Unity between couples 
வீடு / குடும்பம்

உண்மை இல்லாத தம்பதியரிடையே சுமூக மன நிலையை உருவாக்குவது எப்படி?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

திருமண உறவில் உங்கள் துணை உங்களுக்கு உண்மையாக இல்லை என்ற சந்தேகம் ஏற்பட்டால் அதை எளிதாகக் கண்டறியலாம். ஒரு குடும்பத்தில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பேசியும், கலந்தாலோசித்தும் எந்த முடிவையும் எடுத்தால் பிரச்னை என்பது தலை தூக்காது.

தம்பதியர் இருவருக்குள்ளும் ஒளிவு மறைவு என்பது இருக்கக் கூடாது. ஆனால், சிலர் தாங்கள் செய்யும் செயலையோ, எடுக்கும் முடிவையோ தனது துணைவரிடம் அல்லது துணைவியிடம் சொல்லாமல் மறைத்து விடுவதால் ஒருவருக்கு ஒருவர் சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உண்மையாக இல்லையென்றால் அது மிகுந்த மன வலியை ஏற்படுத்தும். உங்கள் துணை உங்களை ஏமாற்றினால் அவருடைய நடத்தைகளில் சில மாற்றங்களை ஈசியாக கண்டறியலாம். இதற்கு ஒன்றும் நீங்கள் துப்பறிவாளராக செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. அவரது செயல்களே அவரை வித்தியாசப்படுத்திக் காட்டும். காட்டிக்கொடுத்து விடும்.

உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் அணுகு முறையில் சில மாற்றங்கள் இருப்பதைக் காணலாம். எதிலும் ஒரு வெளிப்படை தன்மை இல்லாமல் இருப்பது தெரியும். தொலைபேசி அழைப்பு வந்தால் அல்லது மெசேஜ் எதுவும் வந்தால் உடனடியாக அவர்கள் தனி இடம் தேடிப் போவார்கள். தள்ளி சென்று பேசவும், செய்திகளை பார்க்கவும் செய்வார்கள். இப்படித் தகவல் தொடர்புகளை மறைப்பது அவர் மேல் நமக்கு சந்தேகத்தை உண்டுபண்ணும். நாம் வெளிப்படையாக யாரிடமிருந்து அழைப்பு என்று கேட்டால் தகுந்த பதிலைத் தராமல் எரிந்து விழுவார்கள் அல்லது கோபப்படுவார்கள்.

கணவன், மனைவிக்குள் ஏமாற்றுவது, ஏமாறுவது இரண்டுமே தவறுதான். சிலர் தங்கள் துணையை ஏமாற்றுகிறோம் என்ற மன உறுத்தலால் அவர்களிடம் முன்பை விட அதிக பாசம் காட்டுவார்கள். இது நமக்கு சந்தேகத்தை உண்டுபண்ணும். அதிகமாக பொய் சொல்வதும், அதைப் பற்றி கேட்டால் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிப்பதுமாக இருப்பார்கள். வழக்கமாக இருக்கும் பேச்சோ, நெருக்கமோ காட்ட மாட்டார்கள். முன்பு போல் அவர்கள் உங்களுடன் நேரத்தை செலவிடவில்லை என்றால் நிச்சயம் சந்தேகிக்க  வேண்டும். அத்துடன் அவர்களிடம் ஏன் இந்த மாற்றம் என்று விசாரித்து அதற்கு தீர்வு காண வேண்டியதும் அவசியம். தம்பதிகளுக்கு இடையே நம்பிக்கை துரோகம் என்பது கண்டிக்கத்தக்கது. உங்களால் முக்கியமான விஷயத்திற்குக் கூட அவரை எளிதில் அணுக முடியவில்லை என்றாலோ, தொடர்புகொள்ள முடியவில்லை என்றாலோ, மனம் விட்டுப் பேச இயலவில்லை என்றாலோ கண்டிப்பாக உண்மையை அறிந்து அதனை சரி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

மறைக்கப்படும் பண பரிவர்த்தனைகள், செலவுகள், கணக்குகள், அவர்களிடம் ஏற்படும் திடீர் மாற்றங்கள் ஆகியவற்றை முனைப்புடன் செயல்பட்டு கண்டறியலாம். உங்களின் துணை முன்பு போல் உங்கள் மீது அதிக அக்கறை காட்டவில்லை என்று தோன்றினால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக, நம் துணை பேசும்போது நம் கண்களைப் பார்த்து பேசாமல் இருந்தாலோ, அடிக்கடி வாக்குவாதங்கள் செய்து கொண்டிருந்தாலோ அவர் எதையோ உங்களிடமிருந்து மறைக்கிறார் என்று கொள்ளலாம்.

இதற்கெல்லாம் தீர்வு கணவன், மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து அவர்களின் விருப்பு, வெறுப்புகளை மனம் விட்டுப் பேசி, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, உண்மையாகவும் அக்கறையாகவும் நடந்து கொண்டு குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையை உருவாக்குவதுதான்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT