Gold and Silver 
வீடு / குடும்பம்

தங்கத்தை விட வெள்ளை தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா?

கோவீ.ராஜேந்திரன்

தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் ஆபரணங்களாகப் பயன்படுத்துவதற்கு இணையாக, தொழிற்துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் முக்கியமாக வெள்ளி அதிகளவில்  பயன்படுத்தப்படுவதால் அந்த உலோகத்துக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

கிரீஸ் மற்றும் துருக்கி நாட்டின் பகுதிகளில் கிமு 3000 ஆண்டில் வெள்ளி கிடைத்ததாக வரலாறு கூறுகிறது. பண்டைய எகிப்திய காலத்தில் வெள்ளியை 'வெள்ளை தங்கம்' என்று சொல்லி வந்தார்கள்.

வெள்ளிக்கும், தங்கத்திற்கும் பலவகைகளில் ஒற்றுமை உண்டு. இரண்டையும் பண்டைய காலத்தில் பல்வேறு நாடுகளில் நாணயங்களாக பயன்படுத்தி வந்தனர். உலோகங்கள் தோன்றிய காலத்திலிருந்து பார்க்கும்போது இரண்டும் அடுத்தடுத்து தோன்றியதாக தெரிகிறது. 

வளைவதிலும், நீள்வதிலும் தங்கத்திற்கு அடுத்த இடத்தில் வெள்ளி இருக்கிறது. ஒரு பொற்கொல்லர். 0.002 ட்ராய் அவுன்சு வெள்ளியை 120 மீட்டர்கள் நீளக்கம்பியாக இழுத்து நீட்ட முடியும். 

ஒளியை பிரதிபலிக்க செய்வதில் வெள்ளியின் சக்தி அதிகம். மிக மெல்லிய வெள்ளித் தகடு அதன் மேல் விழும் வெளிச்சத்தின் 95 சதவீதத்தை பிரதிபலிப்பு செய்ய முடியும். சூரிய சக்தியை சேமிக்கும் இடங்களில் வெள்ளி சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிராணவாயுவை இயக்கி பாக்டீரியாக்களை கொல்ல வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகளில் குடிநீரை சுத்தம் செய்வதற்கு வெள்ளி மூலாமிட்ட கார்பன் வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. தீக்காயங்களுக்கு வெள்ளி கலந்த கிரீம்களையும், எலும்பு முறிவுக்கு வெள்ளி உப்பு கலவையிலான ஒட்டுப் பொருளையும் மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

வெப்பத்தையும், மின்சாரத்தையும் கடத்துவதில் மற்ற எல்லா உலோகங்களையும் விட வெள்ளி அதிக திறன் கொண்டது. செயற்கை கிரகங்களில், நீர் மூழ்கி கப்பல்களிலும், கால்குலேட்டர்கள், காது கேட்கும் கருவிகள் போன்றவற்றில் வெள்ளி ஆக்சைடு பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. 

செயற்கை மழையை உருவாக்க வானில் தூவப்படுவது வெள்ளி அயோடைடின் படிகங்கள் தான். புகைப்படங்கள் தயாரிக்க உதவுவது வெள்ளி தான். ஒரு கிராம் வெள்ளி முலமாக 200 படங்களை உற்பத்தி செய்ய முடியும்.

உலகில் சுரங்களிலிருந்து அதிகப்படியான வெள்ளி எடுக்கப்படுவது சோவியத் ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து தான். 

பழைய வெள்ளி நாணயங்கள் மற்றும் சாமான்களை மீண்டும் உருக்கி புதுப்பிக்கப் படும் போது மிகவும் குறைந்த அளவே வீணாகும் என்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வெள்ளிகள் நமக்கு ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள்  நம்மிடமிருந்து பட்டுத்துணி மற்றும் தேயிலையை பெற்றுக் கொண்டு வழங்கியது தான்.

மற்ற உலோக பாத்திரங்களுடன் ஒப்பிடும் போது வெள்ளி நச்சுத் தன்மையற்ற மற்றும் பாதுகாப்பான உலோகமாக இருக்கிறது. வெள்ளியில் இருக்கும் வேதியியல் பொருட்கள் உணவை கெடவிடாமல் நீண்ட நேரம் பாதுகாக்கிறது.  வெள்ளிப் பாத்திரங்கள் எளிதில் துரு பிடிக்காது. அதனால் நமது உடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய நச்சுப் பொருட்களை உருவாக்காது.

உச்சத்தில் காணப்படும் தங்கத்தை தற்போதைய சூழலில் வாங்குவதை காட்டிலும், வெள்ளியை வாங்கி போடலாம் என்கிறார்கள். விலைமதிப்பற்ற உலோகங்களை வாங்க நினைப்போருக்கு வெள்ளி சிறந்த வாய்ப்பாக அமையலாம். ஆக தங்கத்தை முக்கிய முதலீடாக எண்ணுபவர்களுக்கு, வெள்ளி நிச்சயம் ஒரு மாற்று முதலீடாக இருக்கலாம் என்கிறார்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT