எல்லா விஷயங்களுக்கும் எல்லா இடத்திலும், ‘சரி, சரி’ என்று தலையாட்டுவது சரியல்ல. சில விஷயங்களுக்கு சில இடங்களில், ‘நோ’ சொல்லித்தான் ஆக வேண்டும். பிறர் ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி எல்லாவற்றுக்கும் தலையாட்டினால் வாழ்வில் நிம்மதியோ மகிழ்ச்சியோ இருக்காது. நாம், ‘நோ’ சொல்ல வேண்டிய இடம் நம் வீடாக இருக்கலாம் அல்லது அலுவலகமாக இருக்கலாம். நெருங்கின உறவினராக, நண்பர்களாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
வீட்டில் ‘நோ’ சொல்ல வேண்டிய இடங்கள்: ஒரு வீட்டின் இல்லத்தரசி தனது குடும்பத்திற்கான எல்லா வேலைகளையும் மனமுவந்து செய்கிறார். சமையல், வீடு சுத்தம் செய்தல் துணிமணிகள் துவைத்து உலர வைத்து மடித்து வைத்தல், குழந்தைகளை கவனித்தல் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்கிறார். அவருக்கான நேரம் என்று ஒரு நாளின் ஒரு பகுதியை அவர் ஒதுக்கிக்கொண்டு தனக்குப் பிடித்த செயல்களை செய்யலாம். அது புத்தகம் படிப்பதாகட்டும், பிடித்த சீரியல் பார்ப்பது, கை வேலைகள், எழுதுவது வெளியில் செல்வது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவருக்கான நேரத்தில் தலையிட்டு ஏதாவது வேலை சொல்லும்போது, ‘நோ’ என்று மறுக்கலாம்.
முழு சமையலையும் முடித்துவிட்டு அவர் ஓய்வாக இருக்கும் சமயத்தில், ‘இன்னொரு ஐட்டம் கூடுதலாக செய்து தா’ என்று சொல்லும்போது நோ என்று மறுத்துவிட்டு, ‘நாளை செய்து தருகிறேன்’ என்று சொல்லலாம். எல்லாவற்றுக்கும் சரி சரி என்று செய்யும்போது வேலைகளின் மீதும் வீட்டு மனிதர்கள் மீதும் அவருக்கு சலிப்பும் அலுப்பும் வருவது சகஜம். அந்த நேரங்களில் நோ சொல்லத் தயங்கக் கூடாது.
பிள்ளைகள் பெற்றோரை தேவைக்கு மேல் கசக்கி பிழிந்து கொண்டு, 'இதை செய்’ என்று சொல்லும்போது நோ சொல்ல வேண்டும். 'இவ்வளவுதான் என்னால் உனக்குச் செய்ய முடியும்' என்று பெற்றோர் அவசியம் சொல்ல வேண்டும். அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை. கையில் பணம் இல்லாவிட்டால் கூட கடன் வாங்கியாவது பிள்ளைக்கு ஏதாவது பொருள் வாங்கித் தர வேண்டிய அவசியம் இல்லை. அந்த இடத்தில் நோ சொல்வது கட்டாயம் ஆகிறது. தனக்குப் பிடிக்காத கோர்ஸில் பெற்றோர் தன்னை வற்புறுத்தி சேர்க்கும்போது பிள்ளைகள் தைரியமாக நோ சொல்ல வேண்டும். பெற்றோருக்காக தலையாட்டி விட்டு பிடிக்காத கோர்சை இஷ்டம் இல்லாமல் படிப்பது விட பெற்றோரிடம் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கலாம்.
அலுவலகத்தில் நோ சொல்ல வேண்டிய இடங்கள்: உடன் பணிபுரியும் மனிதர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்வதில் தவறில்லை. அவர்களுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்யலாம் . ஆனால், அவர்களுடைய வேலையை உங்கள் தலையில் கட்டும்போது நோ என்று தைரியமாக சொல்ல வேண்டும். தனக்கான வேலையை ஒரு மனிதர் அந்த நாளில் முடிப்பது அவசியம் என்னும்போது இன்னொருவரின் வேலையும் கூடுதலாக செய்யும்போது சுமை கூடிப்போய் தனது சொந்த வேலையில் தவறுகள் நேரலாம். அந்த நேரத்தில் நோ என்று மிகுந்த அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.
அதைப்போல, எதிர்பாலினத்தவர் தேவையில்லாமல் வழிவது, அசட்டையாக பேசுவது போன்ற செயல்களை செய்யும்போது நோ சொல்லலாம். உங்களிடம் யாராவது வந்து உடன் பணிபுரியும் இன்னொரு நபரை பற்றி கிசுகிசுக்கள் வதந்திகளை பேசும்போது தயவு தாட்சண்யம் பார்க்காமல் நோ சொல்லலாம்.
சமூக வலைதளங்களில் நோ சொல்ல வேண்டிய இடங்கள்: முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர் மெசஞ்சரில் வந்து தேவையில்லாமல் குட்மார்னிங் சொல்வது, வீண் அரட்டை அடிப்பது என்று இருந்தால் தைரியமாக நோ சொல்லலாம்.
வாட்ஸ் அப்பில் நம்மிடம் நன்கு பழகிய நபர் கூட தேவையில்லாமல் நிறைய வீடியோக்களை அல்லது எக்கச்சக்கமான மெசேஜ்களை அனுப்பி வைத்து தொந்தரவு தந்தால் தைரியமாக நோ சொல்லலாம். தேவை என்றால் அவர்களை பிளாக் செய்யலாம். தவறே இல்லை. சிலர் சமூக வலைதளங்களில் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு எல்லை மீறுவது சகஜமாகிக் கொண்டு வருகிறது. அதுபோன்ற சமயங்களில் நோ சொல்வது அவசியம். நம் நேரத்தை தின்பதற்கு யாருக்கும் எந்த விதமான உரிமையும் இல்லை.