்தும், அப்படிப்பட்ட பொக்கிஷங்களை எப்படி காத்துக்கொள்ளலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
1. குடும்ப பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள்:
நம் முன்னோர்களுடன் வாழ்ந்த நாட்களில் அவர்கள் பயன்படுத்திய நகைகள், தளபாடங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற குடும்ப பொக்கிஷங்கள், அவர்கள் போன பின்னும் நம்முடன் இருக்கும் உறுதியான தொடர்புகளாகும். இந்த பொருட்கள் பெரும்பாலும் உணர்ச்சி மதிப்பைக் கொண்டுள்ளன மற்றும் நம் குடும்பத்தின் வரலாற்றைக் கூறுகின்றன. அவற்றின் தரத்தை பாதுகாக்க, நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பான, உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்கலாம். புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் சிதைவை தடுக்க அமில பாதிப்பு இல்லாத பொருட்களுக்குள் வைக்கலாம். மற்றும் இந்த பொருட்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்ய, தவறாமல் அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்கவும்.
2. பாரம்பரிய ஆடைகள் மற்றும் ஜவுளிகள்:
புடவைகள் மற்றும் எம்பிராய்டரி துணிகள் போன்ற பாரம்பரிய ஆடைகள் மற்றும் ஜவுளிகள், நமது முன்னோர்களின் கலாச்சார பாரம்பரியத்தையும் கைவினை திறனையும் பிரதிபலிக்கின்றன. ஈரப்பதம் மற்றும் பூச்சிகள் சேதத்தை தடுக்க, இந்த பொருட்களை, அமில பாதிப்பு இல்லாத இடங்களில் சேமித்து வைக்கலாம். மடிப்புகளை தடுக்க அவற்றை இறுக்கமாக மடிப்பதை தவிர்க்க வேண்டும் மற்றும் முடிந்த வரை ஆடைகளை ஹேங்கர்களைப் பயன்படுத்தி தொங்கவிடுங்கள்.
3. புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள்:
புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் நம் அறிவு மற்றும் வரலாற்றின் விலைமதிப்பற்ற ஆதாரங்கள். அவற்றைப் பாதுகாக்க, குளிர்ந்த, வறண்ட (cool, dry environment) சூழலில் வைக்கவும். முடிந்தவரை படுக்க வைத்து அடுக்குவதை தவிர்த்து நிமிர்ந்து நிலையில் புத்தகங்களை வையுங்கள். பின் சுத்தமான கைகளால் அவற்றை கையாளுங்கள் மற்றும் தேய்மானம் அதிகரிக்கும் புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்க பாருங்கள்.
4. கலாச்சார கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள்:
முன்னோர்கள் பயன்படுத்திய கருவிகள் மற்றும் இசைக்கருவிகள் போன்ற கலாச்சார கலைப்பொருட்கள் கடந்த தலைமுறைகளின் அன்றாட வாழ்க்கை மற்றும் மரபுகள் பற்றிய நுண்ணறிவை வழங்குகின்றன. தூசி மற்றும் ஒளியின் வெளிப்பாட்டைக் குறைக்கும் வகையில் இந்தப் பொருட்களை காட்சிப்படுத்தவும். அதற்கு UV-பாதுகாப்பு கண்ணாடியுடன் கூடிய காட்சி பெட்டிகளையோ பீரோக்களையோ பயன் படுத்தலாம். முன்கூட்டியே சேதத்தை தவிர்க்க, இந்த கலைப்பொருட்களை தொடர்ந்து தூசி படியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
5. வாய்வழி வரலாறுகள் மற்றும் மரபுகள்:
வாய்வழி வரலாறுகள் மற்றும் மரபுகள் நம் பாரம்பரியத்தின் எளிதில் மறக்கக்கூடாத முக்கிய அம்சங்களாகும். நம் பெரியவர்களுடன் வாழ்ந்த நாட்களில் அவர்களால் சொல்லப்பட்ட கதைகள் மற்றும் பாடல்களை சில நேரங்களில் பதிவு செய்திருப்பார்கள். அதை துல்லியமாக படிக்க அந்த கால ஆடியோ அல்லது வீடியோ பதிவுகளைப் பயன்படுத்தியிருக்கலாம். அதை இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி, நம் இளைய குடும்பத்தினரின் கைகளுக்கு கொண்டு செல்லலாம். நமக்கும் அதில் ஒரு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
6. டிஜிட்டல் நினைவுகள்:
அந்த காலத்தில் நிகழ்ந்தது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் போன்ற டிஜிட்டல் நினைவுகளைப் பாதுகாப்பதும் முக்கியமானது. கிளவுட் ஸ்டோரேஜ்(cloud storage) மற்றும் ஹார்டு டிரைவ்கள்(external hard drives) உட்பட பல இடங்களில் உங்கள் டிஜிட்டல் கோப்புகளை பதிவு செய்து கொள்ளுங்கள். முடிந்தால் இப்போதே நீங்கள் பதிவு செய்த முக்கியமான விஷயங்களை ஒரு ஆல்பம் புத்தகமாக சேமித்து வைத்து, உங்கள் குறிப்புகளை பின்னால் வரும் சந்ததியினருக்கு காட்ட இப்போதே தயார் படுத்தி கொள்ளுங்கள்.