சின்ன பிள்ளைகள் கூட, 'போர் அடிக்குது' என்கிற வார்த்தையை மிகவும் சாதாரணமாக உபயோகிக்கிறார்கள். உண்மையில் போர் அடித்தல் என்பது ஒரு சந்தோஷம் இல்லாத மனநிலையை குறிக்கிறது. விரக்தி மனப்பான்மையின் வெளிப்பாடு. இந்த நபர்களுக்கு பத்து நிமிடத்தை தள்ளுவதே ஒரு மணி நேரத்தை கடப்பது போன்ற உணர்வைத் தரும். வீடியோ கேம்சையோ, செல்போனையோ நோண்டாமல் திரைப்படத்தை பார்க்காமல் போர் அடிக்கிறது என்று சொல்லும் நபர்களின் மனதை ஆக்கப்பூர்வமான வழிகளில் திருப்பி எவ்வாறு பயனடையலாம் என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
பொதுவாக, போரடிக்கும் மனநிலையை கொண்டவர்கள் ஒரு விஷயத்திற்கு அடிமையாகி இருப்பார்கள். சூதாட்டம், செல்போனை ஓவராக உபயோகிப்பது, சாப்பிட்டுக்கொண்டே இருப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவார்கள். இவர்களுக்குப் புதுப்புது அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
இந்தத் தொழில் நுட்ப உலகில் மனித மூளை ஏகப்பட்ட தகவல்களாலும் விஷயங்களாலும் ஓவர்லோடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய விஷயங்களில் இருந்து சிறிது நேரமாவது விலகியிருத்தல் மூளைக்கு ஓய்வாக அமையும். அதேசமயம் மனதில் இருக்கும் ஸ்ட்ரெஸ்ஸையும் வெளியேற்ற உதவும். போர் அடிக்கிறது என்று சொல்பவர்கள் முதலில் சமூக வலைதளங்களில் இருந்து வெளியே வர வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரம் வரை குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்காவது நான் செல்போனை பார்க்க மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
இவர்கள் தங்கள் மனதை படைப்பாற்றலின் பக்கம் திருப்ப வேண்டும். மனதில் எழும் எண்ணங்களை கதையாகவோ கவிதையாகவோ அல்லது ஓவியமாகவோ மாற்றும்போது கற்பனை விரிந்து மனமும் சந்தோஷமடையும். அதேசமயம் மூளையும் நன்கு ரிலாக்ஸ் ஆகும்.
விஞ்ஞானிகள் பழகிப்போன, சலித்துப்போன விஷயங்களை விட்டுவிட்டு புதியவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானவைதான் தற்போதைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எல்லாம். எனவே, போர் அடிக்கும் மனநிலை கொண்டவர்கள் புதிதாக எதையாவது செய்யலாம் என்று முயற்சிக்க வேண்டும். புதுவிதமான சமையல், புது விதமான உடைகள் தைப்பது, ஒரு பிரச்னைக்கு புதுவிதமான கோணத்தில் ஆராய்ந்து தீர்வு கண்டுபிடிப்பது, புதிர் போட்டிகளில் பங்கெடுத்துக்கொள்வது போன்றவை இவர்களது மூளையை சுறுசுறுப்பாக்கும். இவர்கள் படித்த கதைகளை குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு மிகவும் சுவாரசியமாகச் சொல்லலாம். இதனால் கேட்பவர்களுக்கும் போர் அடிக்காது, சொல்பவருக்கும் போர் அடிக்காது.
பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் படிப்பில் ஆர்வமே இல்லாமல் இருந்தால் அவர்களை திட்டக்கூடாது. எனக்கு படிக்க போர் அடிக்குது என்று சொன்னால், "சரி உனக்கு படிப்பைத் தவிர வேறு எந்த விஷயங்களில் ஆர்வம் இருக்கிறது” என்று கேட்டு கண்டறிந்து அதை நோக்கி அவர்களை திசை திருப்பினால் அவர்களது எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.