hypertension for children https://infinitycarehospital.com
வீடு / குடும்பம்

குழந்தைகளை(யும்) குறி வைக்கும் ஹைப்பர் டென்ஷன்!

பொ.பாலாஜிகணேஷ்

முன்பெல்லாம் பெரியவர்களுக்கான நோய்கள் என்பதாக வகைப்படுத்தப்பட்டவை, தற்போது சிறிய குழந்தைகளிடமும் சாதாரணமாக தோன்ற ஆரம்பித்துள்ளன. கெட்டுவிட்ட சுற்றுச்சூழலும், தவறான மருத்துவப் பழக்க வழக்கங்களும் மற்றும் நமது வாழ்க்கை முறையுமே இவற்றுக்கு பிரதான காரணம். அதிலும் உயர் இரத்த அழுத்தப் பிரச்னை தற்போது குழந்தைகளையும் அதிகம் வாட்டும் ஒரு நோயாக மாறிவிட்டது.

குழந்தைகளுக்கு இரத்த அழுத்த சோதனை செய்துகொள்ள வேண்டியதன் அவசியம்: பொதுவாக, பெரியவர்களுக்கு மட்டுமே, குறிப்பிட்ட கால இடைவெளியில் இரத்த அழுத்த சோதனை நடத்தப்படுகிறது. ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகள், குழந்தைகளிடம் உயர் இரத்த அழுத்த பிரச்னைகள் இருப்பதை நிரூபிக்கின்றன. எனவே, 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் இரத்த அழுத்த சோதனை நடத்தவேண்டியது அவசியமாகிறது.

குழந்தைகள் மத்தியில் எந்தளவிற்கு உயர் இரத்த அழுத்த சிக்கல்கள் உள்ளன?

இப்பிரச்னை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, 3 முதல் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடம், 3.6 சதவிகிதம் அளவிற்கு உயர் இரத்த அழுத்த பிரச்னை உள்ளது. அதேசமயம், சீனாவைப் பொறுத்தவரை, 8 முதல் 17 வயது வரையிலான பள்ளி குழந்தைகளிடம் 17.4 சதவிகிதம் அளவிற்கு உயர் இரத்த அழுத்த பிரச்னை உள்ளது.

குழந்தைகளிடம் இரத்த அழுத்த சோதனை நடத்தவில்லை என்றால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள்: உயர் இரத்த அழுத்த பிரச்னை கொண்ட 75 சதவிகிதம் குழந்தைகள், சோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே உள்ளனர். இதன் மூலம் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் இதயம் மற்றும் இரத்த நாளம் தொடர்பான நோய்களுக்கு உள்ளாகின்றனர். உயர் இரத்த அழுத்தப் பிரச்னை உள்ள ஒருவரை சர்க்கரை நோய், அதிக கொழுப்பு மற்றும் இதய நோய் ஆகியவை தாக்குவதற்கான அதிகபட்ச ஆபத்தில் இருக்கிறார்.

உயர் இரத்த அழுத்தப் பிரச்னை உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, முறையான கவனிப்பிற்கு உட்படுத்தப்படாவிட்டால், மூளை வீக்கம், குழப்பம், கோமா, தீவிர தலைவலி மற்றும் பார்வை குறைபாடு உள்ளிட்ட மோசமான நிலைகளுக்கு ஆட்படும் ஆபத்து உள்ளது. எனவே, ஆண்டிற்கு ஒரு முறையாகினும் குழந்தைகளுக்கு இரத்த அழுத்த சோதனை நடத்தப்பட வேண்டும்.

குழந்தைகளிடம் உயர் இரத்த அழுத்தப் பிரச்னை அதிகரிக்கக் காரணங்கள்: இன்றைய சமூகத்தில், குழந்தைகளின் வாழ்க்கை முறையில் பல விரும்பத்தகாத அம்சங்கள் இருப்பதே அதற்கு காரணம். உதாரணமாக, அதிகமாக தொலைக்காட்சிப் பார்த்தல், கணினி முன்பாக அதிகநேரம் செலவழித்தல், வீடியோ கேம் விளையாடுதல், ஜங்க் உணவுகளை உண்ணுதல் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் பானங்களைப் பருகுதல் உள்ளிட்ட பல பழக்க வழக்கங்களால், உயர் இரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படுகிறது. அதேசமயம், தேவைக்கும் குறைவான உடலியக்கம், தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் செய்யாமை, உடல் சார்ந்த விளையாட்டுக்களுக்கு வாய்ப்பில்லாமை உள்ளிட்ட அம்சங்கள் ஒரு குழந்தை குண்டாவதற்கு மட்டுமல்ல, அக்குழந்தை உயர் இரத்த அழுத்த பிரச்னையை எதிர்கொள்வதற்கும் காரணமாகின்றன.

குழந்தைகளின் உயர் இரத்த அழுத்த சிக்கலைத் தீர்க்க கட்டாயம் செய்ய வேண்டியது: குழந்தைகள் நல்ல சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட ஊக்கப்படுத்தப்பட வேண்டும். மேலும் ஜங்க் உணவு மற்றும் சர்க்கரை அதிகம் கலந்த பானங்களை தவிர்க்க வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளை தவறவிடாமல், சரியான நேரத்தில உண்ண வேண்டும். அதுபோல், அதிக நேரம் தொலைக்காட்சி முன்பாகவோ அல்லது கணினி முன்பாகவோ அமரக்கூடாது. தேவையான அளவிற்கு விளையாட வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், இரவில் நெடுநேரம் கண் விழிக்காமல், தினமும் தேவையான அளவு தூங்க வேண்டும்.

குழந்தைகளுக்கான நார்மல் இரத்த அழுத்தம் என்பது: பெரியவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் நார்மல் இரத்த அழுத்த அளவு 120/80 mm Hg என்பதாக இருக்கும். ஆனால், குழந்தைகளைப் பொறுத்தவரை, நார்மல் இரத்த அழுத்தம் என்பது, வயது, பாலினம் மற்றும் உயரம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும். எனவே, இதற்கென்று குறிப்பிட்ட அளவீட்டை நிர்ணயிக்க முடியாது. குழந்தையின் இரத்த அழுத்தத்தை அளவிடும் மருத்துவர், அதை reference tableக்கு பொருத்திப் பார்த்து, அது நார்மலா அல்லது அசாதாரணமானதா என்பதை நிர்ணயிக்க வேண்டும். இந்த ஒப்பீட்டின்போது, 95 சதவிகிதம் விழுக்காட்டிற்கு மேல் இருந்தால், அது உயர் இரத்த அழுத்தமாக கணக்கிடப்படும். உதாரணமாக, ஒரு 5 வயது குழந்தையின் உயரம் 95 விழுக்காட்டில் இருந்தால், 104/65 mm Hg என்பதற்கு மேலான மதிப்பு உயர் இரத்த அழுத்தமாகக் கருதப்படும்.

குழந்தைகளிடம் நிலவும் மாறுப்பட்ட இரத்த அழுத்த நிலைகள்: குழந்தைகளிடம் முதல் நிலையிலான அல்லது அவசியமான உயர் இரத்த அழுத்தம் இருக்கும். இதற்கென பின்னணி உடல் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். அதேசமயம், சிறுநீரக மற்றும் இதய நோய்களுக்கான அறிகுறியாகவும் உயர் இரத்த அழுத்தப் பிரச்னைகள் இருக்கலாம். முன்பு, குழந்தைகளிடம் இருக்கும் அனைத்து உயர் இரத்த அழுத்த பிரச்னைகளும் இரண்டாம் நிலையிலானவை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நடைபெற்றுவரும் பல ஆராய்ச்சிகளின் விளைவாக, முதல்நிலை அல்லது அவசியமான உயர் இரத்த அழுத்த பிரச்னைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய பிரச்னைகள், இதுவரை பெரியவர்களிடம் மட்டுமே இருந்தவை.

குழந்தைகளிடம் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள்: உடல் பருமன், சிறுநீரகக் கோளாறு, இதய கோளாறு, தூக்கத்தின்போதான சுவாசப் பிரச்னை உள்ளிட்டவை, குழந்தைகளுக்கு உயர் இரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள். ஒரு குழந்தையிடம் உயர் இரத்த அழுத்தப் பிரச்னை இருக்கிறதென்றால், அதற்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னை இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இரத்த அழுத்தத்தை சோதனை செய்வதற்கான உகந்த கரம் (hand): வலது கரம், இரத்த அழுத்தத்தை சோதனை செய்வதற்கான சரியான உறுப்பாகும். இடது கையில் இரத்த அழுத்தத்தை சோதனை செய்தால், இதய நோய் அறிகுறியை கண்டறிவதில் சிக்கல் ஏற்படலாம். ஏனெனில், இடது கை அழுத்தம் குறைவாக இருக்கும்.

White - Coat உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

ஒரு குழந்தைக்கு, மருத்துவமனை அல்லது மருத்துவரின் கிளீனிக் ஆகிய இடங்களில் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்து, அதேசமயம், வீட்டில் அவரின் இரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தால், அந்த நிலைக்குப் பெயர் Whit e- Coat Hypertension. இந்த நிலை, மாறுபடும் மனநிலை அழுத்தம் காரணமாக ஏற்படுவதாகும். இந்த White - Coat Hypertension என்பது தீங்கு தரும் ஒன்றல்ல. எனவே, ஒரு குழந்தை White - Coat Hypertension சிக்கலைக் கொண்டிருந்தால், அதை நினைத்து பெற்றோர் பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில், அதனால் எந்த தீங்கும் ஏற்படாது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT